Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் பொதுத்தேர்தல்” ஆரூடம் சொல்லும் பிரேமலதா!

பிரேமலதா விஜயகாந்த்

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட தே.மு.தி.க தலைமைக் கழக பேச்சாளர் சரவணனின் படத்தை அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். சரவணன் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பிரேமலதா பேட்டியளித்தார்.

"காஞ்சிபுரத்தில் தொடந்து கொலைகள் அரங்கேறி வருகிறதே?"

"காவல்துறை தமிழக அரசின் ஏவல் துறையாகத்தான் செயல்படுகிறது. அதனால்தான், கோவில்நகரம் கொலை நகரமாக மாறிவிட்டது. கடந்த மூன்று மாதங்களில் 12 படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தே.மு.தி.க பிரமுகர்கள் ஐந்துபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்".

"ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

"வாக்காளர்களுக்குப் பணம்கொடுக்கும் வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிட முடியாதபடி  தகுதிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் இனிவரும் தேர்தல்கள் முறையாக ஜனநாயகரீதியில் நடைபெற ஏதுவாகும். எந்தக் கட்சி சார்பில் வேட்டாளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களோ அந்தக் கட்சியை தேர்தல் ஆணையம் தடைசெய்யவேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆர்.கே.நகரைப் பொறுத்தவரை இனி ஒரு வருடத்திற்கு தேர்தல் கிடையாது என தேர்தல் ஆணையமே சொல்லிவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் விரைவில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரப்போவது உறுதி."

"டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தக் கோரி தமிழகத்தில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இவ்விஷயத்தில் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு என்ன?"

"டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதற்காக, தே.மு.தி.க பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட கடைகளை ஊருக்குள் கொண்டு சென்றால், தமிழகத்தில் குற்றங்கள் பெருகிவிடும், மிகப்பெரிய கலாச்சார சீரழிவு ஏற்படும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வீதிக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை இதுபோன்ற பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை காவல்துறை அதிகாரிகள் தாக்குகிறார்கள். இதுபோன்ற செயல்களால், இந்த ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதியாகி விட்டது."

"அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில்நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணியில் பி.ஜே.பி. உள்ளதாகக் கருதுகிறீர்களா?"  

பிரேமலதா விஜயகாந்த்

"தி.மு.க, அ.தி.மு.க இந்த இரண்டு கட்சியும்தான், தமிழகத்தில் ஊழல் கலாசாரத்தை உருவாக்கி செயல்படுத்தி உள்ளன. உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதுபோல ஊழல் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்."

"தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுவதற்கு யார் காரணம்?"

"இன்றைய அரசியல் சூழ்நிலைக்குக் காரணம் அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம்தான். ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தவரை ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்தது அவருக்கு தெரியாதா? பதவி பறிக்கப்பட்டதும் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் பண்ண சென்று விட்டார். அதற்கு முன் எங்கு சென்றது அவரின் மனசாட்சி. அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது, என அதிமுகவினர் அனைவருக்கும் தெரியும். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலுக்காக கைரேகை வைப்பதற்காக மருத்துவர் பாலாஜிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்த பிரச்னையெல்லாம் அவங்க உட்கட்சி விவகாரம்."

"தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் போடவில்லையே?" 

"நிரந்தர முதல்வரும் இங்கே இல்லை. நிரந்தர ஆட்சியும் இல்லை. நிரந்தர உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை. மிகப்பெரிய அவலத்தில் தமிழகம் இருக்கிறது. இதற்காகத்தான் தமிழகத்திற்கு வெகுவிரைவில் பொதுத்தேர்தல் வரவேண்டும் என்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் வரவேண்டும்.  நீதி, நேர்மையுடன்  மக்களுக்காக உழைக்கக் கூடிய புதிய தலைவர் வந்தால்தான், தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் வரும். அப்போதுதான் உறுதியான உள்ளாட்சி அமைப்புகள் வரும். நிரந்தர ஆளுநர்  விரைவில் நியமிக்கப்படுவார். தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்லும்."

-பா.ஜெயவேல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement