கர்நாடகாவில் கட்டப்பாவுக்கு வந்த சோதனை! | Kannada parties opposes Bahubali-2 release in Karnataka

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (14/04/2017)

கடைசி தொடர்பு:19:35 (14/04/2017)

கர்நாடகாவில் கட்டப்பாவுக்கு வந்த சோதனை!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி 2 "திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் கன்னடர்களை இழிவாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டி கன்னட அமைப்புகள் பாகுபலி திரைப்படத்துக்கு எதிராக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாய் தயாரானது. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, பாகுபலி இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கன்னட அமைப்புகள் பாகுபலி படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் பல்வேறு தருணங்களில் கன்னட மக்களை இழிவாக பேசியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ்  கூறுகையில், 'கன்னட மக்களை தரக்குறைவாக பேசிய சத்யராஜின் படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். அவர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இனி கன்னடர்களை இழிவாக பேச மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும், அதன் பின்னர் தான் பாகுபலி இங்கு வெளியாகும்' என கூறியுள்ளார். 

இதனிடையே, இன்னும் சில கன்னட அமைப்புகளும் ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினரும் சத்யராஜுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, கர்நாடகாவில் பாகுபலி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.