வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (11/04/2017)

கடைசி தொடர்பு:15:13 (11/04/2017)

சரத்குமாரைத் தொடர்ந்து ராதிகாவுக்கு 'செக்'- ரேடன் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!

radhika sarathkumar

சரத்குமார் வீட்டில், வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், அவரது மனைவி நடிகை ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில், கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பல கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

 நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அவர்களிடம், அதிகாரிகள் நான்கு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின்போது, சரத்குமாரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சோதனையின் பரபரப்பு அடங்குவதற்குள், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று பிற்பகலில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, தி.நகரில் உள்ள ரேடன் நிறுவனத்தில் இந்தச் சோதனை நடந்துவருகிறது.