‘25 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுங்கள் தினகரன்!’ - ஆர்.கே.நகர் கணக்கு சொல்கிறார் சீமான் #VikatanExclusive | Seeman slams EC for ban R.K.Nagar byelection

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (13/04/2017)

கடைசி தொடர்பு:10:51 (14/04/2017)

‘25 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுங்கள் தினகரன்!’ - ஆர்.கே.நகர் கணக்கு சொல்கிறார் சீமான் #VikatanExclusive

சீமான்

ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதன் மூலம் கொந்தளிப்பில் இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘பணம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்குக்கூட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. தேர்தலை நேர்மையாக எதிர்கொண்ட நாங்களும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறோம்" எனவும் கொந்தளிக்கிறார். 

அ.தி.மு.க அம்மா அணி சார்பாக, வாக்காளர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் விநியோகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 89 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். 'பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்துள்ளன. "ஆளும்கட்சி பண விநியோகத்தில் ஈடுபட்டதைக் கணக்கில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சியான தி.மு.க பணம் கொடுத்ததை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? அவர்கள் நான்காயிரம் ரூபாய் கொடுத்தனர். இவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தனர். அப்படி இருக்கும்போது தி.மு.கவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது பாரபட்சமானது. நாங்கள் தொகுதி முழுவதும் வலம் வந்தோம். இளைஞர்களும் பெண்களும் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தனர். தெருத் தெருவாக நடந்து போய் பிரசாரம் செய்தேன். மாற்றுக்கான தொடக்கமாக ஆர்.கே.நகர் அமையும் என நம்பிக்கொண்டிருந்தோம். தேர்தலை ரத்து செய்ததன் மூலம் எங்கள் உழைப்பு வீணாகிவிட்டது" என ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார் சீமான். 

தினகரன்"எனக்காகத்தான் தேர்தலையே தள்ளி வைத்திருக்கிறது பா.ஜ.க. மாற்றுக்கான அரசியலில் நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம். ஆர்.கே.நகர்த் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் இருந்தது. எங்கள் இடத்தில் பா.ஜ.க இருந்திருந்தால், தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். நான்காவது இடத்தை நோக்கிச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அவர்கள் கால்பதிக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. என்ன செய்வது என்ற குழப்பம் நீடித்ததால், பணத்தைக் காரணம் காட்டி ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்துவிட்டார்கள். 'பணத்தை வைத்து ஓட்டுக்களை வாங்க வேண்டும்' என்ற நோக்கில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வேலை பார்த்தன.

அ.தி.மு.க என்ற கட்சி இருக்கிறது. ஆனால், அதன் அமைப்பு செத்துவிட்டது. அவர்களிடம் இறுதியாக இருக்கும் ஒரே கருவி பணம்தான். அதை வைத்துத்தான் தேர்தலை எதிர்கொண்டார்கள். மகாராஷ்ட்ராவில் உள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை துரைமுருகன் சென்று பார்க்கிறார். ஆனால், ஒரு மாதமாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகளின் பிரச்னையைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் தி.மு.க ஏன் சந்திக்கிறது என்றால், ஆட்சியைக் கலைத்துவிட்டு அதிகாரத்துக்குள் வர வேண்டும் என்பதற்காகத்தான். தமிழ்நாட்டை ஆளும் கட்சிக்கோ, கட்சியைக் காப்பாற்றவும் சின்னத்தைக் காப்பாற்றவுமே நேரம் சரியாக இருக்கிறது. இதுவே இவர்களின் பெரும் லட்சியமாக இருக்கிறது. தேர்தலைத் தள்ளி வைத்ததன் நோக்கம்தான் என்ன? 

இதேபோல்தான், தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலைத் தள்ளி வைத்தார்கள். மீண்டும் அதே வேட்பாளர்கள்தான் போட்டியிட்டார்கள். 'இனி பணம் கொடுக்கக்கூடிய சூழல் உருவாகாது' என்ற உத்தரவாதம் அளித்தால், தேர்தலைத் தள்ளி வைத்ததில் பயன் உண்டு. ஆர்.கே.நகர் தேர்தலைத் தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை அல்ல. மாணவர்கள் தேர்வு எழுதும்போது, எதாவது ஒரு மாணவன் பார்த்து எழுதினால், அவரை மட்டுமே தேர்வு அரங்கில் இருந்து வெளியேற்றுவார்கள். அதைப் போல ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் கொடுத்தவர்களைக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். நேர்மையாகப் பணியாற்றிய எங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறது தேர்தல் ஆணையம்? எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலுக்காக 25 லட்ச ரூபாயை செலவழித்திருக்கிறோம். எங்கள் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது. யாருக்காகத் தேர்தலை ரத்து செய்தீர்களோ, அவர்களிடம் இருந்து எங்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுங்கள். தவறு செய்த வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் ஆயுள் முழுக்க போட்டியிடுவதற்குத் தடை விதித்திருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வந்திருக்கும். அதை விட்டுவிட்டு தேர்தலையே தள்ளி வைப்பதன் மூலம் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இதைத் தேர்தல் ஆணையத்தின் பிழையாகத்தான் பார்க்கிறோம். பணம் கொடுப்பதைத் தடுக்க முடியவில்லையென்றால், தேர்தல் ஆணையம் எதற்கு?" என்றார் கொந்தளிப்புடன். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close