ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? - அதிரவைத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

election

'அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது, ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாளை (ஏப்ரல்-12) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில், தேர்தலுக்காக, மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய ஆவணங்களும் சிக்கின. 

இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது, இதுபற்றி விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், அடுத்த ஒரு வருடத்துக்குள், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும், இடைத்தேர்தல் மத்திய அரசின் ஆலோசனைப்படி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. அடுத்த 15 நாள்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை, தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்து, திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!