”சட்டத்தை மீறியது மக்களா... போலீஸா...?” திருப்பூர் தடியடி விவாதம்

போலீஸார்

மூகப் பிரச்னைகளுக்காகச் சாலையில் இறங்கிப் போராடும் பெண்கள் மீது வக்கிரமங்களையும், தாக்குதல்களையும் கட்டவிழத்துவிடும் கொடூரச் செயல்களை அண்மைக்காலமாக போலீஸார் நிகழ்த்தி வருகின்றனர் .

குறிப்பாகச் சென்னையில் பணநீக்க நடவடிக்கையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்தில் பெண்கள் மீது  போலீஸார் வக்கிரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி நடந்த போராட்டத்தில் பெண்களைப் போலீஸார் கடுமையாகத் தாக்கினார்கள். அதில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அந்த இடத்திலேயே கரு கலைந்துபோனது. இப்படியான நடவடிக்கைகளால், காவல் துறை மீது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் சிதைந்துகொண்டிருக்கையில், அதனை உறுதிப்படுத்துவதாகத் தற்போது அமைந்துள்ளது திருப்பூர் சம்பவம். அந்த மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் ஈஸ்வரி என்ற பெண்ணைக் கூடுதல் எஸ்.பி  பாண்டியராஜன் கடுமையாக தாக்கியதுடன், அவர் கன்னத்திலும் அறைந்துள்ளார். அதில், அவருடைய காது, கேட்கும் தன்மையை இழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிக் கண்மூடித்தனமாகப் போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவம்... வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இங்கே யார் குற்றவாளி! 

மேலும், அந்த வீடியோவில், கூடுதல் எஸ்.பி  பாண்டியராஜன் அந்தப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கியிருப்பது உறுதியாகி இருக்கிறது. போலீஸாரின் இந்தத் தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது மட்டுமன்றி, அந்தப் பெண்ணைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவைத் தலைவர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியாகத் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன்

மார்க்ஸ் மனித உரிமை ஆர்வலர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ், "போராட்டம் நடத்தியவர்களை அடிக்க அவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது. அப்படியிருக்கும்போது போலீஸார் பெண்ணை எப்படி அடிக்க முடியும்? நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையே மீறியுள்ளார் அந்தப் போலீஸ்காரர். இங்கே சட்டத்தை மீறியவர்கள் பொதுமக்களா... போலீஸாரா? குற்றவாளி யார்? அதனால், அந்தப் போலீஸார் கண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல... தண்டிக்கப்பட வேண்டியவர். இதுவரை போலீஸார் செய்த குற்றங்களுக்காக அரசு நிர்வாகம் தண்டித்ததே இல்லை. காரணம், போலீஸாரின் தவறுகள் நீதிமன்ற படியேறியதே இல்லை. அப்படியே நடந்தாலும் அந்தத் தவற்றுக்குச் சர்வதேச அளவில் கண்டனக்குரல் எழுந்திருக்க வேண்டும். அதுபோன்ற குற்றங்களுக்கு மட்டுமே போலீஸாருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. அதுவும் நீதிமன்றத்தின் முன்பு மட்டும் கடுமையான தண்டனையாக வாசிக்கப்படும். பின்னர், தண்டனை நிறைவேற்றுபவர்கள் இந்தப் போலீஸார் என்பதால், அப்படியே அமுங்கிவிடும். மீறித் தண்டித்தால் போலீஸாரின் உற்சாகம் குறைந்துவிடும் என்ற கோட்பாட்டை அரசாங்கம் வகுத்துவைத்துள்ளது. இதுபோன்று மனித உரிமைகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மனித உரிமை ஆணையத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், தற்போது மனித உரிமை ஆணையம் என்பது பல் இல்லாத அமைப்பாகவே உள்ளது. அதனால், தாக்குதல் நடத்திய போலீஸாரைப் பணியில் இருந்து நீக்கி அவர்கள் செய்த குற்றத்துக்கான தண்டனை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

மூன்று ஆண்டு கடுங்காவல்! 

இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசியபோது, ''அந்தப் பெண்களை போலீஸார் அடித்துத் தாக்குதல் நடத்தித் துன்புறுத்தியுள்ளனர். அஜிதா வழக்கறிஞர் அதில், அந்தப் பெண்ணுக்கு காதில் காயம்  ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் துன்புறுத்துவது, கொடுங்காயம் ஏற்படுத்துவது போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், பொது இடத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்தவோ, கைவைக்கவோ போலீஸாருக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படியிருக்கும்போது பெண்கள் மீதான வன்முறை தடைச்சட்டத்தின்கீழ் அந்தப் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் கடமையைச் செய்யும்போது என்ற வாதத்தை அந்தப் போலீஸார் பயன்படுத்த முடியாது. அதற்கு இங்கே எந்த அவசியமும் இல்லை. எனவே, அந்தப் போலீஸார் செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை தருவதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. அதனை நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமா மாநில அரசு?

கே.புவனேஸ்வரி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!