வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (11/04/2017)

கடைசி தொடர்பு:11:54 (11/04/2017)

பத்திரப்பதிவு தளர்வு தற்காலிகமே! கிலியை கிளப்பும் உயர்நீதிமன்றம்

chennai high court

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தளர்வு செய்தது தற்காலிகமே என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 28-ம் தேதி அளிக்கப்பட்ட தற்காலிக உத்தரவு இறுதி தீர்ப்புக்குட்பட்டது என்று தெரிவித்துள்ளது.

விளைநிலங்களை வீட்டுமனையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அங்கீகாரமில்லாத விளை நிலங்களைப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து ரியல் எஸ்டேட்ஸ் அதிபர்கள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் நகல் மனுதாரர் யானை ராஜேந்திரனுக்கு தற்போது கிடைத்துள்ளது. இதையடுத்து, தடை நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் முறையீடு செய்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தளர்வு செய்தது தற்காலிகமே என்று தெரிவித்துள்ளதோடு, மார்ச் 28-ம் தேதி அளிக்கப்பட்ட தற்காலிக உத்தரவு இறுதி தீர்ப்புக்குட்பட்டது என்று கூறியுள்ளது.