Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களின் வாழ்க்கையை அழித்து கிடைக்கும் வருமானம் அரசுக்குத் தேவையா? - அரசுக்கு ஒரு கேள்வி!

மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள்

துக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் பெண்களும் வீதியில் இறங்கிப் போராடும் சூழல் இன்றைக்கு அதிகரித்துவருகிறது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் மறுவாழ்வு மையம் மூலமாக, 35 ஆண்டுகளாக புது வாழ்க்கையை அளித்து சேவை செய்துவருபவர் சாந்தி ரங்கநாதன். இவர் தன்னுடைய டி.டி.கே. குழுமத்தின் மூலமாக, குடிக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை, விழிப்புஉணர்வு, ஆராய்ச்சி, கல்விச் சேவை எனப் பல செயல்பாடுகளைச் செய்துவருபவர். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கணவரை, தன் முப்பதாவது வயதில் இழந்தவர். தன்னை போன்ற நிலை மற்ற பெண்களுக்கும் வரக்கூடாது என நினைத்தார். அதற்காக, அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை முறைகளைக் கற்றார். பின்னர், தமிழகத்துக்கு வந்து தன் சேவைப் பணிகளை தொடங்கினார். ஆண்களின் குடிப் பழக்கத்தால் பெண்களும், குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலையை தன் 35 ஆண்டுக்கால அனுபவத்தில் பகிர்கிறார்... 

"ஆண்களின் குடிப் பழக்கத்தால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். தன் மகன், கணவரின் எதிர்காலம், குடிப் பழக்கத்தால் அழிவதைப் பார்த்தபடியே ஒவ்வொரு நாளையும் வேதனையுடன் கடத்துகிறார்கள். குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற அல்லும் பகலும் உழைச்சு சம்பாதிக்கிறாங்க. ஆனால், அந்தப் பணத்தையும் அடிச்சு பிடிங்கிட்டுப் போகும் குடிமகன்களால் வீட்டுல ஐம்பது ரூபாயைக்கூட தைரியமா வெச்சுக்க முடியாத சூழல். இப்படி ஆண்களின் குடிப் பழக்கத்தால் குடும்ப சந்தோஷமும் பொருளாதாரமும் அழியுது. சமூக வன்முறையும் பெருகுது. தங்கள் பாதிப்புகளுக்கு எதிராக பெண்கள் கடைசி முயற்சியா வீதியில் இறங்கி போராடுறாங்க. அதை உணர்ந்து உடனே மதுக்கடைகளை மூடுறதுதானே அரசின் கடமையா இருக்கணும்? ஆனால், தவறான அணுகுமுறையோடு அதை ஒடுக்கறது பாதிக்கப்பட்ட பெண்களை மனதளவில் இன்னும் அதிகமாகக் காயப்படுத்தும். 

மறுவாழ்வு மையம் நடத்திவரும் சாந்தி ரங்கநாதன்

உலகச் சுகாதார நிறுவனமே, 'ஏற்கெனவே இருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கணும். கடைகள் திறக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கணும். மதுபானங்களின் விலையை உயர்த்தணும், மதுக்கடைகளை மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் வைக்கக்கூடாது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுறவங்களுக்கு தண்டனையை கடுமையாக்கனும்'னு பல விஷயங்களை சொல்லியிருக்காங்க. அதேமாதிரி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில்... தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் இருக்கக் கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் சொன்னதையும் அரசு நியாயமா நிறைவேத்தணும். மதுபானங்களை வாங்கும், குடிக்கும் நிலையைக் கஷ்டமானதா அரசு செஞ்சுட்டா, இயல்பாகவே குடிப்போரின் எண்ணிக்கையும் குறையும்.

வருமானம் ஒன்றையே பிரதான நோக்கமா பார்க்கக் கூடாது. பெண்களின் கண்ணீரிலும் கவலையிலும் வரும் வருமானம் அரசுக்குத் தேவைதானா? மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைத் தொடங்கி, அரசு வருமானம் சம்பாதிக்கலாமே. பெண்களும் மனுஷிங்கதானே. அவங்க உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கவேண்டிய பொறுப்பு, ஆண்களுக்கும் அவர்களை குடிக்கு அடிமையாக்கும் அரசுக்கும் இருக்க வேண்டாமா?'' என்கிற சாந்தி ரங்கநாதன், மதுப் பழக்கத்தை நோக்கிச் செல்லும் ஆண்களுக்கு ஆலோசனைக் கூறுகிறார். 

"கையில் பணப்புழக்கம் அதிகமா இருக்கும்போது பல ஆண்கள் குடியைத் தேர்வுசெய்றாங்க. இந்தக் குடிப்பழக்கம் ஏழை, நடுத்தர குடும்பங்களைத் தாண்டி, வசதியான குடும்பங்களிலும் மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கிட்டு இருக்கு. குடி நோயாளியாகி, குடியின் கெடுதலை உணர்ந்து, அதுக்குப் பிறகு மறுவாழ்வு மையங்களுக்கு வருவதைவிட, குடியைத் தொடாமல் இருக்குறது சிறந்தது. இன்னைக்கு இளைஞர்கள், தங்களின் சந்தோஷ மனநிலைக்கான அடையாளமா குடியை நினைக்கிறாங்க. அதுக்குப் பதிலா, வேறு மகிழ்ச்சியான விஷயங்களைத் தேர்வுசெய்யலாம். நூலகம் போகலாம், எல்லோருக்கும் பயன்தரும் சமூக விஷயங்களை தேடித் தேடி தெரிஞ்சுக்கலாம். இதை, பெற்றோர்களும் சின்ன வயசுல இருந்தே சொல்லிக் கொடுக்கணும். தவிர, குடிச்சாதான் சக்தி வரும், உற்சாகம் வரும் என்கிற மாதிரி சினிமாக்களில் காண்பிச்சு இளைஞர்கள் பலரையும் கெடுக்குறாங்க. சினிமாக்காரங்களும் தங்களோட பொறுப்பை உணர்ந்து நடந்துக்கணும்.

குடியால் நூற்றுக்கணக்கான குடும்பமே சின்னாபின்னமானதைப் பார்த்து நானும் அழுதிருக்கேன். அதே நேரம், குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு, சந்தோஷமா வாழும் குடும்பங்களையும் பார்த்துட்டு வரேன். அதனால், குடிப்பழக்கத்தில் இருந்து நிச்சயம் மீள முடியும். தேவை மன உறுதியும் நம்பிக்கையும்தான்'' என்கிறார் சாந்தி ரங்கநாதன். 

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement