Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழ்நாட்டில் மட்டுமா உங்களுக்கு நல்ல பெயர்?!' -தம்பிதுரையிடம் தகித்த மோடி

பிரதமர் மோடி

ரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் யுத்தத்தில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். 'மத்திய அரசின் தொடர் நெருக்குதல்களைத் தணிக்கும்விதமாக, பிரதமரை சந்தித்துப் பேசினார் தம்பிதுரை. இந்த சந்திப்பில் பல விஷயங்கள் விளக்கப்பட்டாலும், கார்டன் சமாதானத்தை ஏற்கும் முடிவில் பிரதமர் இல்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அடுக்கடுக்கான சோதனைகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே, மத்திய அரசின் அதிரடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. டெல்லியில் பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்த மரியாதையில் சிறிதளவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்குக் கிடைக்கவில்லை. 'பிரதமரை சந்தித்துத் தமிழக பிரச்னைகள் தொடர்பாக பேச முடியவில்லை. மிகவும் வெட்கமாக இருக்கிறது' என பகிரங்கமாக பேட்டியளித்தார் தம்பிதுரை. மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்திக்க அவர் சென்றபோதும், 'துணை சபாநாயகராக வந்திருக்கிறீர்களா? சசிகலா பிரதிநிதியாக வந்திருக்கிறீர்களா?' எனக் கேட்டு கலாய்த்தார். அடுத்தடுத்து நடந்த வருமான வரித்துறை சோதனைகள் ஒருபுறம் இருந்தாலும், சசிகலாவின் கட்சிப் பதவியை உறுதி செய்யும்விதமாக டெல்லியில் காய் நகர்த்தல்களைத் தொடங்கியிருந்தார் தம்பிதுரை. இதிலும், அவருக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. 

தம்பிதுரை"தேர்தல் ஆணையத்தில் நாளை மறுநாள், அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக விவாதம் நடக்க இருக்கிறது. கார்டனில் இருப்பவர்கள் மீது பிரதமர் அலுவலகம் கடுமையான கோபத்தில் இருக்கிறது. காரணம். கடந்த சில நாட்களாக பிரதமர் மீதும் மத்திய அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றன அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ ஊடகங்கள். 'நாம் எதிர்த்தால் அடங்கிப் போய்விடுவார்கள்' என தினகரன் போட்ட கணக்கு, தலைகீழாக மாறிவிட்டது. சேகர் ரெட்டி விவகாரத்தை முன்வைத்து, அதிகாரத்தில் உள்ளவர்களை நெருக்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதை உணர்ந்து, 'எப்படியாவது பிரதமரை சந்தித்துப் பேசுங்கள்' என தம்பிதுரைக்கு உத்தரவிட்டார் தினகரன். கடந்த 12-ம் தேதி பிரதமரை சந்திக்கவும் அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ‘பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனடியாக பதில் வரும்’ என்று தம்பிதுரை எதிர்பார்க்கவில்லை" என விளக்கிய ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர், "இந்த சந்திப்பில், 'நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வருகிறோம். சின்னத்தை எங்களுக்கு ஒதுக்குவதற்கு உதவி செய்ய வேண்டும். நிதித்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்' என வெள்ளைக் கொடியை பறக்கவிட்டார். தம்பிதுரையின் கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர், 'இரட்டை இலைச் சின்னத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரும் தலையிடவில்லை. தேர்தல் ஆணையத்தில் நீங்கள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்றவர், 

சசிகலா'தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல. இந்தியா முழுக்க இருந்து உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பற்றியும் அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் பற்றியும் புகார்கள் வந்துள்ளன. பிரதமர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மெயில்கள் வருகின்றன. அனைத்தையும் நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதேபோல், நிதித்துறை அமைச்சகம் வழக்கமான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. இதில் நாங்கள் என்ன செய்வது?' என தம்பிதுரைக்குப் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார். அவர் சென்ற பிறகு, மைத்ரேயனும் பிரதமரை சந்தித்து தேர்தல் ஆணைய விவகாரம் குறித்தும் கார்டனில் உள்ளவர்களின் நடவடிக்கைகளையும் விவரித்திருக்கிறார். பிரதமர் அலுவலக விளைவுகள் இப்படியிருக்க, சந்திப்பு குறித்து கார்டனுக்குத் தகவல் அனுப்பிய தம்பிதுரை, 'நம்முடைய கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இனி மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்க வேண்டாம்' எனப் பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் மௌனமாக இருப்பதை உணர்ந்து, தினகரனும் இந்தத் தகவலை நம்பியிருக்கிறார். ஆனால், சீனியர் அமைச்சர்கள் வடிவில் எதிர்ப்பு கிளம்புவதை அறிந்து, 'தமிழக அமைச்சரவைக்குள் பா.ஜ.க கலகம் உண்டாக்கப் பார்க்கிறது' என கார்டனில் உள்ளவர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்" என்றார் விரிவாக. 

" சசிகலா அல்லாத அ.தி.மு.கவை உருவாக்குவதற்காகத்தான் இத்தனை வேலைகளும் வேகமெடுத்து வருகின்றன. 'அவர்களை ஒதுக்கிவைத்தாலே நடவடிக்கைகளின் வேகம் குறைந்துவிடும்' என ஆளும்கட்சியின் அமைச்சர்களுக்கு விரிவான ஆலோசனைகளை டெல்லி வழங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் தினகரனுக்கு நெருக்கமான விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்குகள் பாய்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், இந்த விவகாரத்தை தினகரனிடமே எடுத்துக் கூறியுள்ளனர். தமிழக அமைச்சரவையில் ‘கார்டன் கேபினட், எடப்பாடி கேபினட்’ என இரண்டு அணிகள் உள்ளன. சசிகலா உறவுகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் வரையில் மத்திய அரசின் நடவடிக்கைகளும் நிற்கப் போவதில்லை” என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

சேகர் ரெட்டியை முன்வைத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய அரசு, தற்போது விஜயபாஸ்கரை முன்வைத்து முக்கிய ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ‘ மூன்றாவது இன்னிங்ஸ் யாரை குறிவைத்து நடக்கும்?’ என்ற விவாதங்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. 

- ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement