வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (15/04/2017)

கடைசி தொடர்பு:14:15 (15/04/2017)

முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஈஸ்டர் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ மக்களுக்கு, முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகை உய்விக்க மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது உளம்கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மரித்தும் எழுந்த சத்தியமாக, மரணம் இன்மையின் தத்துவமாக, கருணையே வடிவமாகத் திகழ்ந்த இயேசுபிரான், தன்னை சிலுவையில் அறைந்த பகைவர்களுக்கும் மனம் இரங்கி அவர்களின் செயலை மன்னித்தருளும்படி இறைவனிடம் வேண்டினார். பகைவர்களையும் நேசித்த இயேசுபிரான்,  கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள், ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
 
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த இனிய நாளில், உலகில் அமைதி நிலவவும், மனிதநேயம் தழைத்திடவும், இயேசுபிரான் காட்டிய நல்வழிப்பாதையைப்  பின்பற்றி, அனைவரும் ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டியும் வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை  உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அன்பின் திருவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

'உங்கள் பகைவரிடமும் அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துவோரின் நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்' என்று போதித்த இயேசுபிரான் கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள், புனித வெள்ளியாகவும்  உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாகவும் உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனைகள்செய்து, இயேசுபிரான் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து மகிழ்வார்கள்.

கிறிஸ்துவ மக்களின் மீது மிகுந்த அக்கறைகொண்ட ஜெயலலிதா, சிறுபான்மை ஆணையத்தின்மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, அவர்களின் வாழ்வு வளர்ச்சியடைய தனிக் கவனம் செலுத்திவந்தார். இயேசுபிரான் அவதரித்த ஜெருசலேம் நகருக்கு ஆண்டுதோறும் புனிதயாத்திரை மேற்கொள்ளும் கிறிஸ்துவ யாத்ரீகர்கள் 500 பேருக்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கினார். கழகத்தின் சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில், ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா கலந்துகொண்டு வாழ்த்துகளைப் பரிமாறி, கிறிஸ்துவ மக்களின் நெஞ்சங்களை நெகிழச்செய்வார்.

இயேசுபிரான் போதித்த பணிவு-இரக்கம்-ஈகை போன்ற உயரிய குணங்களைப் பின்பற்றி வாழவும், அன்பும்-அமைதியும் கலந்து மனிதநேயம் தழைக்கவும், தியாக உணர்வும், சகோதரத்துவமும் ஒன்றுபட்டு நிலைத்திடவும் ஜெயலலிதாவின் புனிதப்பாதையில் கிறிஸ்துவப்  பெருமக்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.