Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கழிவறை கழுவி 1,200 மாணவர்களைப் படிக்க வைத்த தமிழக தம்பதி! #Inspiration

 

 

க்கன் போலீஸ் மந்திரியாக இருந்த சமயம். அவரது மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. முழுத் தகுதி இருந்ததால் பணி வழங்கப்படுகிறது. தந்தையிடம் வந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டுகிறார் அதனை வாங்கிப் பார்த்த கக்கன், கிழித்துப் போட்டு விட்டு,  மகனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,,' நான் போலீஸ் துறை மந்திரி... எனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?. அதனால் இந்த உனக்கு வேலை வேண்டாம்' என கோபமாகிறார். அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் வாழ்ந்த மண் இது. கடைசிக் காலத்தில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வழியின்றி, இறந்து போனார் கக்கன்.  

கழிவறை கழுவி மாணவர்களை படிக்க வைக்கும் தம்பதி

நல்ல தலைவர்கள் நாட்டுக்குத் தேவை என வீதிக்கு வீதி கூப்பாடு போடுகிறோம்.... வாய் கிழியப் பேசுகிறோம். தமிழகம் இப்போதுள்ள நிலையில் ‘தலைவர்கள்’  பற்றிச் சொல்லவே தேவையில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டுமென விரும்புகிறோம்.  அத்தகையை தலைவர்களை உருவாக்க நாம் விரும்புகிறோமா... முயற்சிக்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். நல்ல தலைவர்களாக வருவதற்கு தகுதியும் திறமையும் கொண்டிருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோமா என்றாலும் நிச்சயம் இல்லை.

 உண்மையை சொல்லப் போனால், 'இவர் நல்ல தலைவர்' எனத் தெரிந்தால் அவரைத் தோற்கடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் விசித்திர குணமும் நமக்கு இருக்கிறது. நாம் வாழும் காலத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நல்லக்கண்ணுவைச் சொல்லலாம்.  அவரைப் போலவே  நாட்டில் பல நல்லக்கண்ணுக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் லோகநாதன். இவருக்கும் கக்கன்தான் இன்ஸ்பிரேஷன். 

கோவை, சூலுரைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறிய லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். வயிற்றுப்பாட்டுக்காக லேத் பட்டறை. இந்த பணி போக லோகநாதன் நாமெல்லாம் கண்டாலே முகம் சுளிக்கின்ற பணியும் செய்வார். அது வீடு வீடாக சென்று கழிவறைகளை சுத்தம் செய்வது.  லேத் பட்டறை வைத்துதான் நடத்துகிறாரே... பின்னர் எதற்கு கழிவறை சுத்தம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?. கழிவறை கழுவி சம்பாதிக்கும் பணத்தில் லோகநாதன் படிக்க வைத்த மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 15 வருடங்களில் 1,200 பேர்.  இவர்களின் படிப்புக்காகத்தான் லோகாதன் 'பார்ட் டைம் ஜாப்' போல வீடு வீடாக சென்று கழிவறை கழுவி வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதம் 400 ரூபாய் வசூலிக்கிறார். அந்த தொகையை கொண்டு ஏழை மாணவர்கள், படிக்க வசதியில்லாதவர்களை பள்ளியில் சேர்க்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

லோகநாதனிடம் பேசிய போது, '' பெரியார், கக்கன், அண்ணா, காமராஜர் போன்றத் தலைவர்கள், 'எளிமையாக உயர்ந்த சிந்தனையுடன் வாழுங்கள்' என அறிவுறுத்தினார்கள். நானும்  அவர்களின் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன். தொடக்கத்தில் கழிவறை சுத்தம் செய்வது கடினமானதாகத்தான் இருந்தது. போகப் போக பழகி விட்டது. எனது மனைவியும் இதனை செய்கிறார். இருவரும் சேர்ந்து கிடைக்கும் பணத்தில் குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறோம். குழந்தைகளை அடையாளம் காண, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவியாக இருக்கிறது. அத்தனையும் வங்கி வழியாகவே பணம் செலுத்துகிறோம். அதனால்,ஒவ்வொன்றுக்கும் கணக்கு உண்டு. எத்தனை காலமாக ஒரு சமூகத்தினர் மட்டுமே நமக்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். அந்த சமூகத்தினர் சந்திக்கும் கஷ்டங்களையும் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டேன்'' என்கிறார்.

கழிவறைக் கட்டுவதில் இருந்து சுடுகாட்டுக் கொட்டகை அமைப்பது வரை ஊழல் புரியும் கில்லாடிகள்  நிறைந்த நம் நாட்டில்   லோகநாதனும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் லோகநாதன் கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களமிறங்கிய அவருக்க கிடைத்தது வெறும் 1,744 ஓட்டுகள்தான்.  அத்தோடு, அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு கழிவறை கழுவ சென்று விட்டார். 

தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் குறித்து லோகநாதன், ''நான் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க கழிவறையை சுத்தம் செய்கிறேன். அதே போலவே... இளைய சமுதாயத்தினரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய களமிறங்க வேண்டும். களமிறங்குவார்கள் என நம்புகிறேன்'' என்கிறார்.

-எம்.குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement