Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுமிகள் ஈன்ற குழந்தைகள்! சென்னை மருத்துவமனை அதிர்ச்சி

 

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஏரியாவிலிருந்து, ஏப்ரல் 14-ம் தேதி காலை நமக்கு ஓர் அழைப்புவந்தது. இது, வழக்கமான அழைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அழைப்பு என்று அங்கே போகும் வரையில் நமக்குத் தெரியாது. பதினெட்டைத் தாண்டாத இரண்டு மாணவியர் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனுமதிக்கு அவர்கள் சொன்ன காரணங்கள் வேறு. ஆனால், இரண்டு மாணவிகளுமே குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார்கள். படிக்கும் வயதில் பிள்ளையைப் பெற்றவர்கள் என்பதோடு, இரண்டு மாணவிகளுமே மைனர்கள் என்பதால், இதுகுறித்த முழுமையான விசாரணையைத் தேசிய மகளிர் ஆணையம் எடுத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அது தொடர்பாக  மருத்துவ வட்டாரமும், விசாரணை தரப்பும் நம்மிடம் பகிர்ந்ததை இங்கே பதிவிடுகிறோம்.

குழந்தை

“சிகிச்சைக்குவந்த மாணவிகளில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் வசிப்பவர். கடந்த 13-ம் தேதி இரவு, ‘வயிற்றில் கட்டி இருப்பதால் வலியால் தினமும் துடிக்கிறார்’ என்று சொல்லி உறவினர்கள் அந்த மாணவியைக் கூட்டிவந்தார்கள். இரவு நேரமாகிவிட்டதால், முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.  ட்ரிப் மட்டும்  ஏற்றி  அந்த மாணவியை ஓய்வில்வைத்தோம்.வயிற்றுவலியை கன்ட்ரோல் செய்ய அதிக பவர் இல்லாத மாத்திரை மட்டும் கொடுக்கப்பட்டது.

காலையில், துறை பேராசிரியர் வந்தபின், அந்த மாணவியைச் சோதித்துவிட்டு உடனடியாக ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கி வரச்சொன்னார். ஸ்கேன் எடுக்கக் காத்திருந்த சொற்ப நிமிடங்களில் எல்லாமே மாறிப் போனது. ஸ்கேனுக்காகக் காத்திருந்த அந்த அறையிலேயே அந்த மாணவி, அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றார். சுகப் பிரசவம். தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்.பிரசவித்த அந்த மாணவி, பதினெட்டு வயதைத் தாண்டாதவர். அருகிலுள்ள அரசு  ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து அவரை அங்கே அனுப்பிவிட்டோம். அந்த மாணவியின்  தாயாரிடம் இதுகுறித்து விசாரித்தோம். அவருக்கு  எதுவும் சொல்லத் தெரியவில்லை” என்றனர். கிடைத்த தகவல்களை வாங்கிக்கொண்டு அந்த மாணவியை நேரில் போய்ப் பார்த்தோம். வெயிலில் துவண்ட வெற்றிலைக்கொடிபோலக் கிடந்தார். முகத்தில் குழந்தைத்தனம் அப்படியே இருந்தது. அவருக்குப் பக்கத்தில் அவர் பெற்ற குழந்தை. அவரோ, மயக்க நிலையில் இருந்தார்.

இன்னொரு மாணவி குறித்து விசாரித்தோம். “அவர் இன்னும் ஸ்டான்லியில்தான் இருக்கிறார், அவருக்குப் பெண் குழந்தை இறந்தே பிறந்தது. குழந்தையின் தாய் நிலைமையும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது’’ என்றனர்.மேலும், “அரியலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவைச் சேர்ந்த அவர், கல்லூரி ஒன்றின் மாணவி. விஷக்காய்ச்சல் மற்றும் அடிக்கடி வலிப்பு வருவதாகச் சொல்லி அவரை கடந்த 14-ம் தேதி, யாரோ ஸ்டான்லியில் சேர்த்தனர். அவரைச் சோதனைக்கு உட்படுத்தியபோதுதான் அவர் பிரசவித்து சில மணி நேரம்தான் ஆகிறது என்பதை அறிந்தோம். அவருக்குச் சிகிச்சையை தொடங்கியதுமே, அவர் பெற்ற குழந்தை இப்போது எங்கிருக்கிறது என்ற தகவலையும் விசாரித்துத் தரும்படி போலீஸுக்குத் தகவலைச் சொன்னோம். போலீஸார் விசாரித்தபோதுதான்  தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த மாணவிக்கு அதே நாளில் பிரசவம் ஆனதும், பிரசவத்தின்போது பெண் குழந்தை இறந்தே பிறந்ததும் தெரியவந்தது.

குழந்தை

போலீஸார் விசாரணையைக் கடுமையாக்கியபோதுதான், அதற்கும் முன்னதாகப் பிரபல கருத்தரிப்பு மையத்தில் அந்த மாணவி சிகிச்சை மேற்கொண்டதும் தெரியவந்தது. பிரசவத்தில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலைச் சென்னையில் அரசு உயர் அதிகாரியாக  உள்ள அந்த மாணவியின் உறவினர் வந்து பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், குழந்தையின்  உடலைப் பெற்று அவர் அடக்கம் செய்துவிட்டார்’’ என்றனர். இதுகுறித்து அரசு மருத்துவமனைகளில் ரகசிய விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். "பெண்களின் நலன் காக்க எத்தனை எத்தனை சட்டங்கள் போட்டு என்ன பயன்? படித்த பெண்களே இப்படி பாதுகாப்பு இல்லாமல் தங்கள் வாழ்க்கையை தொலைப்பதுதான் கவலை தருகிறது..." என்று வேதனையாகக் குறிப்பிட்டார் மூத்த செவிலியர் ஒருவர். அந்த மாணவிகளின் உடல்நிலை, வயிற்றின் தன்மை ஆகியவற்றைப் பெற்றோரோ, கல்வி நிறுவனம் தரப்போ அல்லது சக மாணவியரோ அறிந்திருக்க மாட்டார்களா? இது என்ன மாதிரியான போக்கு? இது சரிதானா? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்பதே நம்மிடம் மிச்சமிருந்த கேள்வி..
 

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement