'அறைந்த ஏ.டி.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்யுங்கள்..!'- சாமளாபுரத்தில் மக்கள் உண்ணாவிரதம் | Tasmac protest dissolved by lathi-chage at Tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (11/04/2017)

கடைசி தொடர்பு:19:17 (11/04/2017)

'அறைந்த ஏ.டி.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்யுங்கள்..!'- சாமளாபுரத்தில் மக்கள் உண்ணாவிரதம்

திருப்பூர் அருகில் இருக்கும் சாமளாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஒருவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சில நாள்களுக்கு முன்னர், 'நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும்' என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3303 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்று இடம் பிடித்து, அந்த இடங்களில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க, தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது, பொதுமக்களைக் கொந்தளிக்கவைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதேபோல, நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை, குடியிருப்புப் பகுதியில் அமைக்கக்கூடாது என்பதையும், செயல்பட்டு வந்த கடையை மூடக்கோரியும், திருப்பூர் மாவட்டம், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாமளாபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவந்தனர். 

அப்போது, அந்தப் பகுதி வழியே குடும்பத்தோடு காரில் வந்த தொகுதி எம்எல்ஏ கனகராஜை வழிமறித்த பொதுமக்கள், டாஸ்மாக் கடைகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 'பொதுமக்களுக்கு ஆதரவாக நானும் இங்கு இருக்கிறேன்' என்று பேசிவந்தார் கனகராஜ். 

பின்னர், சுமூகமாக போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறை தரப்பில் வழியுறுத்தப்பட்டது. ஆனால், இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் எங்கும் டாஸ்மாக் கடைகளை அமைக்க மாட்டோம் என்பதை எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

திருப்பூர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் பல்லடம் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸார், எம்எல்ஏ கனகராஜை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, கூடியிருந்த  பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்கள், குழந்தைகளோடு இருந்ததையும் பொருட்படுத்தாமல், காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது, தடியடியில் இருந்து பெண்களைக் காப்பாற்ற முயன்ற ஆண் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதற்குப் பிறகு, போலீஸாரை எதிர்த்து பொதுமக்கள் கல்வீசித் தாக்க முயன்றனர். இருப்பினும், தொடர்ந்து நடத்திய தடியடியால் ஒட்டுமொத்த கூட்டமும் கலைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

போலீஸ் தடியடி நடத்தியதை அடுத்து, சாமளாபுரத்தில் பொதுமக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்கள். தடியடியால் காயம் அடைந்தவர்களுக்கு  உரிய  இழப்பீடு வழங்க  வேண்டும், ஐயம்பாளையத்தைச் சேர்ந்த  ஈஸ்வரி என்ற பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக ஓங்கி அறைந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும், மேலும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்பி உமா, பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.