Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எங்களைப் பிரிக்க மூன்று பேர் தலைமையில் இரண்டு குழு!” மாதவன் தீபா

தீபா

ரசியல், கூட்டணிகளைப் பிரிக்கும் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருப்போம். கணவன் மனைவியைக்கூட அது பிரிக்கும் என்ற விஷயம் தீபாவின் அரசியல் நுழைவுக்குப்பின்னர்தான் தெரியவந்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் யாரும் எதிர்பாராதவகையில்  2 விஷயங்கள் அரங்கேறின. ஒன்று, சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானது. மற்றொன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தது. 

பொதுச் செயலாளரான கையோடு சசிகலா, முதல்வராவதற்கான முஷ்தீபுகள் துவங்கியபோது தமிழக அரசியலின் அடுத்த பல வருடங்களுக்கான அரசியல் பரபரப்பும் துவங்கிவிட்டது. பவ்யம் புகழ் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக கொடிபிடித்தார். நேற்றுவரை அத்தை ஜெயலலிதாவின் வீட்டு வாசலில் அவரைக்காணக் கூடப் போராடிவந்த தீபா, பேரவை ஒன்றைத் துவக்கி அத்தையின் கட்சிக்காரர்களை தன் வீட்டு வாசலில் காத்திருக்கவைத்தார். 


தம்பதி சகிதமாக நேற்றுவரை எதிரணியை விமர்சித்துவந்த இருவரும் இப்போது தாங்களே ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

தீபாநிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி, பணப்பரிவர்த்தனை, புதிய கட்சித்துவக்கும் மாதவனின் முடிவு இவைகளால் தீபா - மாதவன் இருவரிடையே பிரச்னை முற்றி உச்சகட்டமாக நேற்று தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன் இருவரது ஆதரவாளர்களும் சரமாரியாக மோதிக்கொண்டனர். காவல்துறையைக் களத்தில் இறக்கும் அளவுக்கு நிலைமைபோன நிலையில் தீபாவின் கணவர் மாதவனுடன் பேசினோம்.

தீபாவுக்கும் உங்களுக்கும் இடையே என்னதான் பிரச்னை ?

 எந்த பிரச்னையும் கிடையாது. இந்த நிமிடம் வரை நாங்கள் ஒருவருக்கொருவர் அன்போடும் நட்போடும்தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் கிடையாது. பேரவையின் இரு கோஷ்டிகளுக்கிடையே பதவி சம்பந்தமாக எழுந்த சலகலப்பு அது. அதை கணவன் மனைவி பிரச்னையாக சிலர் திசைமாற்றுகின்றனர். நாங்கள் ஒற்றுமையாக இருப்பது அவர்களுக்கு கிடைக்கும் சில ஆதாயங்களை தடுக்கும் என்பதால் அவர்கள் இப்படி பிரச்னைகளை கிளப்புகின்றனர். ஆனால் கனவிலும் அப்படி ஒன்று நடக்காது என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். 

தீபா உங்களை வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாக சொல்லப்படுகிறதே...

நல்ல நகைச்சுவை இது. எங்களை விடுங்கள்..சாதாரணமாக ஒரு கணவன் மனைவிக்கு இடையே தகராறு வந்தால் கணவனைத்தான் வீட்டைவிட்டு துரத்துவார்களா? நானும் என் மனைவியும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இன்றுவரை வசித்துவருகிறோம். இப்போதும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பது தீபாவும் நானும் சேர்ந்துவசிக்கும் அதே தி.நகர் வீட்டிலிருந்துதான். என் தொழில் நிமித்தமாக வெளியே சென்றுவருகிறேன். நானும் தீபாவும் பிரிந்திருக்கிறோம் என மற்றவர்கள் சொல்வததற்காகவெல்லாம் 24 மணிநேரமும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கமுடியுமா?..

பேரவையை முடக்குவதற்காக சசிகலா தரப்பிடமிருந்து பணம் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறதே ?

அப்பட்டமான பொய். என் உயிர் போகும் வரை அப்படி ஒரு துரோகத்தை நான் செய்யமாட்டேன். சொந்த மனைவிக்கே துரோகம் செய்யும் ஈனப்பிறவி அல்ல நான். அரசியலில் விமர்சனம் வருவது சகஜம்தான். ஆனால் மனைவியை வீதிக்கு கொண்டுவர பணம் பெற்றுவிட்டதாக குரோதமான இத்தகைய விமர்சனம் வேதனையைத்தருகிறது. நான் என்றுமே ஜெயலலிதாவின் பக்தன். அவருக்கோ என் மனைவி தீபாவுக்கு எதிராகவோ எந்தக்காலத்திலும் ஒரு துரோகம் செய்ததில்லை. இனியும் செய்யமாட்டேன். அப்படி ஒரு நிலைவந்தால் துாக்குப் போட்டு இறப்பேனே தவிர துரோகம் செய்ய நினைக்கமாட்டேன். பேரவை எதிர்காலத்தில் என் நேரடிக் கண்காணிப்பில் வந்தால் தங்களின் வருமானம் பாதிக்கும் என்ற அச்சத்தில் எந்த வழியிலாவது என்னையும் தீபாவையும் பிரிக்க நினைக்கிறார்கள். 

“மாதவன் இவர்களிடம் பணம் வாங்கிவிட்டார். அவர்களிடம் பணம் வாங்கிவிட்டார்” என தொடர்ந்து சொன்னால் என்றாவது ஒருநாள் தீபா நம்பிவிடமாட்டாரா என்ற நப்பாசையில் தொடர்ந்து இப்படி பேசிவருகிறார்கள்.  ஒருநாளும் அவர்கள் நோக்கம் நிறைவேறாது.

பெரிய வீட்டுப்பெண் என்பதால்  திட்டமிட்டு தீபாவை நீங்கள் காதலித்து திருமணம் செய்ததால்தான் ஜெயலலிதா உங்கள் திருமணத்துக்கு வரவில்லை என்பது உண்மையா? 

மாதவன்

முற்றிலும் தவறு. ஜெயலலிதாவுக்கு தெரியாமலோ அவரது சம்மதமின்றியோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. எங்கள் திருமணமும் காதல் திருமணம் அல்ல. கல்யாணத்திற்குப்பிறகுதான் தீபாவை காதலிக்க ஆரம்பித்தேன். என் தொழில் சம்பந்தமாக தீபாவின் தாயாரை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது என் பழக்கவழக்கங்களால் கவரப்பட்ட அவர் தன் மகளை எனக்குத் திருமணம் செய்துதர விரும்பினார். அது ஜெயலலிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டு அதற்கு அவர் முழு சம்மதமும் தெரிவித்தார். முதல்வராக இருந்ததால் அவரால் நேரடியாக எங்கள் திருமண சடங்குகளில் கலந்துகொள்ளமுடியவில்லையே தவிர திருமணம் தொடர்பான ஒவ்வொரு முடிவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டே எடுக்கப்பட்டது. திருமண நாளில் முதல்வர் வருவது பற்றி அதிகாரிகள் எங்களிடம் சொன்னார்கள். கடைசி நிமிடத்தில் அது மாறியதாக சொன்னார்கள். அதற்கு காரணம் அவருக்கு விருப்பமில்லை என்பதல்ல. 

ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்...இந்திய அளவில் பலம்பொருந்திய முதல்வராக அன்று இருந்த ஜெயலலிதா தன் சொந்த அண்ணன் மகளுக்கு நடக்கும் திருமணம் பிடிக்காமல் போய் இருந்தால் ஒரு நிமிடத்தில் அதை தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?... அவரை எதிர்த்து திருமணம் செய்கிற அளவுக்கு நான்தான் அவ்வளவு பெரிய ஆளா..? தனிப்பட்ட முறையில் அண்ணன் குடும்பத்தினருடன் எதாவது மனஸ்தாபம் இருந்திருக்கலாம். அதன்பிறகும் எங்கள் மீது அவர் பாசமாக இருந்தார். இடையில் சதி செய்து எங்களை அவர் சந்திக்கமுடியாமல் செய்துவிட்டனர் சிலர். அத்தையைப் பார்க்கச் செல்லும் தீபாவுடன் செல்லும்போது பலமுறை போயஸ் கார்டனில் பாதுகாவலர்களிடம் அடி உதை பட்டிருக்கிறேன். கடைசியில் நான் பணம் வாங்கிவிட்டேன் என என்னைக் கொச்சைப்படுத்துகிறார்கள். 

தீபா திருமணம்

தனிப்பட்ட முறையில் தீபாவைப்பற்றி சொல்லுங்களேன்...

தீபா அவர் அத்தையைப் போன்று மிகுந்த திறமைசாலி. சமூக ஊடகங்களில் குறிப்பிடுவதுபோல்  அவர் பொறுப்பற்ற தலைவர் அல்ல... தன் அத்தையைப் போல் துணிச்சலும் தைரியமும் மிக்கவர். சுறுசுறுப்பானவர். ஒரு விஷயத்தில் இறங்கினால் யார் சொன்னாலும் அதிலிருந்து பின்வாங்கமாட்டார்.  பேரவை துவங்கியபோது அடிப்படையில் சில பிரச்னைகள் இருந்தது உண்மை. அரசியலுக்கு அவர் புதியது என்பதால் அது நிகழ்ந்தது. ஆனால் அடுத்தடுத்து  நல்லமுறையில் பேரவையை கொண்டு சென்றோம். பேரவைக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைக் கண்டு பொறாமை கொண்ட சிலர்தான் பேரவைக்குள் புகுந்துகொண்டு அதை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் இறங்கினர். அதை தடுத்து சீர் செய்ய முனைந்ததால் என்னைக் குறிவைத்து தாக்குகிறார்கள். என்னை பேரவையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டால் தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்பது அவர்களின் அரசியல் கணக்கு. 

யார் அப்படி உங்களையும் தீபாவையும் பிரிக்க நினைக்கிறார்கள்...

நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லவிரும்பவில்லை. உள்ளேயும் வெளியேயும் பலபேர்  இருக்கிறார்கள். எங்களைப்பிரிப்பதை விட எங்களைப்பிரிப்பதன் மூலம் பேரவையை முடக்குவதுதான் அத்தகையவர்களின் நோக்கம். தன்னுடன் இணைந்து செயல்படவில்லை என்ற ஆத்திரத்தில் ஓ.பி.எஸ் ஆகவும் இருக்கலாம்...திமுக வாகவும் இருக்கலாம். 3 பேர் தலைமையில் 2 குழுக்கள் இதற்காக 24 மணிநேரமும் பணிசெய்கிறார்கள். 

தீபா

எங்களுக்கிடையே பிரச்னை எழுந்து நாங்கள் பிரிந்துவிட்டதால் இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் லாபம் இருக்கிறது. தீபா பேரவையைத்துவக்கியபோது அதில் முழு மூச்சுடன் அவரது வளர்ச்சிக்கும் பேரவை வளர்ச்சிக்கும் பாடுபட்டேன். இன்றுவரை தொடர்ந்து பாடுபட்டுவருகிறேன். ஒரு நல்ல நோக்கத்திற்காக துவங்கப்பட்ட பேரவை வீணாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தினால் சலசலப்புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டுவருகிறேன்.

பேரவையை நீர்த்துப்போகச்செய்ய மறைந்த மகாதேவன் மூலம் உங்களை அணுகியதாக சொல்லப்படுகிறதே...


மகாதேவன் என்ற நபரை சத்தியமாக இதுவரை நான் சந்தித்ததே இல்லை. போதிய பொருளாதார நிறைவுடன் இருக்கிற எனக்கு,  யாரிடமும் சென்ற யாசகம் பெறவோ, கூலிக்கு வேலை செய்யவேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. 

பேரவை ஒன்று இயங்கும்போது நீங்கள் தனிக்கட்சி துவங்கும் திட்டம் ஏன்...

பேரவையின் அடுத்த கட்டம் கட்சிதானே. ஆர்.கே நகர் தொகுதியில் கூட கடைசி 5 நாட்கள் தொடர்ந்து நான் பிரசாரம் செய்தேன். தீபாவின் வளர்ச்சியையும் பேரவையின் வளர்ச்சியையும் விரும்பாதவனாக இருந்தால் நான் எதற்காக கடும்வெயிலில் சுற்றிப்பிரசாரம் செய்யவேண்டும்...தொகுதியில் தீபாவுக்கு பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. இவரது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது பிடிக்காமல்தான் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்தனர்.

- எஸ்.கிருபாகரன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close