வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (12/04/2017)

கடைசி தொடர்பு:12:08 (12/04/2017)

உயர்நீதிமன்றம் கொடுத்த சாட்டையடி எதிரொலி! வருமான வரித்துறையினரிடம் கீதாலட்சுமி ஆஜர்!

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, ஏப்ரல் 7-ம் தேதி நடந்த வருமானவரி சோதனை தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜரானார். 

Geetha lakshmi
 

கடந்த 7-ம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

வருமான வரி சோதனையைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை கடந்த 9-ம் தேதி சம்மன் அனுப்பியது. சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர்  கடந்த 10-ம் தேதி,  நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள்.  அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்குறித்து,  வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

Geetha lakshmi


இதனிடையே, வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல்செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீதாலட்சுமிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, விசாரணையில் இருந்து தப்பிக்க நினைக்கக்கூடாது என்று சாட்டையடி கொடுத்தது. இதையடுத்தே, கீதாலட்சுமி இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம்,  வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

படம் : ஜெரோம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க