வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (12/04/2017)

கடைசி தொடர்பு:16:18 (12/04/2017)

ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது முதல் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரை...பி.ஜே.பி-யின் பின்னணி என்ன?

விஜயபாஸ்கர்

மிழகத்தில் ஜெயலலிதா மரணம் முதல் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து வரை கடந்த 4 மாதங்களில் நடந்த எத்தனையோ அரசியல் நிகழ்வுகளுக்கும் பி,ஜே.பி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதிரடியான அரசியல் நிகழ்வுகளுக்கும் பி.ஜே.பி அல்லது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரை எத்தனையோ பி.ஜே.பி தலைவர்கள் பலமுறை தங்கள் கருத்துகளை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்குக் காரணம், அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பிலும், ஆட்சிப்பொறுப்பிலும் இருந்த ஜெயலலிதா என்ற ஒரு இரும்புப் பெண்மணியின் மறைவுதான் என்று முழுமையாகக் கூற முடியாவிட்டாலும், தற்போது அரங்கேறி வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அவர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாம் என பொதுமக்கள் பரவலாகப் பேசிக்கொள்வதை நம்மால் உணர முடிகிறது.

டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்தார். உடனடியாக அன்று, நள்ளிரவிலேயே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா, கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்படியே தொடர்ந்திருந்தால், ஒருவேளை சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இன்னும் தாமதமாகி இருக்கலாமோ என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால், கட்சியும், ஆட்சியும் ஒரே நபரிடம் இருக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார். மேல்முறையீட்டு வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம் என்று எதிர்நோக்கியுள்ள ஒருவரை முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாமா என்று சட்ட நிபுணர்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.  அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி விடுகிறது. பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால், சசிகலா பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்குக் கிளம்பிச் செல்லும்முன் தனது அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கிறார்.

துணை ராணுவப்படை - ஆர.கே.நகர்இந்தச் சூழலில்தான் ஜெயலலிதா மறைந்ததால், காலியான சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஓ.பி.எஸ் அணியும், டி.டி.வி. தினகரன் அணியும் ஆர். கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால், தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியது. இரு அணியினருக்கும் ஆர்.கே.நகர்த் தொகுதியில் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து, வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தினகரன் ஆதரவாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவரது உறவினர்களின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அப்போது கிடைத்த ஆவணங்களின்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கு இடைத்தேர்தலுக்காக பணம் வழங்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் சிக்கின. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு 2 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் ஆணையம், பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததில், மத்திய அரசுக்கு எந்தவிதப் பங்கும் கிடையாது என்று தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உரிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க, பி.ஜே.பி-யின் கூட்டுச்சதி காரணமாகவே ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தி.மு.க, பி.ஜே.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் ரத்தாகியுள்ள நிலையில், எப்படியாவது, தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் பி.ஜே.பி அதிக தீவிரம் காட்டி வருகிறது.

எனவே அடுத்தடுத்த காய் நகர்த்தல்களை அக்கட்சி செய்யும் என எதிர்பார்க்கலாம். டி.டி.வி. தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய அமலாக்கத்துறையை மத்திய அரசு முடுக்கி விடலாம்.

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படக்கூடிய அதிகாரம் படைத்த அமைப்பு என்றாலும், மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட அமைப்புதான் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. வருமான வரித்துறையும் அதேபோன்றதுதான். எந்தநேரத்தில், யார் வீட்டில் ரெய்டு நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் வருமான வரித்துறைக்கே உண்டு என்றாலும், அந்தத்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதித்துறைக்கும் உண்டு.

ராமமோகன ராவ்  - சோதனைதமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் விளைவுகள் என்னவானது? எந்த அடிப்படையில் தற்போது அவருக்கு மீண்டும் தமிழக அரசில் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு இணையான பதவி வழங்கப்பட்டது என்பதெல்லாம், மத்திய அரசுக்கே வெளிச்சம். மேலும் சேகர் ரெட்டி கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமான தமிழக அரசியல் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விசாரணை எந்த நிலையில் உள்ளது? போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, அவரிடம் வருமான வரித்துறையினரின் கேள்வி போன்றவையும் சேகர்ரெட்டி கேஸ் போன்று கிடப்பில் போடப்பட்டு விடுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதனிடயே, "தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?" என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

"ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு" என்ற பாடல் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது!

-சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்