வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (14/04/2017)

கடைசி தொடர்பு:10:15 (15/04/2017)

1330 திருக்குறள்களுக்கும் ஓவியத்தால் உயிர் கொடுத்த பெண்!

திருக்குறள் எழுதும் மாணவி

டவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம், மனிதனுக்காக மனிதன் சொன்னது திருக்குறள் என்பார்கள். தத்துவம் மற்றும் வாழ்வியலை முழுவதுமாக உணர்த்தும் நூல் இது. இதன் சிறப்பை உலகம் முழுவதும் பலரும் பல வகைகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றாக, 1,330 திருக்குறளுக்கான விளக்கத்தையும் கருத்தோவியமாக வரைந்திருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த ஹேமசவுந்தரி. 

‘’ஸ்கூலில் படிக்கும்போதே ஓவியம் வரையறதில் ரொம்ப ஆர்வம். எதைப் பார்த்தாலும் தாளில் வரைஞ்சுடுவேன். 'ஆன் தி ஸ்பார்ட்' டிராயிங் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். ஒரு கருத்தை பக்கம் பக்கமாக விளக்குறதைவிட, படமாகப் புரியவைக்கிறது சுலபம். ஸ்கூல் படிக்கும்போது பாடங்களையே ஜாலியா வரைஞ்சு தோழிகளிடம் காட்டுவேன். அப்புறம், வீட்டுப் பக்கத்துல இருக்கிக்சின்னப் பசங்களுக்கு டியூசன் எடுக்கும்போதும் இதையே பாலோ பண்ணினேன். மூணு வருசத்துக்கு முன்னால திருக்குறளைப் படமா வரைஞ்சு காட்டி சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். ஸ்டூடன்ட்ஸ் ஈஸியாப் புரிஞ்சுக்கிட்டாங்க. இதை இன்னும் முழுசா செய்யலாமேனு இறங்கினேன்'' என்று புன்னகைக்கிறார் ஹேமசவுந்தரி. 

''ஓர் அதிகாரத்தை விளக்குற மாதிரி அஞ்சு அல்லது ஆறு படங்களை வரைஞ்சுப்பேன். அதில் சிறப்பானதை தேர்ந்தெடுத்து தனியா வரைவேன். இப்படி ஒவ்வொரு அதிகாரத் தலைப்புகளுக்கும் ஏற்ற மாதிரியான படங்களை வரைஞ்சு முடிச்சேன். பி.எஸ்.சி மூணாவது வருசம் படிக்கும்போது, ஓய்வு நேரத்தில் அதிகாரங்களுக்கான விளக்க ஓவியத்தை வரைஞ்சு முடிச்சேன். இதை வரைஞ்சு முடிக்க மூணு மாசம் ஆச்சு. அதுக்கு அப்புறம்தான் 1,330 குறளுக்கும் இதே மாதிரி வரையலாம்னு முடிவெடுத்தேன்'' என்கிற ஹேமசவுந்தரி, 'அகர முதல' எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலில் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான ‘அ’ வில் தொடங்கி, 1,330-வது குறளின் 'முயங்கப் பெறின்’’ என மெய்யெழுத்துக்களில் கடைசி எழுத்தான ‘ன்’ வரை முடித்துள்ளார். 
 

திருக்குறள் எழுதும் மாணவி

''ஓர் அதிகாரத்தை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு குறளுக்கும் வெவ்வேறு ஆசிரியர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தைப் பலமுறை படிச்சுப் பார்த்தேன். பிறகு, ஒரு பேப்பர் ஷீட்டில் எட்டு படங்களுக்கான அவுட்லைன் போட்டு வரைய ஆரம்பிச்சேன். பொருட்பாலில் மன்னர்கள், அமைச்சர், ஒற்றர்கள், தூதுவர், அரண்மனை, போர்ப் படை, நல்லாட்சி, கொடுமையான ஆட்சி என வருவதால் ஒருநாளுக்கு 10 படங்கள்தான் வரைய முடியும். அறத்துப்பாலில் இல்வாழ்கை, மக்கள், அன்பு, விருந்தோம்பல், ஒழுக்கம், அடக்கம், புரளிபேசுதல், ஈகை, புகழ், அருள், தவம், வாய்மை ஆகியவற்றை விளக்கும் படங்களை வரைஞ்சேன். காமத்துப் பாலில் குறிப்பு அறிதல், பிரிவு, கணவன் மனைவி வாழ்கை என ஈஸியாக இருக்கிறதால 18 படங்கள் வரைக்கும் வரைஞ்சுடுவேன். உதாரணத்துக்கு... 'வான் சிறப்பு' அதிகாரத்தில் ’கெடுப்பதூம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூமெல்லா மழை' என்ற குறளுக்கு, மழை தேவையுள்ள இடங்களில் பெய்யாமல் கெடுக்கிறது தேவையில்லாத இடங்களில் பெய்து கெடுக்கிறது என்பதை உணர்த்துற விதமா ஆறு, குளத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழியும் நிலையில் உள்ளதையும், மலை, கடல் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் செழிப்பு அதிகமுள்ள பகுதிகளிலும் மழை பெய்வதையும் ஓவியங்களா வரைஞ்சுருக்கேன்'' என்கிறார் ஹேமசவுந்தரி. 

இந்தத் திருக்குறள் விளக்க ஓவியங்களுக்காக 'திருக்குறள் செல்வி', 'குறள் சித்திர சேனா', 'குறள் தூரிகைச் செல்வி' என மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார் இந்த ஓவிய அரசி. 

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்


டிரெண்டிங் @ விகடன்