Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டாஸ்மாக்' சிட்டி ஆன டாலர் சிட்டி ; ஆண்டுக்கு 1,800 கோடிக்கு மதுவிற்பனை!

மிழகத்தில்  திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ 1,800 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் திருப்பூர் நகரத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மதுக்கடை வீதம் உற்சாகமாக இயங்குகிறது. 

மது அருந்துபவர்கள் நிறைந்த திருப்பூர்

தமிழகத்தில், திருப்பூர் சற்று வித்தியாசமான நகரம். டாலர் சிட்டி, பனியன் சிட்டி, குட்டி ஜப்பான் என்ற அடைமொழிகளுடன் 'டாஸ்மாக் சிட்டி' என்றும் இதனை அழைக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 238 மதுக்கடைகள் இயங்கிவருகின்றன. அதில், 105 மதுக்கடைகள் திருப்பூர் நகரத்தில் மட்டும் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை மற்றும் விழாக்காலங்கள், மதுக்கடைகளுக்கான விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினங்களில் திருப்பூரில் நடைபெறும் மது விற்பனை பற்றிச் சொல்லவே வேண்டாம். புத்தாண்டு, தீபாவளி போன்ற கொண்டாட்டத் தினங்களில் மற்ற எந்த மாவட்டத்தையும்விட திருப்பூர்தான் மது விற்பனையில் சாதித்துக் காட்டியிருக்கும். காஞ்சிபுரம், சென்னை நகரங்கள்கூட திருப்பூருக்குப் பிறகுதான்.  

திருப்பூர் நகரின் மொத்த பரப்பளவு 159 சதுர கி.மீதான். ஆனால், வெளிமாநில, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்களை இலக்கு வைத்துத்தான் டாஸ்மாக்  இப்படிச் சகட்டுமேனிக்குக் கடையை விரித்திருக்கிறது. இந்த நகரைப் பொறுத்தவரை ஆண், பெண் என எல்லோரும் வேலைக்குச் செல்வார்கள். தாறுமாறாகப் பணப்புழக்கம் கொண்ட நகரம். வாரம் முழுக்க உழைப்பார்கள். சனிக்கிழமைகளில் சம்பளம் வழங்கப்படும். பெரும்பாலான நிறுவனங்களில் வாரச் சம்பளம். இரு நாட்களும் உற்சாகம்தான். பெண்களிடையேகூடத் தாராளமாகப் பணம் புழங்குவதால், பொருளாதாரரீதியாக ஆண்களைச் சார்ந்து இருப்பதில்லை. அதனால்,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டைப்பற்றி யோசிக்காத மதுப்பிரியர்கள் நிறைந்த நகரம். 

டாஸ்மாக் சிட்டி ஆன டாலர் சிட்டி

பதினெட்டு வயது நிரம்பிய இளைஞர்கூட நாள் ஒன்றுக்கு  ரூ. 500 முதல் 1,000 வரை சம்பாதித்துவிடுகிறார்.. இளம்வயதிலேயே பணப்புழக்கம்  கையில் இருப்பதால், எளிதாக மதுவுக்கு அடிமையாகின்றனர். ரத்தத்தில் 60 சதவிகிதத்துக்கு மேல் 'ஆல்கஹால்' இருந்தால் வேலை உள்பட எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது. மனக்கவலை அதிகரித்து மூளையின் செயல்திறன் குறைந்துவிடும். இதுவே தொடருகையில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைகிறது. சமூகப் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்துக்கொள்வதால்,அவர்களைக் குடியில் இருந்து மீட்டெடுக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மருத்துவர்களும் போராடி வருகின்றனர். இதனால் மதுவுக்கு எதிரான விழிப்பு உணர்வு முகாம்கள், கவுன்சிலிங்குகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. 

தமிழகத்தில், திருப்பூரில்தான் மதுவுக்கு எதிராகப் பெண்களின் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பணப்புழக்கம் காரணமாகத் தினமும் குடித்துவிட்டு வந்து, வீட்டில் மனைவியுடன் சண்டையிடும் கணவர்களும் இங்கு அதிகம். கணவர் மது குடிப்பதால் பெண்கள், குழந்தைகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குடும்பங்கள் பிரிகின்றன. மனைவி பிரிந்து சென்றுவிட்டால், அதனைக் காரணமாகக் காட்டி கணவர்கள் அதிகமாகக் குடிக்க ஆரம்பிக்கின்றனர். 'குடியை விட்டால்தான் குடும்பம் நடத்த வருவேன்' என்பதே மனைவி தரப்பின் பதிலாக இருக்கும். திருப்பூரில் இப்படிக் குடியால் பிரியும் குடும்பங்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுத்து சேர்த்துவைக்கும் முயற்சியில் சில மனநல ஆலோசகர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க யோகா உள்ளிட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2008-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டுப் புதிய மாவட்டமாக உதயமானது. திருப்பூர் நகரமும் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரம். திருப்பூர் மாவட்டம் உருவானபோது இரண்டு டாஸ்மாக் டெப்போக்களுடன் 253 கடைகள் ஒதுக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு திருப்பூரில் டாஸ்மாக் விற்பனை ரூ.700 கோடியாக இருந்தது. 2014-ம் ஆண்டு  ரூ.1,267 கோடியாக உயர்ந்தது. 2015-ம் ஆண்டு ரூ. 1,477 கோடியானது. தற்போது திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.1,800 கோடிக்கு மது விற்பனையாகிறது. கடந்த 2015-16-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த டாஸ்மாக் வருவாய்  ரூ. 29,672 கோடி. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் 500 கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் 8 கடைகளும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றபின் 11 கடைகளும் அடைக்கப்பட்டன. மது விற்பனையை முக்கிய வருவாயாகக் கருதும் தமிழக அரசு, திருப்பூரில் ஒரு கடையை அடைக்க வேண்டுமானால் ஓராயிரம் முறை யோசிக்கும். டாஸ்மாக் நிறுவனத்துக்கு திருப்பூர் ஒரு 'மதுசுரபி'. அதனால்தான் திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தால், அதனை அடக்க போலீஸ் நிச்சயம்  அடக்குமுறையைக் கையாளும். ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனின் ஆவேசத்தின் பின்னணி இதுதான். இன்னொரு விஷயம் தெரியுமா... திருப்பூரில் மாணவர்கள் சிறுவயதிலேயே மது அருந்தும் பழக்கத்துக்கும் ஆளாகின்றனர். 'பள்ளி மாணவன் மது குடித்துவிட்டுப் பள்ளிக்கு வருகை... பள்ளியில் மது அருந்திய மாணவன்' போன்ற செய்திகளை அடிக்கடி திருப்பூரில் இருந்து நாம் கேள்விப்பட முடியும். 

டாலர் சிட்டியை 'டாஸ்மாக்' சிட்டி ஆக்கிய பெருமை தமிழக முன்னாள் முதல்வர்கள் இருவரையே சாரும்!

- எம்.குமரேசன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close