Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள்... சென்னைக் குடிமகன்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?!

டாஸ்மாக் கடைகளை இனி திறக்கக்கூடாது, இருக்கிற கடைகளையும் மூடவேண்டும் என ஒரு பக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் சென்னையில் உள்ள டாஸ்மாக்குகள் குடிமகன்களின் வெள்ளத்தில் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இரவு 9.55 ஆகியும் கூட்டம் குறைந்தபாடில்லை. சரக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவ்வப்போது குடிமகன்களுக்குள்ளேயே தள்ளுமுள்ளும் சண்டையும் வருகிறது. இல்லையென்றால் பணம் அதிகம் வாங்குகிறார்கள் என்று டாஸ்மாக் ஊழியருக்கும் குடிமகன்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது. ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருவிழாபோல் இருக்கிறது டாஸ்மாக் கூட்டம். கொஞ்சம் மது குடிக்காமல் டாஸ்மாக் பாருக்குள் போனால் அந்த நாற்றத்தில் வாந்தி வருவது உறுதி என்பதால்  டாஸ்மாக்குக்கு வெளியே குடிமக்களுக்காகக் காத்திருந்தோம். 

டாஸ்மாக்

முதலாவதாக நம்மிடம் பேசினார் ஹைதர் அலி. அவரிடம் டாஸ்மாக்குக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பற்றிக் கேட்டோம். “போராட்டம் கரெக்ட்தான் சார். டாஸ்மாக் இருக்கறனாலதான் குடிக்கிறோம். இதப் பாத்தாவே குடிக்கத் தோணிருது. இந்தக் கடைகளை ஒழிச்சுக்கட்டணும் சார். ஒழிச்சிட்டா நாங்க எதுக்கு வரப்போறோம். ஸ்டார்ட்டிங்ல கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் பழகிரும். நிம்மதியா இருக்கலாம்” என்றார்.


அடுத்து பேசிய ராஜாவும் ஆச்சரியகரமாக இதே கருத்தைத் தெரிவித்தார் “ தம்பி நான் அடிக்ட்லாம் இல்ல. எப்போவாது குடிப்பேன். டி.ஜி.பி ஆபிஸ்லதான் வேலை செய்யறேன். உண்மைய சொல்லனும்னா வாழ்க்க ரொம்ப போர் அடிக்குது தம்பி. அதான் குடிக்கிறேன். ஒரு பொழுதுபோக்கே இல்ல. ஆபிஸ் போனா அங்க ஒரு டென்சன். வீட்டுக்கு வந்தா பொண்டாட்டி டென்ஷன். டிவி பாக்கலாம்னா பசங்க ரிமோட் தர மாட்றாங்க. அப்பறம் என்ன தம்பி பண்றது. குடிச்சமா, தூங்கணாமானு இருந்துக்கலாம். கண்டிப்பா டாஸ்மாக்க நிறுத்தனும் தம்பி. நான் இந்தப் போராட்டத்த ஆதரிக்கறேன்“ என்றார்.

ஒயின் ஷாப்

ஆனால் இவர்களின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்  தில்லைநாதன் “ போராட்டத்துனால ஒரு பிரோயோஜனமும் கிடையாதுங்க. கவர்மெண்ட் கண்டிப்பா நிறுத்தாது. குடிக்கறவங்க குடிக்கிறதயும் கண்டிப்பா நிறுத்த மாட்டாங்க. ஒருவேளை நிறுத்திட்டா பாண்டிச்சேரி மாதிரி எங்கயாவது கிளம்பிப் போயிடுவோம். வேற எந்த வகைல போதை எங்களுக்கு கிடைக்குதுனு பாத்து அதத் தேடிப் போயிருவோம். இது எங்களுக்கு கண்டிப்பா வேணும். போராட்டம்லாம் வேஸ்ட்” என்றார். ஆனால் குடிப்பதன் தேவை என்ன என்ற கேள்விக்கு அவர் கடைசிவரை பதிலளிக்கவில்லை.

இளைஞர்களை கவர் செய்யும் நோக்கில் அயர்ன் செய்த சட்டையை பேண்டுக்குள் மடித்துவிட்டு டிப்டாப்பாக நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் கருத்து கேட்டோம். ” ஜி,  நான் ஐ.டி-ல வேலை பாக்கறேன். இன்னைக்கு கொஞ்சம் ஓவர்டைம் வேலை பாத்தேன். நானூறு ரூபா கிடச்சது. அத வச்சு சரக்கு வாங்கலாம்னு வந்தேன். மத்தபடி இதுக்குன்னு காசு வீணாக்கறது இல்ல. நாளைக்கு வேற லீவு . இதக் குடிச்சா நல்லா தூங்கலாம். யங்ஸ்டர்ஸைப் பொறுத்தவரைக்கும் வீக் எண்ட்ல அடிப்போம். அடிக்ட்லாம் பெருசா யாரும் இல்ல. டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தை நான் கண்டிப்பாக வரவேற்கறேன் “ என்றார். 

மதுபானக்கடை

குடிமக்களிடம் இருந்து விடைபெற்ற நாம் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்கள், பணிப் பாதுகாப்பு,  ஊழியர்கள் படும் துன்பங்கள் குறித்து அறிவதற்காக டாஸ்மாக் ஊழியர் சுரேஷிடம் பேசினோம். “ கடையை அரசாங்கம் கம்மி பண்ணதுல இருந்து எங்க கடைல கூட்டம் அதிகமாயிருச்சு. வேலை பாத்துகிட்டே இருக்கணும். மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. மெண்டலா ஆயிடுவேன் போலிருக்கு. இதுல பிக்பாக்கெட் பிரச்னை வேற. சரக்கு வாங்கவறவங்ககிட்ட இருந்து டெய்லி ஃபோன், பர்ஸ் ஏதாவது தொலைஞ்சிடும். எங்ககிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணுவாங்க. நாங்க என்ன பண்ண முடியும்? இப்போ போலிஸ் பாதுகாப்பு போட்டு நடத்துகிட்டு இருக்கோம். இதுக்கு டெய்லி போலிஸுக்கு முன்னூறு ரூபா குடுக்கணும்” என்று ஆதங்கப்பட்டார்.

அரசாங்கம் இவ்வளவு மது விற்கவேண்டுமென இலக்கு தருகிறதா எனக் கேட்டோம். “ஒரு காலத்துல டார்கெட் இருந்துச்சு சார். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு வரலைனு திட்டுவாங்க. ஆனா இப்போலாம் டார்கெட் இல்ல. ஏன்னா விற்பனை டார்கெட்டைத் தாண்டி போய்ட்டு இருக்கு. இந்த கடையில முன்னாடி டெய்லி மூணு லட்சம் ரூபாய்க்கு வசூலாகும். இப்போ ஏழு லட்சம் ரூபாய்க்கு வசூலாகுது. ஆனா ஒரு போலிஸ்காரர் பொம்பளைங்கள கை நீட்டி அடிச்சிருக்காரு. மக்கள்  சும்மா விடுவாங்களா? டாஸ்மாக் நிறுத்திடுவாங்க. வேலை போயிடும்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு சார்” என்றார்.

மது

சுரேஷிடமிருந்து விடைபெறுவதற்கு முன்பாக பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் அதிகம் வைத்து மது விற்கிறீர்களா இது சரியா என 'குடி'மகன்கள் சார்பாகக் கேட்டோம். “சரக்கு எடுத்துக் குடுக்கறவங்களுக்கு நாலாயிரத்து ஐநூறு ரூபா பக்கம்தான் சம்பளம் வரும் சார். ஆனா இந்த அஞ்சு ரூபா, பத்து ரூபா கமிஷன்ல டெய்லி நாலாயிரம் கிடைச்சிடும். மக்கள் திட்டதான் செய்வாங்க. ஆனா நம்ம பொழப்பையும் பாக்கணும்ல" என்று நியாயப்படுத்தினார்.

நம்முடன் பேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் டாஸ்மாக்குகள் மூடப்படவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தினார்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், வெறும் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு  அரசாங்கம் தூண்டிவிட்டு குடிக்கவைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். பெரும்பான்மையான மக்களின் பக்கம் நிற்பதே ஒரு அரசாங்கத்தின் கடமையாக இருக்கமுடியும் என்கிற நிலையில், டாஸ்மாக்குகளை முடிந்த அளவுக்குக் குறைப்பது, நேரத்தை இன்னும் கொஞ்சம் குறைப்பது, அதிகளவு மது குடிப்பதன் விளைவுகள் பற்றிய பிரசாரங்களை மக்களிடம் முன்னெடுப்பது ஆகியவற்றை செய்யவேண்டிய பெரும்பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. அதே வேளையில் டாஸ்மாக்கில் வேலை செய்பவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியமாகும். அவர்களும் இந்த மாநிலத்தின் மக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

- அகில் குமார்
படங்கள்: பா.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close