'நான் பேசினால் டெல்லிக்கு சிக்கல்; பேசாவிட்டால், தமிழகத்துக்கு சிக்கல்!' சிறையில் சேகர் ரெட்டியின் மனநிலை #VikatanExclusive | Both Central and State parties have made sure Sekar Reddy is behind the bars

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (12/04/2017)

கடைசி தொடர்பு:10:26 (14/04/2017)

'நான் பேசினால் டெல்லிக்கு சிக்கல்; பேசாவிட்டால், தமிழகத்துக்கு சிக்கல்!' சிறையில் சேகர் ரெட்டியின் மனநிலை #VikatanExclusive

சேகர்ரெட்டி

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், வாயைத் திறந்தால் டெல்லிக்கும், திறக்கவில்லை என்றால், அ.தி.மு.க-வுக்கும் சிக்கல் என்றும் சேகர் ரெட்டியின் நெருக்கமானவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். 

சேகர்ரெட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, கால்கடுக்க வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு மக்கள் காத்திருந்த சமயத்தில், 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் தொழிலதிபர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு, அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டன. அதோடு, கிலோ கணக்கில் தங்கத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல்செய்தனர். இதையடுத்து, சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
சென்னை புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்த சில நாட்களிலேயே மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியைச் சந்திக்க பல வி.ஐ.பி-க்கள் வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சேகர்ரெட்டி வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையே  தமிழகத்தில் நடந்துவரும் ஐ.டி.சோதனைக்குப் பிள்ளையார் சுழியாக உள்ளது. 
 

சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின்போதுகூட சேகர் ரெட்டியின் பெயர் அடிபட்டது. ஏற்கெனவே, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரிடம் சிக்கிய டைரியில் உள்ள உள்விவகாரங்கள் அடிப்படையில், அடுத்தடுத்து சோதனைகள் நடந்துவருகின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


தொடர்ந்து, வருமானவரித்துறையினரின் கிடுக்கிப்பிடி தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியை, அவருக்கு நெருக்கமானவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களிடம் சேகர் ரெட்டி, ’நான் வாயைத் திறந்தால் மத்திய அரசுக்கு சிக்கல், வாயைத் திறக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு சிக்கல்’ என்று மனம்விட்டுப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேகர்ரெட்டி


இதுகுறித்துப் பேசிய சேகர் ரெட்டிக்கு நெருக்கமான ஒருவர், "சேகர் ரெட்டியின் கைதுக்குப் பின்னால் ஒர் அரசியலே ஒளிந்திருக்கிறது. இது, மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். குறிப்பாக, மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டிக்கு, கார்டனில் இருந்த செல்வாக்கு ஊர் அறிந்த ஒன்று. அதுபோல, பா.ஜ.க-வின் டெல்லி முக்கிய பிரமுகர்களுடனும் சேகர்ரெட்டிக்கு பழக்கம் உள்ளது.  சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகே மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்தது. அவரது வீட்டில் பணம், தங்கம் இருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்குத் தெரியும். ஏன், மத்திய, மாநில அரசுகளுக்கு கஜானாவாக இருந்தவர்களில் ஒருவர், சேகர்ரெட்டி. நடந்து முடிந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலின்போது சேகர்ரெட்டி தரப்பிலிருந்தே  'சி'க்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்தளவுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கமானவர்களிடம் சேகர்ரெட்டி நெருக்கமாக இருந்தார். தமிழக அரசியலை கையில் எடுக்க, அவரைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், அவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்தித்துவருகிறார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை இன்னும் அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதைப் பொறுத்திருந்து பாருங்கள். சிறைக்குள் இருந்தபடி அனைத்தையும் உன்னிப்பாக சேகர்ரெட்டி கவனித்துக் கொண்டிருக்கிறார். சேகர் ரெட்டியுடன் நெருக்கத்தில் இருந்தவர்களில் சிலருக்கு, மத்திய அரசின் கருணைப் பார்வை கிடைத்துள்ளதால், அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையினர் செல்லவில்லை. அதே சமயத்தில், மற்றவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனையை வருமான வரித்துறை தீவிரப்படுத்திவருகிறது. " என்றார். 

சிறையிலிருந்து வெளியேற சேகர்ரெட்டி விரும்பினாலும், அதற்கான வாய்ப்புகள் அவருக்கு ஏற்படவில்லை. ஒருமுறை ஜாமீன் கிடைத்ததும் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அடுத்து அவரைக் கைதுசெய்து சிறைக்குத் தள்ளிவிட்டது, அமலாக்கத்துறை. இதனால், சேகர் ரெட்டி சிறைக்குள் இருந்தபடியே தமிழக அரசியல் சூழ்நிலையைக் கவனித்துவருகிறார். சேகர் ரெட்டியை கார்டனுக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற தகவல் அவருக்கும் சென்றுள்ளது. அப்போது, அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் இல்லையாம். வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம். அதை, சிறைக்குள் இருக்கும் உளவுப் பிரிவினர் கண்காணித்து, உயரதிகாரிகளுக்கு 'நோட்' போட்டுள்ளனர். 

சேகர் ரெட்டியை சிறைக்குள்ளேயே வைத்திருக்க சில முயற்சிகள் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அவருக்கு எதிராக இருக்கிறது. அதைவைத்தே, சேகர் ரெட்டிக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், சேகர் ரெட்டியுடன் நெருக்கத்திலிருந்த அமைச்சர்கள் இருவர் மீது வருமான வரித்துறையினரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. மேலும், சில முன்னாள் அமைச்சர்களும் வருமான வரித்துறையினரின் சந்தேக வளைத்துக்குள் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை வருமானவரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு அதிரடியாகச் செல்ல உள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியைச் சந்திக்க வருபவர்களைக் கவனித்துவரும் அமலாக்கத்துறை மற்றும்  உளவுப்பிரிவினர், அது தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் தெரிவித்துவருகின்றனர். அதன்அடிப்படையில், அ.திமு.க. முக்கிய நிர்வாகிக்கு நெருக்கமான  ஒருவர்,  சில மாதங்களுக்கு முன்பு சேகர் ரெட்டியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அந்தச் சந்திப்புக்குப் பிறகே, சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரியவந்ததும், சசிகலா அணி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகர் ரெட்டியுடன் பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்தவர்களை அழைத்து, சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. அந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, சேகர் ரெட்டியுடன் பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களின் வெளிவராத கணக்கு விவரங்களையும் தோண்டி எடுத்து, அதை வருமான வரித்துறையினரிடம் கொடுக்க உள்ளனர். அதற்கும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடவும் முடிவுசெய்துள்ளது சசிகலா தரப்பு. இவ்வாறு தொழிலதிபர் சேகர் ரெட்டி மூலம் நடத்தப்படும் அ.தி.மு.க அரசியல் சதுரங்கத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

- நமதுநிருபர்


டிரெண்டிங் @ விகடன்