வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (12/04/2017)

கடைசி தொடர்பு:09:40 (12/04/2017)

'போராட்டத்தைக் கைவிடுங்கள்... நல்வாழ்வு காத்திருக்கிறது...' தமிழிசை வேண்டுகோள்!

தமிழிசை

கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ' விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு நல்வாழ்வு காத்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், 'விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்பட மாட்டாது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. உத்தரப்பிரதேச மாநில அரசு செய்ததைப் போல தமிழக அரசு விவசாயக் கடனை தள்ளுபடிசெய்ய வேண்டும். விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு நல்வாழ்வு காத்திருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்துள்ள மரண தண்டனை மற்றும் டாஸ்மாக் பிரச்னை குறித்துப் பேசிய தமிழிசை, 'குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது. அது, தனிநபர் பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படாது. இரு நாட்டுப் பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளப்படும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பா.ஜ.க போராடும். தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது' என்று கூறியுள்ளார்.