வெளியிடப்பட்ட நேரம்: 05:28 (11/04/2017)

கடைசி தொடர்பு:07:33 (11/04/2017)

'திடீர்' ரெய்டு, 'திடீர்' பள்ளம் தற்போதைய நிலை என்ன?! - நைட் ரவுண்ட் அப்!

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் :

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. வருமான வரித்துறையினர் திடீர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். அவரது வீட்டில் சில ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை சார்பில் ரகசிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடமும் அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் 12-ம் தேதி நடக்க இருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்துசெய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக, 29 பக்க அறிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் செல்லும் வழியில் பாதுகாப்பு போலீசார்

இந்நிலையில், 10-ம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆன அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அவரின் உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியானது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ள விஜயபாஸ்கரை கைது செய்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவரது இல்லம் இருக்கும் பசுமை வழிச் சாலைக்கு நைட் ஒரு விசிட் அடித்தோம். ரெய்டு எதிரொலி காரணமாக அந்தப் பகுதியில் வழக்கத்தைவிட அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர் வீடு இருக்கும் பகுதிக்கு சாலையிலிருந்து நுழையும் இடத்திலேயே காவலர்கள் வழிமறித்தனர். எங்கிருந்து வருகிறீர்கள் போன்ற விசாரணை நடந்தது. நாம் 'விகடன்' என்று சொன்னதும், 'யாருமே இல்ல தம்பி. ஏரியாவே வெறிச்சோடிப் போய்ருக்கு. இந்நேரம் நீங்க போனா பூட்டுன கேட்ட மட்டும் தான் ஃபோட்டோ எடுக்க முடியும். காலைல வாங்களேன் ப்ளீஸ்' என நம்மிடம் கேட்டுக்கொண்டனர். அமைச்சர் வீட்டு கேட் முன்பு தொண்டர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டோம். அவர் வீட்டில் வழக்கமான காவல் பணியில் ஈடுபடும் பாதுகாப்பு போலீசார் மட்டுமே அங்கு இருந்தனர்.

 

'திடீர்' பள்ளம் ஏற்பட்ட அண்ணா சாலை :

சென்னை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட 'திடீர்' பள்ளத்தில் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் காரை ஓட்டிவந்த ஓட்டுநர் யாருக்கும் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரண்டு நாள்களாக சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டும் இன்னும் முழுமை அடையவில்லை. அதனால் போக்குவரத்து அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. திங்கட்கிழமை மாற்றுப் பாதையில் தான் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. செவ்வாய்க் கிழமையாவது போக்குவரத்து சரியாகிவிடுமா என்பதைப் பார்ப்பதற்காக 'திடீர்' பள்ளம் ஏற்பட்ட மவுன்ட் ரோடு பகுதிக்குச் சென்றோம்.

அண்ணா சாலையில் பள்ளம் விழுந்த பகுதியை சீரமைக்கும் பணி

கான்கிரீட் கலவையால் பள்ளம் நிரப்பப்பட்ட போதும், அதன் மேல் பகுதியில் பலமான இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் அருகே வெல்ட் வைக்கும் பணிகளும், இதர சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவை விட குறைவான மெட்ரோ பணியாளர்களே இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் மீட்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் இன்று இல்லை. அமெரிக்கத் தூதரகத்துக்கு சற்றுத் தொலைவில் ஆரம்பித்து, சர்ச் பார்க் பள்ளி வளாகம் முடிவடையும் பீட்டர்ஸ் சாலை வரை தடுப்புகள் போடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலம் வழியாக வருபவர்கள் சீரமைப்புப் பணிகளை வேடிக்கை பார்த்த பின்பே அங்கிருந்து செல்கிறார்கள்.

பள்ளம் விழுந்த பகுதி தற்போது

செவ்வாய்க் கிழமையான இன்றும் பள்ளம் ஏற்பட்ட அண்ணா சாலையில் போக்குவரத்தை வழக்கம் போல் விடுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, வாகன ஓட்டிகளே திட்டமிட்டு உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.

- கருப்பு