ஆர்.கே.நகரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்... மக்கள் அவதி! | Water supply stopped in R.K.Nagar... people raises complaint!

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (15/04/2017)

கடைசி தொடர்பு:11:24 (15/04/2017)

ஆர்.கே.நகரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்... மக்கள் அவதி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்ட மறுநாளில் இருந்து, அங்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

rknagar
 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 12-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆர்.கே.நகர்ப் பகுதியில் வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், 'விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன' என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்களும் வெளியாகின. அந்த ஆவணங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்,  இதனைத் தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்தது, 10-ம் தேதியே ஆர்.கே.நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சில பகுதிகளில் மட்டுமே குடிநீர் வினியோகம் நிறுத்தப்படவில்லை என்றும், ஆர்.கே.நகரில் உள்பகுதிகளில் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிவித்த நாளில் இருந்து குடிநீர் வினியோகம் ஓரளவுக்கு சீராக இருந்ததாகவும், தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பின்னர் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க