வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (11/04/2017)

கடைசி தொடர்பு:15:30 (11/04/2017)

68 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன 10 எலுமிச்சம் பழங்கள்!

திருவிழாவில் பூஜை செய்யப்பட்ட 10 எலுமிச்சம் பழங்கள், ஆயிரக்கணக்கில் ஏலம் போன சுவாரஸ்ய சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம்,  திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள இரட்டைக் குன்றில், ரத்தினவேல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 10 நாள்கள் பூஜை நடைபெறும். இந்த பத்து நாள்களும் கோயில் கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள், பாதுகாத்து வைக்கப்படும். அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் பொதுமக்கள் முன்னிலையில்   ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது.

ஊர் நாட்டாமையான பாலகிருஷ்ணன் என்பவர், ஆணி செருப்பின் மீது ஏறி நின்றுகொண்டு, முதல் எலுமிச்சம் பழத்தின் ஏலத்தை ஒரு ரூபாயில் தொடக்கி வைத்தார். சுமார் 1000 பேர் கலந்துகொண்ட அந்த ஏலத்தில், அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே, முதல் எலுமிச்சம்பழம் 27 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது என பத்து பழங்களும் ஐந்து ஆயிரம், ஆறு ஆயிரம் என போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இறுதியில், அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் 68 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

ஜெ.முருகன்

படம் : தே.சிலம்பரசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க