வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (13/04/2017)

கடைசி தொடர்பு:17:30 (13/04/2017)

முன்ஜாமீன் மனு தள்ளுபடி! மைனா நந்தினி கைதாவாரா?

கணவர் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகை நந்தினி, அவரது தந்தை ராஜேந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் மைனா நந்தினி என அழைக்கப்பட்டு வருகிறார். பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும், வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிகை நந்தினி நடித்துள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் என்பவரை கடந்தாண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நந்தினி. சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்திருந்த கார்த்திக், வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி விருகம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது, கைப்பற்றப்பட்ட கடிதத்தில், எனது தற்கொலைக்கு நந்தியின் தந்தை ராஜேந்திரன்தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தார் கார்த்திக். இது தொடர்பாக இரண்டு பேர் மீதும் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகை நந்தினி, அவரது தந்தை ராஜேந்திரன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு பேரும் கைதாகலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.