வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (15/04/2017)

கடைசி தொடர்பு:17:38 (15/04/2017)

'இந்த 16 எம்.எல்.ஏக்களும் என் கட்டுப்பாட்டில்!'  -கார்டனை கதிகலங்க வைத்த விஜயபாஸ்கர்

'தமிழக அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகின்றனர் மூத்த அமைச்சர்கள். ' டெல்லியின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் ஒரே வழி என தினகரனிடம் எடுத்துக் கூறியும், விஜயபாஸ்கரைக் காப்பாற்றும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது கார்டன்' என்கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 

விஜயபாஸ்கர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையமாக வைத்து, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இந்த ஆய்வில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதற்கான 89 கோடி ரூபாய்க்கான ஆதாரத்தைக் கைப்பற்றினர். ' அத்தனைக்கும் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன' என அமைச்சர் தரப்பில் இருந்து கூறினாலும், முறையான கணக்கு வழக்குகளை இன்னும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. "விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் ஏழு அமைச்சர்கள் வரையில் வகையாக சிக்கியுள்ளனர். தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததுபோல, 'முதலமைச்சர் அலுவலகத்தை நோக்கி விசாரணை வளையம் நெருங்கிவிடக் கூடாது' என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடியான சவால்தான். மத்திய அரசின் ஒரே நோக்கம், விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதுதான்" என விவரித்த அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர், 

தினகரன்"ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் விநியோகிக்கப்பட்ட பணம் தொடர்பாகத்தான், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக கட்சித் தொண்டர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. இப்போது நடக்கும் விசாரணைகள் முழுக்க சேகர் ரெட்டி தொடர்பானவை. அவரது சுரங்க நிறுவனத்தில் அமைச்சர்கள் பலரும் சைலண்ட் பார்ட்னர்களாக இருக்கின்றனர். இதுதொடர்பாக டிசம்பர் மாதமே சேகர் ரெட்டியிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டார்கள். இந்த வாக்குமூலத்தை வைத்துக் கொண்டுதான் தமிழக அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. 'அனைத்தையும் பறித்துக்கொண்டு தெருவில் விடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டாம்' என தினகரனுக்கு நெருக்கமான மன்னார்குடி உறவுகளும் பேசியிருக்கின்றனர். நேற்று தினகரனை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

அவர்களிடம் பேசிய தினகரன், 'கொஞ்ச நாளில் அனைத்தும் சரியாகிவிடும். விஜயபாஸ்கரைத் தேவையில்லாமல் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டாம். நாம் பேசித் தீர்த்துக்கொள்வோம்' என சமாதானம் பேச, ' நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. உடனடியாக அவரைப் பதவியில் இருந்து தூக்குங்கள்' எனக் குரலை உயர்த்த, 'அவர் ஊருக்குப் போயிருக்கிறார். சென்னை வந்ததும் பேசிக் கொள்வோம்' எனப் பதில் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கொங்கு மண்டல அமைச்சர்கள் ஒருவரும் ரசிக்கவில்லை. இதன்பிறகு, விஜயபாஸ்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் கார்டன் எடப்பாடி பழனிசாமிநிர்வாகிகள். அவர்களிடம் கொந்தளித்த விஜயபாஸ்கர், 'என்னை நீக்கச் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார்களா, நான் யார் என்பதைக் காட்ட ஐந்து நிமிடம் போதாது. இதோ நான் சொல்லும் பட்டியலில் உள்ள 16 எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர்கள் அனைவரும் என் கட்டுப்பாட்டில் உள்ளனர். என்னைத்தாண்டி அவர்கள் செல்லமாட்டார்கள். ஆட்சி அதிகாரம் நீடிக்க வேண்டும் என்று எடப்பாடி உண்மையிலேயே விரும்புகிறாரா' என ஆவேசப்பட்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்திவிட்டு, நடக்கும் நிலவரங்களை விவரித்துள்ளனர். அவருடைய கோபத்தை யாராலும் தணிக்க முடியவில்லை" என்றார் விரிவாக. 

"கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அடியாட்கள் சகிதம் பாதுகாப்பு வளையத்தை அமைத்தவர் விஜயபாஸ்கர். 'எங்கள் அணிக்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் வருவார்கள்' என ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்தாலும், அவரால் பெரும்பான்மையைக் காட்ட முடியவில்லை. பன்னீர்செல்வத்தைத் தேடி வந்த எம்.பிக்களும், மத்திய அரசின் சில அமைச்சர்கள் கொடுத்த உறுதிமொழிக்காக வந்தவர்கள். இப்போது சின்னத்தை வைத்துக் கொண்டு பன்னீர்செல்வம் தரப்பினர் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பதவிக்கு வந்த நாளில் இருந்து, 'பன்னீர்செல்வம், பாண்டியராஜன் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' எனப் பேசி வந்தவர், நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டுவிட்டு பேசும்போது, ' கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவர்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம்' என ஒரு சிறு மாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்கள் கட்சிக்குள் வந்தால், பழைய மரியாதையோடு வலம் வரலாம். ஆனால், மறுபடியும் முதலமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் எண்ணத்தில் தினகரன் இல்லை" என்கின்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள். 

இரட்டை இலையை மீட்பது பிரதானமான பிரச்னை என்றாலும், விஜயபாஸ்கரை வழிக்குக் கொண்டு வரும் வித்தை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டால் மட்டுமே, எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி அகலும்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்