கன்டெய்னர் யார்டில் குவிக்கப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா..! கண்டுகொள்ளாத அதிகாரிகள் #VikatanExclusive | Secret sales of gutka, pan masala flourish again in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (13/04/2017)

கடைசி தொடர்பு:09:54 (13/04/2017)

கன்டெய்னர் யார்டில் குவிக்கப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா..! கண்டுகொள்ளாத அதிகாரிகள் #VikatanExclusive

                           கன்ட்டெய்னர்

சென்னை கன்ட்டெய்னர் யார்டு ஒன்றில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பான் மசாலா,குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு, அவற்றை தமிழகம் முழுக்க விற்பனைக்கு அனுப்பும் வேலைகள் மிகவும் ரகசியமாக நடக்கிறது என்று படபடப்புக் காட்டுகிறார்கள் துறைமுக வட்டாரத்தில்.

தமிழகத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்க தடை உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் அவ்வப்பொழுது ரெய்டுகள் நடத்தி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள். ஆனாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் பான் மசாலா,குட்கா,புகையிலை பொருட்கள் விற்பனை இப்போதும் நடந்து வருவதுதான் வேதனையளிக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதிலும் குறிப்பாக வட சென்னை யின் முக்கிய பகுதிகளான, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் போன்ற பகுதிகளில் மிக வெளிப்படையாக கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், சென்னைத் துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கன்ட்டெய்ன ர்களில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் வடசென்னை யார்டுகளில் பதுக்கிவைக்கப்பட்டு டீலர்களுக்கு வழங்கப்பட்டு வரப்படுவதாகவும்  தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக சென்னைத் துறைமுக வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், "தமிழகம் முழுக்க பான்மசாலா, குட்கா மற்றும் போதைப் பாக்கு, போதை சாக்லேட் என்று அனைத்துவிதமான போதை வஸ்துகளும் விற்க தடை அமலில் உள்ளது. இது கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக இருக்கிறது. ஆனால், தமிழக அரசியலில் கடந்த எட்டு மாதங்களாக நிலவிவரும் குழப்பம் காரணமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை ஜோராக நடந்துவருகிறது. அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டாலும் ரெய்டுகள் நடக்கவில்லை. அதில் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அக்கறையில்லை. 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சென்னைத் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்றில் 5க்கும் மேற்பட்ட கன்ட்டெய்னர்கள் வந்திறங்கின. அந்த கன்ட்டெய்னர்கள் நேராக மணலிக்கு அருகில் உள்ள யார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த யார்டு ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது. அங்கே பதுக்கப்பட்டுள்ள அந்தப் பொருட்கள் அனைத்தும் ஆந்திரா மற்றும் வட இந்திய பகுதிகளில் இருந்து வந்தவை. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் குடிபெயர்ந்து வாழும் வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் தமிழக பான் மசாலா உட்கொள்வோரை இலக்காக வைத்து இந்தப் புகையிலைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது ரெய்டு விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள அமைச்சர் ஒருவரின் முழு ஆசீர்வாதம் இந்த தடை செய்யப்பட்ட வியாபாரத்திற்கு உள்ளது. அதனால் வணிகவரி, சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்.

                  கன்ட்டெய்னர்

இந்த விவகாரம் குறித்து வணிக வரித்துறை அமைச்சரே தமக்கு நெருங்கியவர்களிடம், 'கார்டனில் இப்போது யாரும் இல்லை. ஆனால் எல்லோரும் கார்டான்ல சொல்லிட்டாங்க என்று என்னிடமே கூறிவிட்டு கல்லா கட்டுறாங்க, அவங்களை எப்படி பிடிக்கிறதுனு தெரியல' என்று புலம்பியிருக்கிறார். அந்த அளவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை கொடிகட்டிப்பறக்கிறது." என்று தெரிவித்தார்.

  
- சி.தேவராஜன்


டிரெண்டிங் @ விகடன்