’ஈஸ்வரியைத் தாக்கிய போலீஸ் என்ன சொல்கிறார்?’ - வைரலாகும் குரல்பதிவு! | Whatsapp audio about ADSP Pandiyarajan goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (12/04/2017)

கடைசி தொடர்பு:17:37 (12/04/2017)

’ஈஸ்வரியைத் தாக்கிய போலீஸ் என்ன சொல்கிறார்?’ - வைரலாகும் குரல்பதிவு!

பாண்டியராஜன்

திருப்பூர் மாவட்டத்தில், மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு, போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதை எதிர்த்து, அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தினர். இதில், போராட்டத்தில் பங்கேற்ற ஈஸ்வரி என்ற பெண்ணை, போலீஸ் அதிகாரி பாண்டியராஜன், சரமாரியாகத் தாக்கிய வீடியோவைப் பார்த்து பொதுமக்கள் கொந்தளித்தனர். குறிப்பாக, மகளிர் அமைப்புகள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், மனித உரிமை ஆணையம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   

அறப்போர் இயக்கம் சார்பில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டு, போலீஸ் அதிகாரி பாண்டியராஜனிடம் போனில் கடும்வாக்குவாதம் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியராஜனும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த பாஷித் என்பவரும் பேசிய செல்போன் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகிவருகிறது. அந்த ஆடியோ, வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அந்த ஆடியோவில், 'போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை  நீங்கள் எப்படி அடிக்கலாம்?' என்று பாண்டியராஜனிடம், பாஷித் கேட்கிறார். அதற்கு நான் அடிக்கவில்லை, என்னுடைய கைகூட  அந்தப் பெண் மீது படவே இல்லை என்று சொல்கிறார் பாண்டியராஜன். ஆனால், பாஷித் விடாமல் நீங்கள் அடிக்கும் வீடியோ ஆதாரம் உள்ளதே என்று கேட்டதற்கு, பாண்டியராஜன் மழுப்பலான பதிலைச் சொல்கிறார். கடைசியாக பாண்டியராஜனிடம், 'மதுக்கடை நடத்துபவர்களை நீங்கள் அடியுங்கள். கடை திறக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அடித்தது தவறு. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ்தான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்' என்று சொல்வதோடு முடிகிறது. 

பாசித் இதுகுறித்து, அறப்போர் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் பாசித்திடம் பேசினோம். "மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம், கண்டனத்துக்குரியது. அதிலும், பெண்ணை ஆண் போலீஸ் அதிகாரி பாண்டியராஜன், கையால் சரமாரியாகத் தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீஸ் அதிகாரி, பெண்ணை அடிக்கும் வீடியோ காட்சியைப் பார்த்ததும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக பாண்டியராஜனின் செல்போன் நம்பரைக் கண்டுப்பிடித்து, அவருக்கு போன் செய்தேன். என்னுடைய போன் அழைப்பை அவர் முதலில் கட் பண்ணிவிட்டார். பிறகு, அவரே இன்னொரு நம்பரிலிருந்து என்னை தொடர்புகொண்டார். அப்போது அவர், நான் அந்தப் பெண்ணை அடிக்கவில்லை என்று சொன்னார். வீடியோ ஆதாரம் இருப்பதாகச் சொன்னதும், நிருபர் நண்பர் ஒருவரால், இது பெரிதாகிவிட்டது. நான் அந்தளவுக்கு அடிக்கவில்லை. என் கை அந்தப் பெண் மீது படவே இல்லை. எம்எல்ஏ-வைப் பிடித்து மக்கள் ரகளைப்படுத்திக்கொண்டு இருந்தனர். எம்எல்ஏ-வை விடமாட்டேன் என்று சொன்னதும் அங்கு நான் சென்றேன். அப்போது நான் அடிக்கவில்லை என்றே, போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் மறுபடியும் தெரிவித்தார். இந்த மாதிரியான செயலை போலீஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், போலீஸாரின் மரியாதை குறைந்துவிடும். பெண்களையும், போராட்டக்காரர்களையும் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி பாண்டியராஜனிடம் கருத்துக் கேட்க, அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரது இரண்டு எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. அவரது விளக்கத்தையும் பதிவுசெய்ய தயாராக உள்ளோம். 

எஸ்.மகேஷ்


டிரெண்டிங் @ விகடன்