வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (13/04/2017)

கடைசி தொடர்பு:16:00 (14/04/2017)

’ஆபரேஷன் தமிழ்நாடு' பி.ஜே.பி-யின் திட்டம்... ஓ.பன்னீர்செல்வம் சம்மதம்!

பி.ஜே.பி

தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா காரணங்களினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இது களத்தில் இருந்த பல்வேறு வேட்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தன. ''தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை. இது திட்டமிட்ட நாடகம்'' என்று அ.தி.மு.க (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடுகடுத்துள்ளார்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஒரு மாணவன் காப்பி அடித்தார் என்பதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வீர்களா? அதுபோலவே ஒருவர் தவறு செய்தால் எப்படி ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யலாம்'' என்று அதிருப்தி கருத்துகளை வெளியிட அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் ஓ.பி.எஸ் முகத்தில் வருத்தமில்லை. ''வருமானவரித் துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. விரைவில் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும்'' என்று உடனடியாக கருத்தும் தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

ஏன்?

பி.ஜே.பி-யின் தலையாட்டிப் பொம்மையாகிவிட்டார் ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்திக்கொண்டு தி.மு.க-வுக்கு எதிராக அவர்கள் செய்த லாபியே தேர்தல் ரத்து. இது, ஆண்டாண்டுக்காலமாகத் தொடரும் சித்தாந்தரீதியான போரின் தொடர்ச்சி'' என்று புது பார்வையை வெளிப்படுத்துகின்றனர் நம்மைச் சந்தித்த மூத்த தி.மு.க-வினரும், திராவிடச் சிந்தனையாளர்களும். அதுகுறித்து விரிவாகப் பேசத் தொடங்கினர்.

"ஒருபக்கம், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் ஜா. - ஜெ. என இரண்டு அணிகளானது அ.தி.மு.க. மறுபக்கம், 13 ஆண்டுகள் தி.மு.க எதிர்க்கட்சியாகவே இருந்த சூழல். இவையிரண்டையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ்விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் மறைந்த ராஜீவ் காந்தி . ஜானகியின் ஆட்சி கலைந்து பொதுத் தேர்தலும் வந்தது. தமிழ்நாட்டு வீதிகளில் திறந்த ஜீப்களில் பிரசார பவனி வந்தார் ராஜீவ். இப்போது ராகுல் அடிக்கும் ஸ்டென்டுக்கு அவரின் தந்தையாரே முன்னோடி. திடீர் திடீரெனெ ஓலைக் குடிசைகளுக்குள் நுழைந்த ராஜீவ், அங்குள்ள முதிய பெண்மணிகளிடம் கூழ், களி வாங்கிச் சாப்பிட்டு போஸ் கொடுத்தார். எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தை அடையவேண்டும் என்பதே அவரின் ஒற்றை நோக்கம். ஆனால், முடிவு வேறுவகையானது. தனித்த ஆளும் கட்சியாக தி.மு.க-வைத் தேர்வு செய்திருந்தனர் தமிழ்நாட்டு மக்கள். அப்போதைய ஆளும் கட்சியின் பிரிவு, மூத்த திராவிடக் கட்சியான தி.மு.க-வுக்கே சாதகமாக அமைந்தது. இப்போது அப்படியே தற்காலமான 2017-க்கு வாருங்கள். ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தில் ஆட்சிக் கலைப்பு என்பது நிச்சயம் தமக்குச் சாதகமாக அமையாது. அதேநேரம் தமது கொள்கைக்கு நேரெதிரான தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தது பி.ஜே.பி. 

பி.ஜே.பி வலையில் ஓ.பி.எஸ்.! 

பிரச்சாரம்

ராஜீவ் காந்தி செய்த தவற்றை மோடியும், அமித்ஷாவும் செய்யத் துணியவில்லை. இந்த நேரத்தில் ஓ.பி.எஸ்ஸின் முதல்வர் பதவி ராஜினாமாவால் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களைத் தமக்கான நோக்கங்களுக்குப் பயன்படுத்த விளைந்தது. காரணம், இந்திய நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலத்தோடு பி.ஜே.பி இருந்தாலும், பல மாநிலங்களில் வலுவாக மாறினாலும் பெரியார் - திராவிடம் - சுயமரியாதை - தமிழ் என்ற தத்துவார்த்த அரசியல் பின்புல பலத்தோடு இயங்கும் தமிழ்நாடு அரசியல் சூழலில் தமது இருத்தல் என்பது அந்தரத்தில் கயிற்றில் தொங்குபவர்போலத்தான். இதை நன்கு உணர்ந்தே உள்ளது பி.ஜே.பி. இப்படிப்பட்டச் சூழலில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தமக்கான இலக்குகளை அடைய பயன்படுத்த விளைந்தது பி.ஜே.பி.
சசிகலா முதல்வராவதற்காக, தமது முதல்வர் பதவியைத் துறக்க வேண்டியதைக் கண்டு கடுகடுப்பில் இருந்தார் ஓ.பி.எஸ். இதைப் பயன்படுத்தி அவரின் நெருங்கிய வட்டாரங்களை நோக்கி வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. பிறகென்ன பி.ஜே.பி வலையில் வீழ்ந்து சரண்டரானார் ஓ.பி.எஸ். இது ஒருபக்கம் இருந்தாலும்... மறுபக்கம், ஓ.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை தமது முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்ததால், மத்திய பி.ஜே.பி-யுடன் சுமுக உறவைப் பேணிவந்தார். தனிப்பட்டளவில் ஜெ-விடம் காட்டிவந்த பவ்யத்தை அப்படியே பிரதமர் மோடியிடம் காட்டினார். ஜெ. மறைந்த அன்று ஓ.பி.எஸ் மோடியிடம் நெருங்கிச்சென்று அழுதது ஓர் உதாரணம். இந்தவகையில்தான் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு புதிய எழுதப்படாத கூட்டணி அமைந்தது'' என்று நீண்ட முன்னுரை கொடுத்தவர்கள், சில நிமிட மௌனத்துக்குப் பிறகு, ''இதில் ஒரு மீடியேட்டர் முக்கியப் பங்கு வகிக்கிறார் தெரியுமா'' என்று ட்விஸ்ட் வைத்துத் தொடர்ந்தனர்.

மீடியேட்டர் ஆடிட்டர்:

''ஜெ-போல் அதே இனத்தைச் சேர்ந்த தீபாவை ஓர் இயங்கு சக்தியாக, ஒரு தலைமையாக உருவாக்கத் தொடக்கத்தில் துடித்தார் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் 'ஆடிட்டர்'. ஆனால், அவரின் செயல்பாடுகள் திருப்தியடையாத அந்த நேரத்தில் ஓ.பி.எஸ் மூவ்கள் தனித்தச் செல்வாக்கை மக்களிடம் உருவாக்க, அவருக்கு அரசியல் ஆலோசகர்போலவே மாறினார் அந்த ஆடிட்டர். ஜெ-வுக்கு ஒரு சோபோல ஓ.பி.எஸ்ஸுக்கு ஓர் 'ஆடிட்டர்'. இதன்பின்தான் சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஒட்டி 'ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நுழைந்துவிட்டது' என்று ஓ.பி.எஸ் பேசினார். 'பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்தில் வந்த செய்தியை அப்படியே முதல்வர் வாசித்துள்ளார்' என்ற கமென்ட்கள் அப்போது ஒலித்தன என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினார் ஓ.பி.எஸ். இப்படிப் பி.ஜே.பி-யிடமான அவரின் விசுவாசம் சிறப்பான வகையில் இருந்தது. சசிகலா சிறைக்குப் பின் எப்படியும் கட்சியைக் கைப்பற்றிட ஓ.பி.எஸ் துடித்தார். அவர் பின்னணியில் இருந்த எம்.பி மைத்ரேயன், பிறகு இணைந்த மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் பி.ஜே.பி-யில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, மறுபுறம் தமது டெல்லி லாபி மூலம் பி.ஜே.பி-யைச் சரிக்கட்ட சசிகலா தரப்பில், ம.நடராஜன் முயற்சித்தார். ஆனால் 'ஆடிட்டர்' மூலம் பெறப்பட்டத் தகவல்கள் மூலம் ஓ.பி.எஸ் பக்கமே நின்றது அதே பி.ஜே.பி.

பி.ஜே.பி. பிளான்:

தற்போதையச் சூழலில் தேர்தலைச் சந்தித்தால் வெற்றியைப் பெற இயலாது. கடந்த தேர்தலில் வெறும் ஒன்றேகால் சதவிகிதத்தில் ஆட்சியதிகாரத்தை இழந்த தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டு. ஆக, தமது கட்சியைச் சித்தாந்தரீதியாக கீழ்மட்டக் கிளையில் இருந்து வலுப்படுத்த கால அவகாசம் தேவை. அதன்மூலம் தமிழ்நாட்டில் முக்கியச் சக்தியாக மாற வேண்டும். அதுவரை தமது கோட்பாடுகளுக்கு விரோதமில்லாத ஒரு பொம்மை அரசாங்கம் வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓ.பி.எஸ்ஸை தஞ்சாவூர் பொம்மைபோல பயன்படுத்த விளைந்தது பி.ஜே.பி. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட அவகாசத்தால் அவரால் தனிப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுவர முடியாததால், இறுதியாகக் கவர்னர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் - ஆடிட்டர் அசைன்மென்ட்:

ஓ.பி.எஸ்

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பி.எஸ் அணியின் வெற்றியின் மூலம் மக்களிடம் அடுத்த சக்தியாக நிலை நிறுத்துவது. இதன்மூலம் மேலும் பல எம்.எல்.ஏ-க்களை இந்த அணி பக்கம் திருப்பலாம். நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்டு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றலாம். நிழல் கூட்டணியாகத் தொடர்ந்து, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையான கூட்டணியாக அமைத்து தமிழ்நாட்டில் தனிப்பெரும் வெற்றியைப் பெறலாம் என பி.ஜே.பி திட்டமிட்டது. இதற்கு ஆர்.கே.நகர் வெற்றி அவசியம். எனவே, 'ஆடிட்டர்' மூலம் வழிகாட்டுதல்களைப் பி.ஜே.பி வழங்கியது. இதைக் கண்காணிப்பது மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆவார். தொடர்ந்து தேர்தல் அசைவுகள் உடனுக்குடன் அவர் கவனத்துக்குக் கொண்டு சென்ற 'ஆடிட்டர்', அங்கிருந்து வரும் தகவல்களை ஓ.பி.எஸ்ஸிடம்  பகிர்ந்தவண்ணம் இருந்தார்.

பணப்பட்டுவாடா... தப்பித்த ஓ.பி.எஸ் அணி:

தினகரன் தரப்பில் ஓர் ஓட்டுக்கு ரூபாய் 4,000/- என 85 சதவிகித வாக்காளர்களுக்கு பட்டுவாடா நடந்தது. 'நம்ம கட்சி வாக்காளர்களே பூத்துக்கு வருவங்களான்னு சொல்ல முடியாது. அதனால நம்ம ஆட்களுக்கு நாம கொடுக்கணும்' என தி.மு.க, 40 சதவிகிதம் அளவுக்கு தலா ரூபாய் 2,000/- பட்டுவாடா செய்தது. ஆனால் ஓ.பி.எஸ் அணி என்ன செய்தது? தினகரன் எவ்வளவு கொடுக்கிறாரோ அதிலிருந்து முடிவு செய்துகொள்ளலாம் என்று தொடக்கத்தில் பொறுமையாக இருந்தவர்கள், அதன்பின் ஓட்டுக்கு ரூபாய் 3,000/- கொடுக்க முடிவெடுத்தனர். 40 சதவிகித வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டு, நேதாஜி நகர் உள்ளிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட அளவில் டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. சனி இரவு (08-04-17) அன்று பட்டுவாடா செய்யும் ஏற்பாடுகளை பன்னீர்செல்வம் அணீயினர் செய்தனர் . இந்த நிலையில் தேர்தல் ரத்து ஆகலாம் என்ற சந்தேகங்கள் சனிக்கிழமையில் இருந்து எழ ஆரம்பித்தன. அதனால் பணப்பட்டுவாடாவை நிறுத்திவைத்தனர். ஜி.கே.வாசனுடன் இணைந்து செய்யும் தமது பிரசாரத்துக்குக்கூட நேரத்துக்குப்போகாமல் தள்ளிப்போட்டபடியே இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அன்று தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. எனவே, சனிக்கிழமை இரவு பிரசாரத்தில் ஆஜரானார் ஓ.பி.எஸ். அதேநேரம், 'மேலே நான் பேசிவிட்டு வருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்' என்று ஆடிட்டரிடமிருந்து ஓலை வந்தது. அதனால், பணப்பட்டுவாடா பணிகளை நிறுத்திவைத்த ஓ.பி.எஸ் அணி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (09-04-17) இரவு தொடங்கும் அந்த பிராக்சன் ஆஃப் செகண்டில் 'வேண்டாம். நள்ளிரவில் தேர்தல் ரத்து அறிவிப்பு வரலாம். இந்த முறை தவறாது' என்று ஆடிட்டரிடமிருந்து சிக்னல் வந்தது. அதேபோல தேர்தல் ரத்து செய்யப்பட பணப்பட்டுவாடாவை அமல்படுத்தவில்லை ஓ.பி.எஸ் அணி.

தி.மு.க-வுக்கு எதிரான மூவ்:

இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றியைவிட, தி.மு.க-வின் வெற்றி, தமது இலக்குகளுக்குத் தடையாக இருக்கும் என்று கருதியது பி.ஜே.பி. தேசியளவில் உள்ள சில ஊடகங்களின் கருத்து கணிப்புகள் தி.மு.க வெற்றிபெறும் என்று வெளியிட்டன. மத்தியப் புலனாய்வு பிரிவு ஐ.பி ரிப்போர்ட்கூட, இரண்டு அ.தி.மு.க-வும் கடுமையாக மோதிக்கொள்வதால் பிரியும் வாக்குகள் மூலம் தி.மு.க வெற்றிபெற சாத்தியங்கள் உண்டு என்று இதையே தெரிவித்தது. இதன்பின்னே தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் ரத்துக்கு நிர்பந்தம் கொடுத்தது பி.ஜே.பி. ஜெ. நின்ற முந்தைய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வெளித் தொகுதி ஆட்கள் எல்லாம்வந்து வாக்களித்தனர். பணம் தண்ணீரைப்போல செலவு செய்யப்பட்டது. அது, ஆதாரப்பூர்வமாகவே வெளியானது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்முறை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள்கூடப் பெரிதாகப் புகார் கொடுக்காத நிலையில், லட்சங்களில் பிடிபட்ட குறைந்த தொகையை ஆதாரங்களில் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு தேர்தலையே ரத்து செய்கிறார்கள் என்றால், அதன் நோக்கம் என்பது என்னவென்பதை மேலே நாம் பேசியதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்'' என்றனர் மிக ஆழமாக.

ஓ.பி.எஸ்

தி.மு.க ஆதரவாளர்களின் கருத்துகள் இவ்வகையாக இருக்க, ''தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றுவதற்காகவே திட்டமிட்டுத் தேர்தலை ரத்துசெய்ய வைத்துவிட்டார்கள் என பி.ஜே.பி மீதும், மத்திய அரசு மீதும் எவ்வித அடிப்படையும் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் ரத்துக்கு எந்தவிதத்திலும் பி.ஜே.பி காரணம் அல்ல... மக்களின் ஆதரவுடன் பல மாநிலங்களில் பலம் வாய்ந்த கட்சியாக மாறிவரும் பி.ஜே.பி-க்கு வேறு வழிகளில் பலம் பெறவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார் பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்க இயலுமா!

சே.த .இளங்கோவன்


டிரெண்டிங் @ விகடன்