வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (15/04/2017)

கடைசி தொடர்பு:20:16 (17/04/2017)

"உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திடாத சசிகலா அணியினர்!"  - அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive

 ஓ.பன்னீர்செல்வம் சசிகலா

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, சசிகலா அணியின் நிர்வாகிகளிடம் உறுதிமொழிப் பத்திரங்களில் கையெழுத்துப் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான நிர்வாகிகள் கையெழுத்துப்  போட மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது, சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதனால், சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டு தரப்புகளிலும் சின்னத்தை மீட்டெடுக்க கடும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையத்திடம் பெரும்பான்மையை நிரூபிக்க அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் உறுதிமொழிப் பத்திரத்திரங்களில் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர். 20, 50, 100 ரூபாய் மதிப்பிலான 'ஸ்டாம்ப் பேப்பர்'களில் பெறப்படும் நிர்வாகிகளின் கையெழுத்துக்களை, வரும் 17-ம் தேதிக்குள் கட்சித் தலைமையிடம் கொடுக்கும்படி, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சின்னத்தை மீட்டெடுத்துவிட்டால், அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளிவைத்துவிடலாம் என்று கருதினர், சசிகலா அணியினர். 
இந்தச் சூழ்நிலையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரால், சசிகலா அணியில் கடும் களேபரம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி, டி.டி.வி.தினகரனைச் சந்திக்க  அவரது சென்னை பெசன்ட்நகர் வீட்டுக்குச் சென்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக சில அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சமரசப்படுத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், அமைச்சர்களின் வாக்குவாதம் காரணமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கட்சி உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

 இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா அணியினர், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க அனைத்து நிர்வாகிகளிடமும்  சசிகலாஉறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெற, கட்சித் தலைமை உத்தரவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி கடைசிநாள் என்று தெரிவித்தனர். அதற்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் சென்றுவிட்டதால், உறுதிமொழிப் பத்திரங்களில் கையெழுத்துப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதும், உறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெற ஏப்ரல்-17 கடைசிநாள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதனால், அவசர அவசரமாக கையெழுத்துப் பெறும் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக, தமிழகம் முழுவதும் ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் நடத்தினர். கூட்டத்தில், நிர்வாகிகளிடம் உறுதிமொழிக் கையெழுத்துப் பெற முயன்றபோது, பெரும்பாலானவர்கள் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்தை நடத்தியும் கையெழுத்துப் போடாமல் கலைந்துசென்றுவிட்டனர். கட்டாயப்படுத்தி யாரிடமும் கையெழுத்துப் பெற முயற்சிக்கவில்லை. இதனால், விருப்பம் உள்ளவர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்று, கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ளோம். கையெழுத்துப் போட விரும்பாத நிர்வாகிகளின் பட்டியல்களையும் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம். இதைப் பார்த்து, கட்சித் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால், எப்படியாவது, அனைவரிடமும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றுவிடுங்கள் என்று கட்சித்தலைமை மீண்டும் தெரிவித்துள்ளது. இதனால், கையெழுத்துப் போடாத நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் தனியாகச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதன்பிறகு, சில நிர்வாகிகள் கையெழுத்துப் போட்டனர். இருப்பினும், எங்கள் அணியில் உள்ள அனைவரும் கையெழுத்துப் போடவில்லை. அத்தகையவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அப்போது, கையெழுத்துப் போட மறுப்பு தெரிவித்தவர்களுக்கு சில உறுதிமொழி தொடர்பான உத்தரவாதத்தை கட்சித் தலைமை கொடுத்துள்ளது.  அதன்பிறகு, அவர்கள் கையெழுத்துப் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் அணியில் உள்ள அனைவரும் கையெழுத்துப் போட்டால்தான், சின்னத்தை மீட்டெடுக்க முடியும். கையெழுத்துப் போட மறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சின்னத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்ற கவலையில் கட்சித்தலைமை உள்ளது"என்றனர். 

 டி.டி.வி.தினகரன்இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடாத நிர்வாகிகளைக் கவனிக்கும்படி கட்சித் தலைமை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான 'சி' க்கள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. உறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெற்றவுடன், அதற்குரிய கவனிப்பை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சில மாவட்டங்களில் அதை சரியாகச் செய்யவில்லை. அதனால்தான், நிர்வாகிகள் கையெழுத்திட மறுப்பு தெரிவிக்கின்றனர். ஒன்றியப் பதவியில் இருப்பவர்களுக்கு, 'எல்'களும், நகர, மாவட்டப் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதைவிடக் கூடுதல் 'எல்'கள் என்று நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. இதனால், எங்கள் அணியில் உள்ளவர்கள் அனைவரும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இதற்கிடையில்... வருமானவரி சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தம் உள்ளிட்டவையால் உறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெறும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால்தான், தேர்தல் ஆணையத்திடம் காலஅவசகாசம் கேட்டுள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் மெஜாரிட்டியை நிரூபித்து, சின்னத்தை மீட்டெடுப்போம். அதற்கான அனைத்துப் பணிகளும் துரிதமாக நடந்துவருகின்றன" என்றார். 

- நமது நிருபர்


டிரெண்டிங் @ விகடன்