வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (15/04/2017)

கடைசி தொடர்பு:17:55 (15/04/2017)

அ.தி.மு.கவில் மறைந்த மகாதேவனின் பங்கு என்ன? 

மகாதேவன்

சிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பினால் மரணமடைந்தார். 'மகாதேவன்'- என்ற பெயரைக் கேட்டால் வெளியுலகம் எப்படியோ, அரசியல் களத்தை கலக்கம் அடையச் செய்யும். சசிகலா குடும்ப உறவுகளே கொஞ்சம் கலக்கமடைவார்கள். குடும்ப உறுப்பினர்களோ கொஞ்சம் தள்ளியே நிற்பார்கள். அப்படி அதிரடியான செயல்பாடுகளும் விநோத நடைமுறைகளையும், கொண்ட ஒரு மனிதர் மகாதேவன்.

சசிகலா குடும்பத்தில் ஜெயலலிதாவினால் பதவி வழங்கப்பட்டவரில் மகாதேவன் இரண்டாமவர். தினகரன் பதவியை ஜெயலலிதா பிடுங்கிய நேரத்தில் 'தனது அக்கா மகனுக்குப் பதிலாக தனது அண்ணன் மகனை' கட்சிக்குள் நுழைத்தார் சசிகலா. ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் பதவியைப் பெற்ற சில மாதங்களிலேயே  இவருடைய பந்தாவினாலும், பகட்டாலும் பதவியைப் பறிகொடுத்தார்.

மகாதேவனை 'பணத்தேவன்' என்று தான் அவருக்கு நெருக்கமானவர்களே அழைப்பார்கள். பண விஷயத்தில் அந்த அளவுக்கு கடுமை காட்டுவார். காவிரி டெல்டாவில் டெண்டர்கள் அனைத்திலும் இவர் வாரிச் சுருட்டிய கதையை இன்றுவரை அ.தி.மு.கவினர் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். 

தஞ்சாவூரில் மகாதேவன் வீட்டில் அவரை  டெண்டர் உள்ளிட்ட விஷயங்களுக்காக பார்க்கச் செல்லும் நபர்களை அன்போடு உபசரித்து உள்ளே அழைத்து செல்வார்கள். மகாதேவனுடன் போட்டோ செஷன் நடைபெற்று முடிந்து பிறகு வெளியேறும் நேரத்தில் கையில் ஒரு துண்டுச்சீட்டை கொடுப்பார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையை கொடுத்துவிட்டு தான் வீட்டை விட்டு வெளியேற முடியும். இப்படி அவரை சந்திப்பதற்கே கப்பம் கட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

“தன்னை ஒரு டெரராக காட்டிக்கொள்வதில் அலாதி விருப்பமுடையவர் மகாதேவன்.  ஆந்திர திரைப்பட வில்லன்களைப் போல தன்னைச் சுற்றி எப்போது பத்து அடியாட்களை சபாரி சூட்டுடன் நிற்கவைத்திருப்பார். இவர்களைத் தாண்டித் தான் மகாதேவனை யாரும் நெருங்க முடியும்.

மகாதேவன் மீதான மற்றொரு சர்ச்சை,  துப்பாக்கியைக் காட்டி  மிரட்டுவார் என்பது. பிரச்னைக்காக பஞ்சாயத்து பேச அழைத்துவருபவர்களிடம் அவர்களை நிற்க வைத்துக்கொண்டே பேசியபடி மெதுவாக டேபிளின் மீது துப்பாக்கியை எடுத்துவைப்பார். அதுவே வந்தவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இதுதான் அவரது 'முதற்கட்டப் பேச்சுவார்த்தை'. அப்படியும் பேச்சுவார்த்தை நீண்டு ஒரு முடிவு வராமல் போவதாக தெரிந்தால் துப்பாக்கியை கையில் சுழற்றியபடி பேசிக்கொண்டு இருக்கும்போதே “துப்பாக்கியைத் தூக்கி சுட்டுப்புடுவேன்” என்று எழுந்து நிற்பார் சடாரென. இதுதான் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை. மிரண்டுவிடுவார்கள் வந்தவர்கள். இந்த 2 பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலும் எதிலாவது ஒன்றில் தீர்வு கிடைத்துவிடும். 

சசிகலா

சில முறை டென்ஷன் அதிகமாகி துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டதும் நடந்திருக்கிறது என்கிறார்கள் அவருடன் இருந்த நபர்கள்.
விதவிதமான அசைவ உணவு, எப்போதும் 'உற்சாக' வெள்ளம் என இருந்த மகாதேவனின் கடைசிக் காலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிகப் பாதைக்குத் திரும்பியது.

தன்னிடம் பணிபுரிபவர்களிடம் பர்ஃபெக்ட் ஆக இருக்கவேண்டும் அவருக்கு. காரின் ஓட்டுநர் கூட கையில் கிளவுஸ், தலையில் தொப்பி என நேர்த்தியாக கார் ஓட்ட வேண்டும். கிளவுஸ் இல்லாமல் காரில் ஏறினால் கார் டிரைவர் பாடு அதோகதி தான். மகாதேவன் காரில் தற்காப்பு ஆயுதங்கள் இல்லாமல் இருக்காது என்கிறார்கள். தன் கார் பின்னால் இவருடைய ஆதரவாளர்கள் காரும் எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கும்.

இவருடைய ஆட்கள் தான் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கும், போயஸ் கார்டன் பாதுகாப்புக்கும் இருந்தவர்கள். இப்போது போயஸ்கார்டன் பாதுகாப்பில் இருக்கும் தனியார் செக்யூரிட்டியின் ஆட்கள்கூட இவருடைய ஆட்கள் தான்.  தஞ்சையில் மகாதேவன் பற்றிய பிரச்னை கிளப்பும் சர்வ அதிகாரம் படைத்தவர் திமுகவின் முக்கிய பிரதிநிதி ஒருவர்தான். ஆனால் நீங்கள் அவரிடம் போய் இவரது அடாவடியைச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்த மறுவினாடி, நீங்கள் வந்துபோன தகவல் மகாதேவனுக்கு போய்ச் சேர்ந்துவிடும். அதுதான் மகாதேவன்! 

2011-ம் ஆண்டு அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட பின் மிகவும் சைலண்டாக இருந்தார். தனது பஸ் கம்பெனியைக்கூட தனது தம்பி தங்கமணியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு,கோயில் குளம் என்று பயணிக்க ஆரம்பித்தவரின் இறுதி மூச்சும் அதே கோவில் வாயிலிலேயே முடிந்துள்ளது. 

- அ.சையது அபுதாஹிர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்