Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமித் ஷா களமிறக்கிய அர்ஜுன் ராம் மேக்வால்! - தமிழ்நாட்டில் உ.பி ஃபார்முலா #VikatanExclusive

நரேந்திர மோடி

அ.தி.மு.க அரசின் அமைச்சர்களை குறிவைத்து வருமான வரித்துறையின் விசாரணை ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், 'தமிழகத்துக்கான முக்கிய அசைண்மென்டுகளை தயாரித்து வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அனுப்பப்பட்டிருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பியது. அதற்கேற்ப, 'அ.தி.மு.கவுடன் அணி சேர்ந்தால் அது இயற்கையான கூட்டணியாக இருக்கும்' என பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வந்தனர். ஆனால், 'சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும்' என்பதால், பிரதமர் மோடியின் கோரிக்கையை நிராகரித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தேர்தலிலும் 37 எம்.பிக்கள் அ.தி.மு.கவுக்குக் கிடைத்தனர். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். "போயஸ் கார்டனுக்கே நேரடியாக வந்து ஜெயலலிதாவை சந்தித்தார் மோடி. கூட்டணி குறித்த எந்த சிக்னலையும் அவர் கட்டாததால், பா.ஜ.க மேலிட நிர்வாகிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர். அந்தக் கோபத்தைப் பல வகைகளிலும் வெளிப்படுத்தினர். இதற்கெல்லாம் அஞ்சாமல், சரக்கு சேவை வரி, உதய் மின் திட்டம் உள்பட மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பல திட்டங்களை நேருக்கு நேராக எதிர்த்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு நிலைமைகள் மாறத் தொடங்கிவிட்டன. 'ஆட்சியில் இருப்பவர்கள் நெருங்கி வந்தாலும், அ.தி.மு.கவின் வாக்கு வங்கியை உடைத்தால் மட்டுமே பா.ஜ.கவுக்கான இடம் உறுதி செய்யப்படும்' என்ற நோக்கில்தான் வருமான வரித்துறை சோதனைகள் வேகம் பெறத் தொடங்கின" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

அர்ஜுன் ராம் மேக்வால்“ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் இருந்தே, அமைச்சர்களின் பணப் போக்குவரத்துகள் குறித்த அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டுவிட்டன. சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை மட்டும் ஒத்தி வைத்தது நிதித்துறை அமைச்சகம். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி மிக விரைவாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணமே, தமிழ்நாட்டுக்கான ஆப்ரேஷனை வேகப்படுத்துவதற்குத்தான். அதிலும், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு நெருக்கமான அமைச்சர்களை மட்டும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். நாங்கள் நினைத்தபடியே, ஊழலுக்கான அனைத்து ஆதாரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விசாரணைகளின் மூலம் ஆளும்கட்சியை பல துண்டுகளாக சிதறடித்து, பலவீனப்படுத்துவது முக்கிய நோக்கம் என்றாலும், உத்தர பிரதேசத்தில் அமல்படுத்திய தேர்தல் பார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா. அதன் ஒருபகுதியாகத்தான் ராஜஸ்தானைச் சேர்ந்தவரும் அட்டவணை சமூகத்தைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை நியமித்திருக்கிறார்.

அமித் ஷா'பா.ஜ.கவுக்கு ஆதரவான அட்டவணை சமூகத்துப் பிரதிநிதிகளை ஒருங்கிணைப்பதும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் அந்த மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை' என்பதை பிரசாரமாகக் கொண்டு செல்வதும் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதுதவிர, தமிழக அமைச்சரவையில் குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு மட்டுமே தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் அதிகாரத்தில் எந்தப் பயனையும் அடையாமல் தவிக்கும், மொழிவழி சிறுபான்மை மக்கள் கணிசமாக உள்ளனர். இவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், தேர்தல் வெற்றி மிக எளிதாகிவிடும் என பா.ஜ.க தலைமை நம்புகிறது. அட்டவணை சமூகம், நாடார் சமூகம், மொழிவழி சிறுபான்மை என மிக முக்கியமான பிரிவுகளை ஒன்றிணைக்கும் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறார் அமித் ஷா. வரக் கூடிய நாட்களில் இந்த ஆப்ரேஷன் வெளிப்படையாகவே நடக்கும்" என்றார் விரிவாக.

"தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது படிப்படியான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது வருமான வரித்துறை. திராவிட இயக்கங்களுக்கு எதிரான ஓர் அணியைக் கட்டமைக்கும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. 'தமிழக அரசைக் கலைக்கும் முயற்சி நடந்தால், அரசியலுக்கு வருவதற்குத் தயங்கும் நடிகர்கள் பா.ஜ.கவை நோக்கி வருவார்கள்' என நம்புகிறார் அமித் ஷா. அப்படி ஒரு சூழல் வரும்போது, பெரும்பான்மை சமூகங்களை வளைக்கும் திட்டமும் இருக்கிறது. அதன் ஒருபகுதியாக தினகரனுக்கும் கொங்கு மண்டல லாபிக்கும் இடையில் கலகத்தை உருவாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. உ.பி தேர்தல் பார்முலாவை தமிழகத்தின் சூழலுக்கு ஏற்பட நடைமுறைப்படுத்துவது குறித்துத்தான் தீவிர ஆலோனையில் இறங்கியிருக்கிறது அகில இந்திய பா.ஜ.க தலைமை" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

அதற்கேற்ப, தேர்தல் ஆணைய விசாரணை; வருமான வரித்துறை விசாரணை; பெரா வழக்குகள்; அ.தி.மு.கவுக்கான அங்கீகாரம் என பலகட்டத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார் தினகரன். 'கத்திக்கும் ரத்துக்கும் அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்' என மத்திய அரசை நேரடியாக எதிர்க்கவும் அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். 

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement