ஆளுநரிடம் தி.மு.க. வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் இவைதான்!

தி.மு.க.வைச் சேர்ந்த எம்பி-க்கள், இன்று தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மும்பையில் சந்தித்தனர். துரைமுருகன், திருச்சி சிவா உள்ளிட்டோர் அடங்கிய குழு, ஆளுநரைச் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  

DMK meets governor
 

கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,  காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 30 நாள்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் தி.மு.க எம்பி-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். வருமான வரித்துறையின் சோதனையில், வாக்காளர் பட்டியலை வைத்து பணம் தந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. தமிழகத்தில் 50 இடங்களில் நடந்த சோதனையில், 4.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் முகமது வீட்டில், 3.5 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மற்றொரு உதவியாளர் கல்பேஷ் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறு, தி.மு.க எம்பி-க்கள் ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளனர்.  பணப் பட்டுவாடாவால் ரத்தான ஆர்.கே.நகர் தேர்தல் பற்றியும் தி.மு.க எம்பி-க்கள் முறையிட்டுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!