‘மாவட்டச் செயலாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் திடீர் உத்தரவு!’ - ‘ஸ்டாம்ப்’ பேப்பர்களுடன் அலையும் சசிகலா அணி #VikatanExclusive | T.T.V.Dinakaran's sudden order to the District Secretaries

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (13/04/2017)

கடைசி தொடர்பு:13:13 (13/04/2017)

‘மாவட்டச் செயலாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் திடீர் உத்தரவு!’ - ‘ஸ்டாம்ப்’ பேப்பர்களுடன் அலையும் சசிகலா அணி #VikatanExclusive

டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனன்

சசிகலா அணியில் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து திடீரென ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, அனைத்து நிர்வாகிகளிடமும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்து பெற்று கட்சித்தலைமையிடம் ஏப்ரல் 17க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகார மோதலால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்து செயல்பட்டுவருகின்றது.. சசிகலா தரப்பு அணியினர் ஆட்சியைப் பிடித்தாலும், அடுத்தடுத்து வந்த சோதனைகளால் அல்லல்பட்டு வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலா, பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் உரிமை கோரியதால், சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

வாக்காளர்களுக்குப்  பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனால், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆர்வமாக இருக்கும் டி.டி.வி.தினகரன், அதுதொடர்பான உத்தரவை மாவட்டச் செயலாளர்களுக்குப் பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து, நம்மிடம் பேசிய மாவட்டச் செயலாளர்கள், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்ட பின்னணியில் சிலரது சதி வேலை இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மெஜாரிட்டி எம்எல்ஏ-க்கள் இருந்த அகிலேஷ்யாதவ்வுக்கு சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால், தமிழகத்தில் மெஜாரிட்டி எம்எல்ஏ-க்கள் எங்களிடம் இருந்தும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. சின்னம் முடக்கப்பட்ட நிலையிலும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திவிட்டோம். தேர்தலில் எங்களுடைய வெற்றி உறுதியானது தெரியவந்ததும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா என்ற காரணத்தைச் சொல்லி, தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் நடத்தினால், நாங்கள்தான் வெற்றிபெறுவோம்.

 

   முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டி.டி.வி.தினகரன்,

தேர்தல் நிறுத்தப்பட்டவுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். இதுதொடர்பாக, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு திடீரென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், பதவிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளிடமும் உறுதிமொழிக் கையெழுத்து பெற்று, கட்சித் தலைமைக்கு ஏப்ரல் 17க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாங்கள் 20, 50, 100 ரூபாய் ஆகிய மதிப்பிலான ஸ்டாம்ப் பேப்பர்களை மொத்தமாக வாங்கி, நிர்வாகிகளிடம் கையெழுத்துப் பெற்றுவருகிறோம். இதனால், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள் வீடு, அலுவலகங்களில் கையெழுத்து போட நிர்வாகிகளின் கூட்டம் அலைமோதுகின்றன. ஒரே நேரத்தில் மொத்தமாக ஸ்டாம்ப் பேப்பர்களை வாங்கியதால், அதற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்டாம்ப் பேப்பர்கள் கிடைக்காதவர்கள், கட்சியில் ஏற்கெனவே வாங்கி வைத்தவர்களிடம் பெற்று வருகின்றனர். நிர்வாகிகளிடம் பெறப்படும் கையெழுத்துகளை, கட்சியில் உள்ள சட்ட நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள், அதைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, எங்களது மெஜாரிட்டியை நிரூபிப்போம். இதனால், முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றனர். 

 

ஜெயலலிதா

கட்சித் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் மனநிலையில் மாற்றம் தெரியத்தொடங்கியுள்ளது. இது, எங்களது கவனத்துக்கு வந்ததும், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினோம். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. அடுத்து, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அ.தி.மு.க-வை அழிக்க சதி வேலைகள் நடந்துவருகின்றன. அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். வருமானவரி சோதனை எங்களைப் பயமுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆட்சியைக் கலைக்க பன்னீர்செல்வம் மூலமாக பா.ஜ.க. முயற்சிசெய்தது. ஆனால், அவர்களின் திட்டம் பலிக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எங்களுக்கு பல வகையில் சிரமங்களைக்கொடுத்தனர். அதையும் அமைதியாகப் பொறுத்துக்கொண்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். எங்களைக் குறிவைத்து தேர்தல் ஆணையம் செயல்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. 

கட்சியில் உள்ள சில நிர்வாகிகளிடம், எதிரணியினர் டீலிங் பேசுவதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் எங்கள் அணியில் இல்லை. நாங்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள்.  ஜெயலலிதாவின் நல்லாட்சியைத் தொடர்வோம். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படப்போவதாக வதந்திகள் வேகமாகப் பரப்பிவிடப்படுகின்றன. அமைச்சர்கள் சிலர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர உள்ளதாகவும் பொய்யான தகவல்களைச் சொல்கின்றனர். இதையெல்லாம் அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்" என்றார். 

- எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close