“இனி இப்படித்தான்!” - விவசாயிகளுக்காக எம்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்!

 

 

 

தேர்தல் நேரங்களில் ஓட்டு வாங்குவதற்காக, மக்களின் காலில் விழுவதற்குக்கூட தயங்காதவர்கள் அரசியல்வாதிகள். வெற்றிபெற்ற பின் அவர்களின் நடவடிக்கைகளை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவோ, அதற்காக மக்கள் மன்றங்களில் குரல் கொடுக்கவோ எந்த அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டில் இல்லை. தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தைப் பதுக்கி வைத்துக் கொள்ளவும், யாருக்கு ஜால்ரா அடிக்கலாம் என்று யோசிப்பதற்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். பின்னர் எப்படி அவர்கள், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பார்கள். ஒரு மாதகாலமாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்திக்கவில்லை. வேறு வழியே இல்லை என்று ஆடைகளை களைந்து நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் இறங்கினர். அப்போதும் விவசாயிகளின் பிரச்னைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து, டெல்லியில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய் திறக்கவில்லை. மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாத எம்.பி.க்களும், எம்.எல்.ஏ-க்களும் எதற்கு? ஒன்று அவர்கள் மோடியைச் சந்தித்து தமிழக விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேச முன்வர வேண்டும். இல்லை என்றால் எம்.பி-க்களை நாங்கள் கேள்வி கேட்போம் என்று கூறி, திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் ப. குமாரின் அலுவலத்துக்கு இன்று (11-04-2017) 'தண்ணீர் இயக்கத்தைச்' சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். 

இதுபற்றி திருச்சியில் தண்ணீர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பேசியபோது, "ஓட்டுப் போடுவதற்கு மட்டும்தான் மக்கள் இருக்கிறார்களா? ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமையும் மக்களுக்கு உண்டு. சமீபகாலமாக, தமிழக மக்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் மத்திய-மாநில அரசுகளால் ஏற்பட்டுள்ளன. அதுபற்றி எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளவில்லை.  இன்றுகூட டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கு போராடும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவோ, மோடியுடன் இதுதொடர்பாக பேசவோ அவர்கள் தயாராக இல்லை. மக்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகள் என்பவர்கள் நமக்கான ஊழியர்கள்.

இளைஞர்கள்

நம் வீட்டில் வேலைசெய்யும் ஒருவர் அவரின் வேலையைச் சரியாக செய்யவில்லை என்றால் எப்படியெல்லாம் திட்டுகிறோம். எத்தனை கேள்விகள் கேட்கிறோம். அப்படித்தான் அரசியல்வாதிகளும். ஓட்டுபோடும் மக்களுக்கு அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. இருந்தும் ஏன் யாரும் முன் வருவதில்லை? இனிமேலாவது அரசியல்வாதிகளை எப்போது பார்த்தாலும் கேள்வி கேளுங்கள். மக்கள் பணத்தை ஊழல் செய்யவும், ரிசார்ட்டில் தங்கி கும்மாளம் அடிக்க அவர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. மக்களுக்காக நல்ல திட்டங்களைக் கொண்டுவரவும், மக்களாகிய நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும்தான் அவர்களை தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் அனுப்பி வைக்கிறோம். அரசியல்வாதிகள் இப்படி ஊழல்வாதிகளாக மாறியதற்கு நிச்சயம் அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் தவறு செய்யும்போது எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாமும்தான்  காரணம்" என்றனர். மேலும் அவர்கள், "டெல்லியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்க முடியாத பிஸியில் பிரதமர் மோடிதான் இருக்கிறார் என்றால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களோ, பிரதமர் மோடியிடம் பேசத் தயங்குகிறார்கள். அதனால்தான், நாங்கள் அரசியல்வாதிகளிடம் கேள்விகேட்க வந்துவிட்டோம். குமார் எம்.பி-யின் அலுவலகத்துக்கு மனுவுடன் சென்றோம். அவர் டெல்லியில் இருப்பதால், அவரின் பி.ஏ மூலம் எங்கள் கேள்விகளை தெரியப்படுத்தினோம். இனி எந்தவொரு எம்.எல்.ஏ ஆனாலும், எம்.பி-யானாலும் எங்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் கேள்வி கேட்போம். ஓட்டுப்போட மட்டுமல்ல. அரசியல்வாதிகளை கேள்வி கேட்கவும் மக்களுக்கு உரிமை உண்டு. அதற்கு அனைத்து மக்களும் முன்வர வேண்டும்" என்றனர் தீர்க்கமான உறுதியுடன்

'தண்ணீர் இயக்கத்தினர்' சொல்வதும் உண்மைதானே! ஓட்டுப் போடுவதற்கு எந்தளவு உரிமை இருக்கிறதா, அந்த அளவுக்கு, தப்பு செய்யும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமையும் மக்களுக்கு உண்டுதானே. தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டுமானால், நீங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்விகேளுங்கள். அது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!

-ஜெ.அன்பரசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!