டாஸ்மாக் பணியாளர்களையும் தற்கொலை அழுத்தத்துக்கு தள்ளும் அரசு! | TASMAC employees are in trouble

வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (12/04/2017)

கடைசி தொடர்பு:14:29 (12/04/2017)

டாஸ்மாக் பணியாளர்களையும் தற்கொலை அழுத்தத்துக்கு தள்ளும் அரசு!

டாஸ்மாக் கடை

துபானக் கடைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததால், மாற்றுப் பணியில்லாமல் வீதிக்கு வந்துள்ளனர் டாஸ்மாக் பணியாளர்கள். ' அரசுத்துறைகளில் மூன்று லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் முன்னுரிமை வழங்காமல் புதிய டாஸ்மாக் கடைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விருதுநகர் டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்தழகன் தற்கொலை செய்து கொண்டார்' எனக் கொந்தளிக்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள். 

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அப்புறப்படுத்துமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் மட்டும் 3,321 கடைகள் மூடப்பட்டுவிட்டன. புதிய கடைகளைத் திறந்தாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக, உடனடியாக அவை மூடப்படுகின்றன. மதுபானக் கடைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர். டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை ஈடு செய்வதற்காக, ' மாநில நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலைகளாக மாற்றுவது' என்ற முடிவை தமிழக அரசு எடுத்தது. அரசின் முடிவுக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம். 

பழனிபாரதிதமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பழனிபாரதியிடம் பேசினோம். "  டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவின்படி 500 கடைகள் மூடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு காலியாக இருந்த டாஸ்மாக் கடைகளில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது. புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகும் 500 கடைகள் மூடப்பட்டன. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3,200 கடைகளைப் பூட்டிவிட்டனர். ஏறத்தாழ நான்காயிரம் கடைகளில் வேலை பார்த்த ஊழியர்கள் தற்போது வேலையில்லாமல் தெருவுக்கு வந்துவிட்டனர். புதிய கடைகளைத் திறந்தாக வேண்டிய நிர்பந்தமும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வேலை இழந்த பணியாளர்களிடம் பேசும் அதிகாரிகள், ' தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவிலும் புதிய கடைகளை உருவாக்க வேண்டும். புதிய கடைகளைத் திறக்க முடியாவிட்டால், அனைவரும் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்' என மிரட்டுகின்றனர். இதுகுறித்து, வரும் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் அளிக்க வேண்டியிருப்பதால், கெடுவைக் காரணம் காட்டி அதிகாரிகள் கூடுதல் அழுத்தம் தருகின்றனர். அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்தழகன் கடையைத் தேடி அலைந்திருக்கிறார். ஒருகட்டத்தில் கடை கிடைக்காமல் போகவே, கடன் வாங்கி புதிய கடை ஒன்றையும் கட்டியிருக்கிறார். இந்தக் கடைக்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகளுக்குப் பதில் சொல்ல முடியாத துயரத்தில், அவர் தற்கொலை செய்துகொண்டார். இதேபோன்ற நிலையில்தான் பணியாளர்கள் இருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை" எனக் கொந்தளித்தவர், 

" அரசுத் துறைகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. முன்பு இதேபோல் கடைகளை மூடியபோது, அரசு கனிமவள நிறுவனம் (டாமின்) உள்பட ஆள் பற்றாக்குறையுள்ள பல துறைகளில் கணக்கு எடுத்தார்கள். ஆனால், அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தற்போது நான்காயிரம் கடைகளின் வருவாய் இழப்புக்காக சொல்ல முடியாத துயரத்துக்குப் பணியாளர்கள் ஆளாகியுள்ளனர். எங்களுக்கு மாற்றுப் பணியிடம் வழங்கப்படுவது குறித்து அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியல் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்" என்றார். 

மதுபானக் கடைகளின் மீதான பொதுமக்களின் கோபத்தைத் திசைதிருப்பும் வழிகளில் இறங்கியிருக்கிறது தமிழக காவல்துறை. திருப்பூர், சாமளாபுரத்தில் பெண்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜனைக் கண்டித்து, அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. பொதுமக்களின் தொடர் கொந்தளிப்பும் டாஸ்மாக் பணியாளர்களின் மறியல் போராட்டமும் முடிவெடுக்க வேண்டிய நிலையை நோக்கித் தமிழக அரசை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்