வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (15/04/2017)

கடைசி தொடர்பு:20:47 (15/04/2017)

தாதாக்களின் பிடியில் பொதுக்குழாய்கள்! கொதிக்கும் தண்ணீர் பஞ்சாயத்துகள்!

தண்ணீர்

ழைநீர் சேகரிப்புத் திட்டம் முதற்கொண்டு எந்தத் தண்ணீர்  திட்டமும் போதுமான அளவுக்கு செயல்பாட்டில் இல்லாததால், தண்ணீர்ப்பஞ்சம் தலை விரித்தாடுகிறது.  தலைநகர் சென்னையில் தண்ணீர்த்தேவை என்பது  அபாய கட்டத்தை எட்டியுள்ளது.சில தொகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே ஓரளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்ற நிலை காணப்படுகிறது.தண்ணீருக்கான தேவையை அந்தந்த பருவ காலத்தில் மட்டுமே புதிதாய் உணர்வதும்,  அப்போது மட்டுமே பதறுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது. முன்னேற்பாடு என்பது  ஒரு போதும் இருந்ததில்லை.அணைகளின் நீர்மட்டம் குறித்த செய்திகளை கேட்கும்போது பரிதாப 'உச் ' கொட்டுவதோடு நம்முடைய  சமூக அக்கறை முடிந்துவிடுகிறது.  அரசுகளின்  மெத்தனப் போக்கை காட்டும் முக்கியக் கண்ணாடியே தண்ணீர்ப் பிரச்னைதான் எனலாம்.அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீடுகளில் இருக்கும் குடிநீர் இணைப்புகளில் காலை 4 மணி முதல் தண்ணீர் வரும்.  அதுவே ஜனவரி முதல்  மார்ச்  இறுதி வரையில், காலை 6 மணிக்குத்தான் தண்ணீர்  விடப்படுகிறது.  அதுவும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த நீர்வரத்தும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. ஏப்ரல் - மே மாதங்கள் என்றால் 'ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரே பூ பூத்தது' என்று பிள்ளைகள் விளையாடினால்கூட கோபம் வரும் அளவுக்குத் தண்ணீர் பஞ்சம் கொதிநிலைக்கு போய்விடுகிறது.  இப்படி ஒவ்வொரு மாதமும் தண்ணீர் பிரச்னையை  அனுபவித்தும்கூட ஏனோ அரசுகள் தீர்வுக்கான வழியைத் தேடுவதில்லை.

  காத்திருக்கும் காலி குடங்கள்        

மக்கள் அரசுகளை நம்பி இருக்கிறார்கள். அரசுகள் மௌனியாக இருக்கும்போது, அதே  மக்கள் வேறு வழி தெரியாமல்  குடங்களுடன் சாலைக்கு வந்து மறியல் செய்கிறார்கள்.  மறியலில் இருப்பது தங்கள் குடும்பத்துப் பெண்களும்தான் என்றபோதும் அவர்களையும் சேர்த்தே கைது செய்யும் பரிதாப சூழலில் காவல்துறையினரும் உள்ளனர். தண்ணீர்ப் பஞ்ச காலங்களில், வீதிக்கு ஒரு ' சின்டெக்ஸ்' டாங்கினை  வைத்து அதில், லாரிகள் மூலம் குடிநீர் வாரியமும், மாநகராட்சியும் நீரை நிரப்புகிறது. அதிலும் ஒரு ஒழுங்கு முறை இல்லை. மக்கள் தேவையை  தீர்க்க எடுக்கும் நடவடிக்கை இது என்று சொல்லப்பட்டாலும் இந்த நீர்  பொது மக்களுக்கு கிடைப்பதில்லை. உள்ளூர் தாதாக்களும், அரசியல் வட்டங்களும்  'சின்டெக்ஸ்' டாங்குகளை தாங்களே பராமரிப்பு செய்வதுபோல் தங்கள் பிடிக்குள் வைத்துள்ளனர். சென்னையின் பல தெருக்களில் இதன் மீதான கோபங்கள் வெடித்து பெரும் சண்டையாகவே போய்க் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரு குடம் நீரை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையில் விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். குடிநீரை விற்றால் குற்றம், தண்டனை என்று ஆங்காங்கே எழுதி வைத்திருந்தால் கூட பரவாயில்லை. தண்ணீரைக் கொண்டு வரும் மெட்ரோ வாட்டர் லாரியிலும், சின்டெக்ஸ் லாரியிலுமே இதுகுறித்த வாசகங்கள் பளிச்சிடுகிறது. அதே இடத்தில்தான் பணமும் வசூலிக்கிறார்கள். 

           பல கிலோ மீட்டர் கடந்து வரும் குடிநீர்

ஒரு லாரியில் நீர் கொண்டு வந்து டாங்குகளில் நிரப்பிச் சென்றால், ஏரியாவுக்கு ஏற்றவாறு லாரி டிரைவருக்கு  100 முதல் 250 ரூபாய் வரையில் 'சின்டெக்ஸ்'  பராமரிப்பு(?) தாதாக்கள் கொடுக்கிறார்கள். கொடுத்ததை விட மூன்று மடங்கு  கூடுதலாய் எடுக்கும் வகையில் விலை வைத்து சின்டெக்ஸ் தாதாக்கள் விற்கிறார்கள்.மெட்ரோ வாட்டர்   முதல் மெட்ரோ போலீஸ் வரையில் அத்தனை பேருக்கும் தெரிந்தேதான் இது  நடக்கிறது. யாரும் யாரையும் கண்டிப்பதில்லை, தட்டிக் கேட்பதும் இல்லை. பிரச்னை பெரிதாக வெடித்தால் போலீஸ் ஸ்டேசனில் வைத்து பஞ்சாயத்து செய்து சுமூகமாக முடித்துக் கொள்கிறார்கள்.சென்னை ஆர்.கே.நகர் வாசிகளோ, "தண்ணீர் பஞ்சத்தையும் போக்க முடியவில்லை,  கொஞ்சம் போல் வரும் தண்ணீரை காசுக்கு விற்பதையும் தடுக்க முடியவில்லை. எங்களுக்கு கவுன்சிலரும் இல்லை, தொகுதிக்கு எம்.எல்.ஏ-வும் இல்லை. தண்ணீர் விற்பனை தாதாக்கள்தான்  இருக்கிறார்கள்; ஒவ்வொரு தெருவிலும் அவர்களின் ராஜாங்கம்தான். இப்போதைக்கு  ஒரு வார்டுக்கு இருபது தாதாக்கள் இருக்கிறார்கள். சிலர் அரசாங்கம் போட்டு வைத்த பொதுக்குழாயை கழற்றி தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொள்கிறார்கள்.  ''வாஸர், நட் போனால் மாற்றிப் போட்டு ஆண்டாண்டு காலமாக தெருக்குழாயைப் பராமரிப்பது நான்... அதனால் அந்தப் பொதுக்குழாயின் மீது அதிகாரம் செலுத்த எனக்குத்தான் உரிமை இருக்கிறது'' என்று சட்டம் பேசுகிறார்கள்'' என்கிறார்கள். 'ஆமா... இந்த பராமரிப்பு ஒழுங்கு முறை வேலைகளைச் செய்வது கார்ப்பரேஷன்தானே?' குடிநீர்ப் பஞ்சம் என்ற ஒரு விஷயத்தை கிண்டினால் இத்தனை விவகாரங்கள்...

 - ந.பா.சேதுராமன்


டிரெண்டிங் @ விகடன்