Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருந்ததியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு கோரி தற்கொலை - கவிஞர்.மதிவண்ணனின் அச்சம்!

அருந்ததியர்

பரவும் ஆட்சி கலைப்பு வதந்தி, மந்திரிகள் கைது, வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டுகள் என ஆளுங்கட்சியே தன்னை தற்காத்துக்கொள்ள திகிலடித்து கிடக்கும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்து ஒரு உயிர் தன்னையே தியாகம் செய்துள்ளது. திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன் 'ஆதித்தமிழர் பேரவை'யின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவராக இருந்தவர். இவர் நேற்று முன்தினம்  இரவு 1 மணியளவில் திருப்பூர் பூங்கா சாலையில் உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக் கொண்டார். இவரின் அருகில் கிடந்த குறிப்பேட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உள் இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

மகேஸ்வரன் தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில்தான் நான்கு வருடங்களுக்கு முன் அதே அமைப்பைச்சேர்ந்த வழக்கறிஞர் நீலவேந்தன் இதுபோலவே தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்டார். அதே போல் திருச்சியைச் சேர்ந்த ராணி என்பவரும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டு கோரிக்கையை வைத்துத் தீக்குளித்தார். தொடர்ந்து இப்படியான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து அருந்ததிய மக்களுக்கான சமூகப்பணியில் இருக்கும் கவிஞர்.மதிவண்ணன் அவர்களிடம் இது குறித்து பேசினோம். 

" உண்மையில் இந்தச் சம்பவம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்றேதான் இருந்தேன். இது அருந்ததிய மக்களுக்கான உரிமை கோரி நடக்கும் மூன்றாவது தற்கொலை. இதற்குத் தெரிவிக்கும் அனுதாபம் கூட தீவிர செயற்பாட்டாளர்கள் மத்தியில் ரொமாண்டிசைஸ் செய்யப்படும். அது நாளை மீண்டும் இப்படி ஒன்றுக்கான தூண்டுதலாக இருந்துவிடுமோ என்கிற அச்சத்தால் இந்தத் தற்கொலை குறித்து கருத்து சொல்லவே அச்சமாக இருக்கிறது. ஆனால்  வேறு சில விஷயங்கள் நான் சொல்வதற்கு இருக்கின்றன. இந்தியா முழுவதும் தொடர்ந்து உயர்சாதி இந்துக்களின் இட ஒதுக்கீட்டு போராட்டங்களும்,அதற்குத் திரைமறைவில் இருக்கும் அரச ஆதரவும் ஒடுக்கப்படுபவர்களிலேயே இன்னும் கீழ் நிலையில் இருக்கும் மக்கள் மத்தியில் ஒரு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  இடஒதுக்கீட்டின் வெளிச்சக்கீற்று இன்னும் 99 சதவிகித அருந்ததியர் சமூக மக்களுக்கு எட்டாத நிலையில், ஒரு பக்கம் சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு முகம் கொடுத்துக்கொண்டும் மற்றொரு புறம் சக பட்டியல் இன மக்களின் புறக்கணிப்புக்கும் அருந்ததிய சமூகம் ஆளாகிவருகிறது. ஜாட்கள் துவங்கி பட்டேல்கள் வரை தேசிய நெடுஞ்சாலைகளை வாரக்கணக்கில் அடைத்தும்,ரயில்பாதைகளை மறித்தும்,பிற இனப்பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும் தங்கள் கோரிக்கை  முன் வைத்து வரும் நிலையில், இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கேட்கும் மெல்லிய குரலுக்கு கிடைக்கும் மதிப்பே இப்படியான மனஅழுத்தத்தை உருவாக்குகிறது எனக் கருதலாம்.  

பொதுவாக அருந்ததிய மக்கள் செறிந்து வாழும் மேற்குப்பகுதியில் ஆதிக்க சாதியினரின் எதிர்ப்புக்கு அஞ்சி பெரியளவில் யாரும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை.அதோடு மதமாற்றத்தின் மூலம் கிடைக்க வேண்டிய கல்வியும்.ஆங்கிலேயருக்கு எதிரான போரில் பங்கேற்றமைக்காக பழிவாங்கப் பட்டதால் ஏற்பட்ட சரிவைச் சுதந்திர இந்தியாவின் தேசபக்த ஆட்சியாளர்களின் புறக்கணிப்பு. இவற்றின் காரணமாக பிறதாழ்த்தப்பட்ட சாதிகளை விட பின்தங்கிய நிலை. ஆனால் சமூகப்போராளிகளுக்கு அதிக மன அழுத்தத்தை  இன்றைய அரசியல் மற்றும் புறச்சூழல் ஏற்படுத்துகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அருந்ததிய சமூகத்தில் மிகக்குறைவான மக்களே விழிப்பு உணர்வு பெற்று களத்தில் போராடிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களும் இப்படியான முடிவை எடுப்பது வேதனை அளிக்கிறது" என்றார். 

தொடர்ந்து அறிவுத்தளத்தில் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டிய சிந்தனையாளர்கள் இப்படியான முடிவுகள் எடுப்பதை காணும் போது

"பரந்து விரிந்த

உனது எல்லைகளைப்

பத்திரப்படுத்தும் தந்திரத்துடன்

நீ போடும் கோட்டுக்குள்

சவம் வேண்டுமானால் கிடக்கலாம்.

உணர்ந்த இவ்வுயிர்பை

உணர்த்த வழியில்லை வேறு

அத்துமீறலைத் தவிர."- என முடியும் கவிஞர்.மதிவண்ணன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. 

-வரவனை செந்தில் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement