'தீபா கணவன் மாதவன் வந்திருக்கேன்' கடைசிநாள் பிரசாரக் காட்சிகள் ! #SpotReport #VikatanExclusive

                            தனியாக களம் கண்ட தீபா                    

சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்றிரவு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக, அரசியல்கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் என பகலிலும், இரவிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தத் தொகுதி மக்களுக்கு  நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்துள்ளது. துணை ராணுவப்படையினர் எங்கும் காணப்படவில்லை, கட்சிக் கொடிகள் இல்லை; வேட்பாளர்களை வரவேற்க மேளச் சத்தம் இல்லை; கரைவேட்டி கட்டியவர்களின் நடமாட்டம் இல்லை; வெளிமாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் அவரவர் சொந்தஊர்களுக்குத் திரும்பிச் சென்று விட்டன. தொகுதியில் இன்னமும் மிச்சமிருப்பது ஒருமாத காலமாக சுற்றித்திரிந்தவர்கள் விட்டுச் சென்ற குப்பைகளே. 'இடைத்தேர்தல் ரத்து ஆகலாம்' என்ற ஒற்றைவரித் தகவல் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பரவியது. 'தேர்தல், நடக்காது என்கிறார்களே, நிஜமாகவா?' என்ற கேள்வியை ஆர்.கே.நகர்த் தொகுதிவாசிகள், கடந்த 8-ம் தேதியில் இருந்தே விசாரிக்கத் தொடங்கியிருந்தனர்.

ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், தேர்தல் பிரசாரம் நிறைவடைய 10-ம்தேதி அதாவது திங்கட்கிழமையே இறுதிநாள் ஆகும். எனவே, அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 9-ம் தேதியன்று பிரதானக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல் என்பதாலும், இந்தத் தேர்தல் பல்வேறு கட்சிகள் அல்லது அணிகளின் பலத்தை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்ததாலும், வேட்பாளர்களைவிட தலைவர்கள் இத்தொகுதியில் தங்களின் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர்.

                      கட்சியைத் தொடங்கியபோது கணவருடன் தீபா                                             மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தே.மு.தி.க விஜயகாந்த், ஆர்.கே.நகரில் நேற்று தங்கள் கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசாரம் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொருபக்கம் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட்ட ஜெ.தீபாவுக்காக அவரின் கணவர் மாதவன் திடீரென்று நேற்று பிரசாரத்தில் குதித்தார். ஆர்.கே.நகரின் முக்கியப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருடன், துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்க நான்கு பேரும், மைக்கில் பிரசாரம் செய்தபடி ஒருவரும் சென்றனர். "நான் தீபாவோட கணவர் மாதவன், வந்திருக்கேன்" என்று சொல்லி வாக்கு சேகரித்தபோது, 'அபூர்வராகங்கள்' படத்தில் நடிகர் ரஜினியின் ஓப்பனிங் காட்சிபோல அது அமையவே, பெரும்பாலான பெண்கள் சிரித்தபடியே, மாதவன் கொடுத்த துண்டுப்பிரசுரத்தை வாங்கிக் கொண்டனர். மாதவனுடன் வந்தவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், "இளைய புரட்சித்தலைவி, தீபா அம்மாவின் கணவர், இளைய புரட்சித்தலைவர், மாதவன் அய்யா உங்களை நாடி, உங்கள் இல்லங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார். தீபாவை ஆதரியுங்கள்" என்று மைக்கில் சொல்லிக் கொண்டே போனார். அவருக்கு எதிர்த் திசையில், "தாய்மார்களே! கேப்டன் வந்து விட்டார், இனி அனைவரும் உள்ளே போய் ஒளிய வேண்டியதுதான்... உங்கள் வாக்கு முரசு சின்னத்துக்கே" என்றனர்.

                    மாதவனின் தனி பிரசார போஸ்டர் 

பிரேமலதா ஏற்கெனவே பல்வேறு பகுதிகளிலும் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார். இந்நிலையில், மனைவி தீபாவுக்காக அவரின் கணவர் மாதவன் களம் இறங்கி வாக்குசேகரித்த காட்சியை ஏராளமான மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். மற்றொரு புறம், பெற்ற பிள்ளையும். தி.மு.க வேட்பாளருமான மருது கணேஷூக்காக அவரின் தாயார் பார்வதி நாராயணசாமி பிரசாரம் செய்தார். என்றாலும், தேர்தல் ஆணையத்தின் திடீர் ரத்து அறிவிப்பால் இவர்கள் அனைவருமே மன உளைச்சல் அடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், பன்னீர்செல்வத்துக்கு பாடம் புகட்டவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தரப்பும் வாக்குசேகரித்து வந்த நிலையில், ஆர்.கே நகர் மக்கள் தேர்தல் மீண்டும் எப்போது அறிவிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- ந.பா.சேதுராமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!