Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறிவாலயத்தில் திரண்ட 23 கட்சிகள்- கூட்டணிக்கு சிக்னல்!

அண்ணா அறிவாலயம்

“கடந்த 142 ஆண்டுகளில், இல்லாத வறட்சி இப்போது தமிழ்நாட்டை தாக்கி வருகிறது. வறட்சியால் வாங்கிய கடனைக் கட்ட இயலாமல் விவசாயிகள் தம்மையே அழித்துக்கொண்டு செத்து மடிகிறார்கள். விவசாய நாடு என்று போற்றப்படும் இந்த நாட்டில்தான் வாழ வழி கேட்டு விவசாய வர்க்கம் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது. பெரு நிறுவனங்கள் சுமார் 6 லட்சத்து 6 ஆயிரத்து 911 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்திருக்கிறது. அதை வசூலிப்பது குறித்து இந்த பி.ஜே.பி அரசுக்குக் கவலையில்லை. ஆனால் விவசாயிகளின் தேவைகளுக்காக வேண்டிய அளவிலான வறட்சி நிதி கொடுக்க அரசாங்கத்துக்கு வலிக்கிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை, தேசத் தலைநகரில் நிர்வாண நிலைக்குத் தள்ளியதே இவர்களின் ‘டிஜிட்டல் இந்தியா’ சாதனை.“ கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் குமுறல் இது.

‘இந்த குரலைக் கேட்டே தீர்வுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்’ என்கிறார்கள் அண்ணா அறிவாலயத்தில் குழுமிய பல கட்சிகளின் தொண்டர்கள். ஆம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 16 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்காக 23 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் குழுமியிருந்தனர். இதில் மக்கள் நலக்கூட்டணியில் ஒன்றாக இணைந்திருந்த சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்றது அரசியல் அரங்கில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. புகைப்பட கலைஞர்கள் மட்டும் படம் எடுக்க அனுமதித்தனர். படம் எடுத்தபின் அவர்களும் வெளியேற்றப்பட, அதன்பின் சரியாக 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. மு.க.ஸ்டாலினுக்கு இடப்புறம் துரைமுருகன் அமர, வலப்புறம் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு அமர, ‘வாங்க வாங்க’ என தனது வழக்கமான புன்னகையால் வரவேற்றார் துரைமுருகன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பல கட்சி தலைவர்கள் ஒரே இடத்தில், நேரில் சந்தித்துக்கொண்டதால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். தொல். திருமாவளவனை சந்தித்தபோது மு.க.ஸ்டாலின், ‘எப்படி இருக்கீங்க? நலமா?’ என்று கேட்க, ‘நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா நலமா?’ என்றார் திருமாவளவன்.இப்படிப்பட்ட நல விசாரிப்புகளுக்குப் பிறகு விவசாயிகள் பிரச்னைகள் குறித்துப் பேச தொடங்கினர். விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களின் தேவைகள், பிரச்னைகள் குறித்துப் பகிர்ந்தனர்.

"நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளையொட்டி கடந்த 34 நாட்களாக, டெல்லியில விவசாயிகள் போராடுறாங்க. பல போராட்ட வடிவங்களை கடந்து நிர்வாணமாகப் போராடியது நெஞ்சைக் கனக்கச் செய்தது. அவர்களை இந்த நிலைக்கு பி.ஜே.பி தள்ளிவிட்டது. இதுவரை பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்காமல் இருப்பது அவமானம் செய்வதாக இருக்கிறது’ என்றனர். "அவர் மட்டுமா பார்க்கல, நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தான் விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை." என்ற குரல் வெளிப்பட்டது மற்றொரு தரப்பிலிருந்து.

"விவசாயிகளின் பிரச்னைகள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு ஆர்வமில்லை என்பதால்தான் உண்மையான அக்கறையுள்ள நாமெல்லாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்" என்றார் மு.க.ஸ்டாலின். "விவசாயிகள் பிரச்னைகளுக்காக நாம் முழு வேலை நிறுத்தம் செய்யலாம்" என்று கருத்து வெளிப்பட, எந்த நாளை தேர்வு செய்யலாம்? என்று அலசினர். 22 ம் தேதியை மற்ற கட்சிகள் தேர்வு செய்தனர். ஏறக்குறைய அந்த நாள் முடிவாகும் தருணத்தில், திடீரென யோசித்த மு.க ஸ்டாலின், "அந்தநாள் வேண்டாம். அது சனிக்கிழமை. எனவே பெரும்பாலான துறைகள் விடுமுறை விட்டிருக்கும். எனவே நம் எதிர்ப்பை வேலை நாட்களில் அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும்" என்றார். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு , திங்கள்கிழமை 24 தேதியை முடிவு செய்தனர். "வேண்டாம். முகூர்த்த நாள் அது. திருமண நிகழ்வுகளுக்குச் செல்லும் மக்களுக்கு இடையூறாக இருக்கும்"என்ற மு.க.ஸ்டாலின், 25 ம் தேதி செவ்வாய்க்கிழமையை கூற, இதை அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். விவசாயிகள் பிரச்னைகள் கடந்து பல்வேறு பிரச்னைகள் குறித்தும் தலைவர்கள் அலச, இரண்டு மணி நேரம் நடந்த கூட்டம் முடிவுக்கு வந்தது.

ஸ்டாலின் மற்றும் திருமாவளவன்

விவசாயிகளும், அனைத்துக் கட்சி பிரமுகர்களும் பிரதமர் மோடியை சந்திப்பது, காவிரி நீர் ஒழுங்காற்று குழு உடனே உருவாக்கப்பட வேண்டும், விவசாயக் கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிரெதிர் முகாம்ங்களில் இருந்த பல கட்சிகளும், இன்று விவசாய பிரச்னையை ஒட்டி ஒன்று சேர்ந்துள்ளது எதிர்காலக் கூட்டணிக்கான அச்சாரம் என்று பேசப்பட்டது. இது தலைவர்களிடம் கேள்வியாகவும் பத்திரிகையாளர்கள் எழுப்ப, "விவசாயிகள் நலன் காக்கவும், தமிழர்கள் நலன் காக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு அடைப்பின் தேவை குறித்து மக்களிடையே விளக்க ஏப்ரல் 22-ம் தேதி அனைத்துக் கட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். அரசியலுக்காக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளுக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது" என்றார் மு.க.ஸ்டாலின். திருமாவளவனோ, "இது விவசாயிகளுக்காக இணைந்த கூட்டம். தேர்தல் அரசியலை இதில் இணைத்து பேசவேண்டாமே" என்றார்.

தலைவர்கள் இவ்வாறு கூறினாலும், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு, முழு மதுவிலக்கு போன்ற பிரச்னைகளுக்கும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஒட்டுமொத்த மாநில பிரச்னைகள் குறித்தும் பேசியுள்ளனர். இதற்கு, சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடன்பட்டதே ஹைலைட். மேலும் கூட்டம் முடிந்து வெளியேறியபோது காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுவிடமும் கூட்டணி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் நீண்ட பதிலின் இறுதியில் என்ன சொன்னார் தெரியுமா? கூட்டணிக்கு காலமிருக்கே என்றதுதான். அவரின் அந்தப் புன்னகையும், பதிலும் கூட்டணிக்கான பீடிகையாகத் தோன்றவில்லையா?!’ என்கின்றனர் குழுமியிருந்த தொண்டர்கள்.

தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாகவே இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. 

-சே.த.இளங்கோவன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement