இதுதான் இப்போ ஆர்.கே நகர் மக்கள் மனநிலை!

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் 12-ம் தேதி (புதன் கிழமை ) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க  புரட்சித் தலைவி அம்மா அணி மது சூதனன், தி.மு.க அணியின் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. 

இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கடந்த 6-ம் தேதி நள்ளிரவு பணப்பட்டுவாடா தொடர்பாக கட்சிகளுக்குள் மிகப்பெரிய அளவில் அடிதடி நடைபெற்றது. இதனால் ஆர்.கே.நகர்த் தொகுதியே பதற்றமானது. இதையடுத்து மறுநாள் அதிகாலையிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கர்

இந்த சோதனையில்  பணப்பட்டுவாடா செய்வதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர் விஜயபாஸ்கர் என்றும் சொல்லப்பட்டது. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தபோது பணம் பட்டுவாடா தொடர்பாக அமைச்சர்களின் பெயர் பட்டியல் அடங்கிய ஆவணம் ஒன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம்  சிக்கியதாக கூறப்பட்டது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள்  குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தத் தகவல் தேர்தல் ஆணையத்துக்குப் போனது; ஆணையத்தில் உள்ள அதிகாரிகளும் ஆலோசனை செய்தனர். முடிவில், ஆர் .கே.நகர் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். 

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தும், விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை விவகாரமும் தொடர்ந்து கொண்டிருக்கையில் ஆர்.கே நகர் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்று அவர்களிடம் பேசினோம்.

ஆர் .கே .நகர் தொகுதி மக்கள்

ஆட்சி கவிழ்ந்துவிடுமா? கடையடைப்பு வருமா? 

சேணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லலிதாவிடம் பேசியபோது, "தொகுதியே அமைதியாக உள்ளது. ஒரு அரசியல்வாதியையும் இந்தப் பக்கம் பார்க்க முடியவில்லை. தேர்தல் அறிவித்த நாளில் இருந்து ஆர்பாட்டமாக இருந்தது. அதனால் அன்றாடவேலைகள் சிரமமாக இருந்தது. இங்குள்ள மக்களுக்கு பணம் என்பது அவசியம். அதனால், பணத்தை கொடுத்து எப்படியாவது தொகுதியைக் கைப்பற்றிவிடலாம் என்று கணக்கு போட்டார்கள். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இந்த பிரச்னைகள் ஒரு புறம் இருந்தாலும் தொகுதியின் பிரச்னைகளை தீர்க்க நிரந்தர உறுப்பினர் வேண்டும் அல்லவா? அதனால் தொகுதிக்கு தற்போது தேர்தல் தேவை" என்றார்   

ஆர்.கே.நகர் அம்மணி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்த செல்வியிடம் பேசிய போது, ''தொகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியல. இந்த தொகுதியில் உள்ள மக்கள், 'ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்று பேசிக் கொள்கிறார்கள். இதனால், 15-ம் தேதிக்குள்  கடை அடைப்பு வரும் என்று இங்குள்ள மக்கள் பேசுகின்றார்கள்.எங்களுக்கு எதுவுமே புரியவில்லை" என்றார் சோகமாக.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தோல்வி!

அதே தொகுதியைச்  சேர்ந்த மூர்த்தியிடம் பேசிய போது, "நடைபெற இருந்த தேர்தலை ரத்து  செய்திருப்பதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது என்று தெரிகிறது.பணம் கொடுப்பதை தடுக்காமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் தேர்தலை  நிறுத்தியிருப்பது சரியில்லை. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஆர்.கே.நகர் தொகுதி போவதற்கு பதிலாக அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது.இவையெல்லாம் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாமலா இருந்தது? 

பணம் பட்டுவாடா செய்தது இங்குள்ள அதிகாரிகளுக்கும் தெரியும். அதனால் ஆரம்பத்திலேயே தேர்தலை நிறுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தொகுதி மக்கள் நினைக்கிறார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு பணம் தேவையாக இருந்தாலும் அரசியல் கட்சிகளின்  கண்காணிப்பு வளையத்தை அவர்கள் விரும்பவில்லை. திரும்பவும் முதலில் இருந்தா? என்று பொருமுகின்றனர்" என்றார்.

தொகுதி மக்களிடையே பயம் உள்ளது! 

இது குறித்து ஆர்.கே.நகர்த் தொகுதியைச் சேர்ந்த ரவி என்பவரிடம் பேசிய போது, ''பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற முடிவில் இருந்தனர். இதில் தினகரன் தரப்புதான் அதிகமாக மக்களுக்கு பணம் கொடுத்துள்ளது. அதனால் இந்த தொகுதியில் இருக்கிற மக்களிடம் கொஞ்சம் பயமும் உள்ளது. தேர்தல் எதனால் நின்று போனது என்பது கூட சிலருக்கு தெரியவில்லை. ஆரம்பத்திலேயே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மக்களின் வரிப்பணம்தான் பழாகிறது. இது போன்று எதிர்காலத்தில் நடக்காதவாறு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை" என்றார். 

தேர்தல் சர்வே பணி தொடர்பாக நாம் அந்த தொகுதிக்கு சென்றிருந்தபோது தொகுதி மக்களைவிட அரசியல்வாதிகள்தான் அங்குள்ள தெருக்களை ஆக்கிரமித்திருந்தனர். வெளிப்படையாக கன ஜரூராக பணபட்டுவாடா நடைபெற்றது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படியிருக்க தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த முறைகேடு தெரியவில்லையா? என்பதுதான் நமது கேள்வி! 

- கே.புவனேஸ்வரி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!