வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (12/04/2017)

கடைசி தொடர்பு:11:41 (12/04/2017)

முதல்வர் பழனிசாமி அரசு பற்றி தமிழிசை அதிர்ச்சித் தகவல்!

வருமான வரித்துறை சோதனை ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடந்தால், தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 7-ம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகளில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், கோடிக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் கல்குவாரியில், வருமான வரித்துறையினர் மற்றும் மத்திய கனிமவளத்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முத்துடையாம்பட்டில் உள்ள கல்குவாரியிலும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக வருமான வரித்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கையால், அமைச்சர்கள் பலர் கிலியில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடந்தால், தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறினார்.

முதல்வர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டால், அரசு பதவி இழக்க நேரிடும் என்று கூறிய அவர், பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகள், மத்திய அரசைத் தொடர்ந்து குறைசொல்லிவருகின்றனர் என்று குற்றம் சாட்டினார் தமிழிசை.