வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (12/04/2017)

கடைசி தொடர்பு:18:40 (12/04/2017)

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும், பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30-வது நாளாக போராடி வருகின்றனர் தமிழக விவசாயிகள். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான போராட்டத்தை மேற்கொண்டு வரும் அவர்கள் இன்று உடலில் கோரிக்கைகளை எழுதி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று விவசாயிகளைச் சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் ,'உத்தரப் பிரதேசத்தில் கடன் தள்ளுபடி செய்ததைப் போல, மாநில அரசு நினைத்தால் தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யலாம், மேலும் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யவில்லை' என கூறினார்.

மேலும் கடனை திருப்பி வசூலிப்பதில் உள்ள கெடுபுடிகளும் தளர்த்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். தமிழக விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக நான் தொடர்ந்து முயற்சிகள் எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்டோரிடம் போராட்டத்தைக் கைவிடும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.