Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதவன் - தீபா மோதல்..! மகாதேவனின் கடைசி அசைன்மெண்ட் ஜெயமா?!

தீபா  - மாதவன்

சிகலா குடும்ப வகையறா என வர்ணிக்கப்பட்டவர்களில் ஒருவரான மகாதேவன் இன்று அதிகாலை மாரடைப்பு  காரணமாக மரணமடைந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் இழைத்தததாகக்கூறி கட்சியிலிருந்து சசிகலாவுடன் நீக்கப்பட்டவர்களில் ஒருவர் மகாதேவன். சசிகலாவை மட்டும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மகாதேவன், திவாகரன் உள்ளிட்டவர்களின் நீக்கம் அப்படியோ தொடர்ந்தது. ஆனால் ஜெயலிதாவின் மறைவுக்குப்பின் அவர்கள் சசிகலாவுடன் ஜெயலலிதா உடல் அருகே ஒருசேர நின்று காட்சிதந்தனர். இவர்களில் தற்போது இறந்த மகாதேவனும் ஒருவர். மகாதேவனின் மறைவுக்கு அவரது அத்தை சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து பரோலில் வருவதற்கான சட்டரீதியான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளரானபோது அத்தனை வருட அதிகாரத்தில் இருந்த ஓ.பி.எஸ் கூட சில நாட்கள் அமைதிகாத்தார். ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆரம்பத்திலேயே கொடி பிடிக்க ஆரம்பித்தார். சொத்துக்களைக் கேட்டு போராடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா ஜெயலலிதா அரசியல் வாரிசு என கட்சியையே கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கியபோது கொஞ்சம் ஆடிப்போனது சசி தரப்பு. எனினும் ஆரம்பநாட்களில் இதை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டனர். ஆனால் அடுத்தடுத்து தி.நகர் சிவஞானம் தெருவில் அதிமுக கரைவேட்டியுடன் கட்சியினர் திரண்டபோது தீபாவை சாதாரணமாக எண்ணி புறந்தள்ளக்கூடாது என அதற்கான வேலைகளில் இறங்கியது சசி தரப்பு. சசி பொதுச்செயலாளரானபோது கட்சிக்கு கிலி கொடுத்த முக்கியமான சிலரை வழிக்கு கொண்டுவர கணவர் நடராஜன் ஆலோசனையின்பேரில் பலரை சசி நியமித்தார் என்கிறார்கள்

இதில் முதல் தீபாவின் எழுச்சியை மட்டுப்படுத்த நியமிக்கப்பட்டவர் 'மகாதேவன்' என்கிறார்கள். ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி முடிந்த கையோடு ஊருக்கு கிளம்பிய மகாதேவனை திரும்ப அழைத்து இந்த அசைன்மெண்ட் தரப்பட்டதாம். தீபாவின் கணவர் பல்வேறு தொழில்களில் இருப்பதால் தொழிலதிபர்கள் பலருடன் நட்பில் இருக்கும் மகாதேவன் தீபாவை வழிக்கு கொண்டுவர சரியான சாய்ஸ் என அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாம். 

மகாதேவன் - மாதவன்

அதன்பிறகே நன்றாக சென்றுகொண்டிருந்த தீபா பேரவையில் சில பிரச்னைகள் முளைக்க ஆரம்பித்தன என்கிறார்கள். “மகாதேவனுடன் மாதவன் நெருங்க ஆரம்பித்த பிறகு கட்சியில் இருவேறு கட்டளைகள் தொண்டர்களுக்கு தரப்பட்டு வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கப்பட்டது. கட்சியில் யார் பேச்சைக் கேட்டு செயல்படுவது என தீபாவை சந்தித்து தொண்டர்களும் நிர்வாகிகளும் முறையிட்டனர். பலர் இந்தக் குழப்பத்தினால் பேரவைக்கு தலைமுழுகிவிட்டு மீண்டும் ஓ.பி.எஸ் அணி அல்லது தினகரன் அணி என திரும்பப் போய்ச் சேர்ந்தனர். இதன்பிறகே கணவருடன் தீபா வெளிப்படையாக முரண்பட்டார்.

இதனால் தொண்டர்களிடம் நேரிடையாகவே கணவரின் பேச்சைக் கேட்கவேண்டாம் என அவர் கட்டளையிட்டதோடு பேரவையின் நடவடிக்கைகளில் ஒதுங்கியிருக்கும்படி கணவர் மாதவனுக்கு கடிவாளம் போட்டார்.  இதனால் கடுப்படைந்த மாதவன் தன்னை புறக்கணித்தால் தீபாவுக்கு எதிராக கட்சித்துவங்குவேன் என நேரில் ஒருநாள் சண்டையிட அன்றைய தினம், வாய்த்தகராறு முற்றி அன்றிரவே வீட்டைவிட்டு தீபா அவரை வெளியேறச் சொல்லிவிட்டார்.

அன்றுமுதல் மாதவன் வனவாசம்தான் இருந்துவருகிறார். இடையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சமயம் தீபாவை எதிர்க்க அவரது அரசியல் எதிரிகள் கணவன்- மனைவி சண்டையை பெரிதுபடுத்திப்பேசுவர் என்பதால் கணவருடன் சுமூகமாக இருப்பது நல்லது என, பேரவையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சிலர்  அறிவுரை சொன்னதையடுத்து கணவருடன் சுமூகத்தை கடைபிடித்தார். ஆனால் ஆர்.கே நகர் தேர்தல் ரத்து ஆனபின் பழையபடி கணவருடன் மோதல் போக்கைத் தொடர்ந்தார். இந்த மோதலின் அடுத்த கட்டம்தான் வீட்டில் இருதரப்பினருக்கிடையயான அடிதடி” என்றார், தீபா பேரவையிலிருந்து வெளியேறி தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் ஒரு வடமாவட்டத்து அதிமுக பிரமுகர். 

தீபா

மாதவனையும் மகாதேவனையும் இணைத்துப்போடும் இந்த முடிச்சு புதியதாக இருக்கவே இதுகுறித்து மாதவனைத் தொடர்புகொண்டோம். ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்னவென்றால் மகாதேவனின் மரணத்திற்கு போவீர்களா என நாம் கேட்டபோதுதான் அவர் இறந்த தகவலையே அறிந்தார் மாதவன். அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக  நம்மிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார்.  

பேரவையில் நடந்த குழப்பங்கள் முதல் மனைவியுடன் முரண்பட்டதுவரை, சசிகலாவின் அசைன்மென்ட் படி மகாதேவன் பேச்சை கேட்டு நீங்கள் நடந்ததுதானா எனக் கேட்டதும், பொங்கி வழிந்தார் மனிதர். “நீங்கள் சொல்வது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. நீங்கள் சொல்கிற மகாதேவனை நான் இதுவரை ஒருமுறைக் கூட நேரில் சந்தித்ததோ ஒரு வணக்கம் வைத்ததாகக்கூட நினைவில் இல்லை. எனக்கு அந்த அவசியம் துளியும் இல்லை. என் மனைவியின் அத்தையினால் வளம்பெற்றவர்கள் அவர்கள். அத்தகையவர்களிடம் விலைபோய் என் மனைவியையே நடுவீதியில் நிறுத்தும் அளவுக்கு நான் துரோகி அல்ல. எனக்கும் என் மனைவிக்கும் இடையில் எந்தப்பிரச்னையும் இல்லை.

மக்கள் திரள்

தனிப்பட்ட லாபத்திற்காக நானும் என் மனைவியும் பிரிவது ஒரு சிலருக்கு அவசியமாகிறது. இதனால் அவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில ஊடகங்களும் இப்படி கதைகட்டுகின்றன. பணத்திற்காகவோ பதவிக்காகவோ விலைபோகிற ஈனப்பிறவி நான் அல்ல. என் மனைவி தீபா மிகுந்த திறமைசாலி. நல்ல நிர்வாகி. அவரது அத்தை ஜெயலலிதாவுக்குள்ள அத்தனை தகுதிகளும் அவருக்கு இருப்பதால்தான் அவரை பேரவையைத் துவக்கச்சொல்லி வலியுறுத்தியது நான்தான்.  பேரவை ஆரம்பித்தது முதல் இன்று வரை அவருக்கு  உறுதுணையாக  இருந்துவருகிறேன். அவரும் நானும் சண்டைபோட்டு தனித்தனி வீட்டில் வசித்துவருகிறோம் என்பது வடிகட்டின பொய்ப்பிரசாரம். 

என்றைக்கும் ஜெயலலிதா அவர்களின் விசுவாசி. என் மனைவியின் வளர்ச்சியில் பெரும் அக்கறையும் ஆர்வமும் கொண்டவன், யாரிடமோ லாபம் பெற்று என் மனைவியையே எதிர்க்கும் ஒரு நிலை ஏற்பட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாலும் செய்துகொள்வேனே தவிர யாரிடமும் போய் நிற்கமாட்டேன். நானும் தீபாவும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். ஒரே வீட்டிலேயே வசிக்கிறோம்.

மாதவன்

இப்போதும் நான் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பதும் தீபாவுடன் நான் வசித்துவரும் தி. நகர் இல்லத்திலிருந்ததான். பேரவையின் வளர்ச்சியைத் தடுக்கவும், எங்கள் ஒற்றுமையால் எங்கே தங்களின் வருமானம்  போய்விடுமோ என அஞ்சும் ஒரு சிலர்தான் இத்தகைய விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 2 குழுக்களாக 3 பேர் தலைமையில் இதற்கான சதிவேலையில்  ஈடுபட்டுவரும் அவர்களின்  சதிக்கு  தீபாவோ நானோ ஒருபோதும் இரையாகமாட்டோம். 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு வியுகம் வகுத்ததுமுதல் கடும் வெயிலில் பிரசாரமும் செய்ததுவரை  நானும் தீபாவும் சேர்ந்தே எந்த முடிவுகளையும் எடுக்கிறோம். இனிமேலும் எடுப்போம். தீபாவின் வளர்ச்சிக்காக இறுதிவரை  அவருக்கு ஒரு கணவராக உறுதுணையாக இருப்பேன். அரசியல் லாபத்திற்காக கணவன் - மனைவி பந்தத்தையே முறிக்க நினைப்பவர்களை நாங்கள் வணங்கும் அம்மாவின் ஆன்மா சும்மா விடாது” என்றார் ஆவேசமாக குரலில். 

“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..”என வசனம் பேசிய கவுண்டமணி ஒரு தீரக்கதரிசனமாக கலைஞன்தான்போல..

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close