சிக்கலில் மாஃபா பாண்டியராஜன்! முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும், சசிகலா அணியின் அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும் போட்டியிட்டனர். மதுசூதனனுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் மற்றும் நடிகர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டனர்.

கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக ஜெயலலிதா வாக்குகேட்பதை வைத்துக் கொண்டு சசிகலா அணியில் ஆர்.கே.நகர்த் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சவப்பெட்டியில் ஜெயலலிதா உருவபொம்மையை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்தார். மேலும், சவப்பெட்டியின் மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேசியக்கொடியை அவமதிப்பு செய்தாக மாஃபா பாண்டியராஜன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மாஃபா பாண்டியராஜன் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவியது. இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!