Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அவசரம் காட்டியதால்தான் ஆபத்து!’ - தினகரனிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்

தினகரன்

ளும்கட்சி வட்டாரத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை. 'எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும், கார்டனில் உள்ளவர்கள் அவசரப்படுவதால்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது' என வெளிப்படையாகப் பேசியுள்ளனர் அமைச்சர்கள் சிலர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு துண்டுகளாகிவிட்டது. சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். 'அ.தி.மு.கவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். அவகாசம் இருந்திருந்தால், அத்தனை பேரின் கையெழுத்தையும் வாங்கி வந்திருப்போம். இடைத்தேர்தலில் தினகரனுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது' என பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் வாக்குவாதம் செய்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆஜரானார். ஆனாலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இந்நிலையில், ஆர்.கே.நகர்த் தொகுதியில் வாக்காளர்களுக்கு தினகரன் தரப்பினர் பண விநியோகம் செய்ததாக, தி.மு.க, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஆணையத்தில் புகார் கூறின. இதன்பேரில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே களத்தில் குதித்தது வருமான வரித்துறை. 

அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருடைய வீடுகளிலும் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் ரெய்டு நீடித்தது. இந்த ரெய்டால் மூத்த அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். "ஆர்.கே.நகர் விவகாரம் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கக் காரணமே, தினகரனுக்கு வலதும் இடதுமாக இருக்கும் தென் மாவட்டப் புள்ளி உள்பட மூன்று அமைச்சர்கள்தான். 'பணப்பட்டுவாடா குறித்த தகவல்கள் அனைத்தும் வெளிப்படையாக கசிவதற்கு இவர்கள்தான் காரணம்' என தினகரனிடமே சிலர் எடுத்துக் கூறியுள்ளனர். நேற்று தினகரனிடம் பேசிய மூத்த அமைச்சர்கள் சிலர், 'ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட அவசரம் காட்டியதால்தான் ஆபத்து வந்திருப்பதாக நினைக்கிறோம். இன்னும் கொஞ்ச காலம் அமைதியாக இருந்திருந்தால், இப்படியொரு சிக்கல் வந்திருக்காது. மத்திய அரசின் நோக்கம் வேறாக இருக்கிறது' எனச் சுட்டிக் காட்டியுள்ளனர். இதுக்குப் பதில் கொடுத்த தினகரன், 'இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நானே போட்டியிடுவேன்' எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிலை அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், 

" போயஸ் கார்டனுக்கு நெருக்கமான அமைச்சர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களின் அனைத்து போக்குவரத்துகளையும் மத்திய அரசு தீவிரமாகக் கண்காணிக்கிறது. அரசின் ஒவ்வொரு அசைவும் அறிக்கைகளாகச் செல்கிறது. 'பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தினகரன் வெல்வார்' என மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்தாலே, தேர்தலை ரத்து செய்துவிடுவார்கள் என்பது தினகரனுக்கு முன்கூட்டியே தெரியும். அதையும் மீறி, பணம் கொடுத்ததிலும் உள்நோக்கம் இருக்கிறது. அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும், தினகரன் மீண்டும் பணம் கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். இதற்குக் காரணம் கடந்த பத்து நாட்களில் திகட்டும் அளவுக்கு இறைக்கப்பட்ட பணம்தான். ஜெயலலிதா மரணம் உருவாக்கிய தாக்கத்தை மறைப்பதற்காக, சசிகலா பெயரையே சொல்லாமல் களத்தில் வலம் வந்தார் தினகரன். திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் வகையில், 'ஒவ்வொரு வாக்காளரின் தேவைகளையும் அறிந்து, தேடிச் சென்று தீர்த்தது தினகரன்தான்' என்ற தோற்றத்தை ஆர்.கே.நகர் மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டார். 'இனி எப்போது தேர்தல் நடந்தாலும், கட்டாயம் வெற்றி பெறுவோம்' என்ற நம்பிக்கையில்தான் அவர் இவ்வாறு கூறுகிறார். ‘அதுவரையில், ஆட்சி அதிகாரம் நீடிக்குமா?’ என்ற அச்சம்தான் அமைச்சர்களை வாட்டி வதைக்கிறது" என்றார் விரிவாக. 

ஏப்ரல் 17-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், 'சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி மிஞ்சுமா?' என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், தினகரனின் தன்னம்பிக்கையால், கூடுதல் அச்சத்தில் இருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். 

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement