Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மந்திரிகளின் சொத்துக்கள் பறிபோகிறதா? ஐ.டி. ரெய்டு பின்னணி

           ஐ டி ரெய்டு   நடந்த போது    

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில், இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த ரூ. 89 கோடி கணக்குக்கான ஆவணம் சிக்கியது. இப்போது அதையும் தாண்டிய  புதிய  கணக்குகள் குறித்த தகவலால் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் பணப்பட்டுவாடா புகார், தேர்தல் நிறுத்தம் என்பதைக் கடந்த தகவல் அது. ரெய்டின் போது, துணை ராணுவப்படை வீரர்  தன்னைத் தாக்கியதாக, போலீசில் மந்திரி விஜயபாஸ்கரின் கார் டிரைவர்  புகார் கொடுக்க,  போலீசாரும் 'அமைச்சரின் கார் டிரைவராயிற்றே' என்று  அந்தப் புகாரின் மீதான விசாரணையை  அன்று வேகப்படுத்தினர்.  உள்துறை அமைச்சகம் வரையில் இந்தத் தகவல் போகவே சுறுசுறுப்பானது. மத்திய அரசு. ஐ.டி. அதிகாரிகள் சோதனையின் போது அமைச்சர்  விஜயபாஸ்கரின் உதவியாளர் கையிலிருந்து மந்திரிகளின்  கைகளுக்கு மாறும்  ஆவணத்தின் பயணம் குறித்த வீடியோவும் அதே நேரத்தில் வெளியாகி வைரலானது. ஆவணங்களைப் பறித்தது, தடுத்தது,  மிரட்டியது, ரெய்டு நடக்கும் வீட்டில் அத்துமீறி நுழைந்தது என்று ஐ.டி. அதிகாரிகளும், துணை ராணுவமும் அதே அபிராமபுரம் போலீசில் அமைச்சர்கள் மீது புகார் கொடுத்தனர்.  அமைச்சர்களோடு சேர்த்து தமிழக அரசுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் மீதும்  எஃப்.ஐ.ஆர். போட்டது போலீஸ்.

     ஐ டி சோதனை குறித்து பேசும் மந்திரி விஜயபாஸ்கர்  

ஜாமீனில் வெளிவரக்கூடிய (183, 186, 189, 448 - ஐ.பி.சி) சட்டப் பிரிவுகள்தான் என்றாலும் ஒரே நேரத்தில் மூன்று அமைச்சர்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்பதால் ஆளுங்கட்சி தரப்பு ஆடிப்போனது. ஐ.டி. ரெய்டில் சிங்கிள் டிஜிட்டலாக சிக்கிய அமைச்சர்களின் வரிசை இரண்டொரு நாளில் டபுள் டிஜிட்டுக்கு போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விசாரணைத் தரப்பில் வலிந்து செய்திகளைக் கசிய விட்டுள்ளனர். 'ஏன் இப்படி தகவல் லீக் ஆகிறது, இது வெறும் மிரட்டல் மட்டுமா அல்லது அடுத்த நகர்வு இருக்கிறதா?' என்ற கோணத்தில் விசாரித்தோம். "அனைத்து மந்திரிகளுக்குமே எங்கள் செயல்பாட்டைச் சொல்லி விட்டு தான் செய்கிறோம். இதில் ஒளிவு மறைவே இல்லை. கை சுத்தமானவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் பலர்  ஹிட் லிஸ்ட்டில் உள்ளனர்.  ஆர்.கே.நகர் தேர்தலில் அவர்கள் பணத்தை பட்டுவாடா செய்ததும், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் சிக்கியதும் பெரிய விஷயமே அல்ல. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தேர்தலுக்கான பணப்பட்டுவாடா செய்யும் அலுவலகம் போல் மாற்றியுள்ளனர். அங்கிருந்துதான் ஏப்ரல் 2-ம்தேதி முதல் 7-ம் தேதிவரையில் பல கணக்கு வழக்குகளை பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல தகவல்கள் எங்களுக்கு  கிடைத்திருக்கிறது. அது ஒரு பக்கம் தனி விசாரணையாகப் போய்க் கொண்டிருக்கிறது. பிரதான விசாரணையே வேறு.

                      ஆவணத்துடன் தப்பிக்கும் மந்திரி விஜயபாஸ்கரின் உதவியாளர்                              

அவர்களின் சொத்துக்கள் எத்தனை ஆயிரம் கோடிகளில் எங்கெங்கு இருக்கிறது என்பதைச் சேகரிக்கும் வேலைதான். அதை எப்போதோ நாங்கள் தொடங்கி விட்டோம். ஆர்.கே.நகர் தேர்தல் வரவே கொஞ்சம் நிறுத்தி வைத்தோம். நாங்களே எதிர்பார்க்காத அளவில் இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகள் தொகுதியில் சாதாரணமாக புழங்கிய பின்னால்தான் அதுகுறித்தும் கவனத்தை செலுத்தினோம். தேர்தலில் வெற்றிபெற அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு வழிமுறையையும் நாங்கள் தனித்தனியே ஆவணப்படுத்தி வைத்திருக்கிறோம்.  முறைப்படுத்தப்படாத கணக்கில் அவர்கள் வைத்துள்ள சொத்துப் பட்டியலை அவர்களுக்கே அனுப்பி வைத்துள்ளோம். இதை அவர்கள் எதிர்பார்த்தே இருக்க மாட்டார்கள். இனி அவர்கள் எங்கும்   ஓடி ஒளியவோ சட்ட ரீதியாகத்  தடுக்கவோ முடியாத வகையில் அத்தனை ஆதாரங்களும் அவர்களுக்கு எதிராக இருக்கிறது.  முறைகேடாக சம்பாதித்ததை அனுபவிக்க முடியுமா என்ற சவால்தான் இப்போது அவர்கள் முன் பெரிதாய் நிற்கிறது.மக்களின் சொத்துக்களை  மீட்டு மக்களுக்கே கொடுக்கும் பணியில் 99 சதவீதம் முடிந்து விட்டது.  எங்களுடைய சோதனை வரலாற்றில் இப்போது கிடைத்திருப்பதுதான் மிகப் பெரிய மக்கள் சொத்து... இந்த 2017- ம் ஆண்டை அவர்களும் மறக்க மாட்டார்கள், நாங்களும் மறக்க மாட்டோம். மக்களும்தான்" என்று பொடி வைத்துப் பேசுகின்றனர்.நாளைய பொழுது எப்படி விடியுமோ ?

ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement