இரு அணிகள்... ரகசிய சந்திப்பு... பேச்சுவார்த்தை! இணைகிறதா அதிமுக..?

சசிகலா-ஓ.பி.எஸ் பிரிவுக்குப் பிறகு, இரு அணிகளாய்ப் பிளவுபட்ட அ.தி.மு.க, மீண்டும் இணையும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு அணிகளின் முக்கியத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரத்தைச் செலுத்த முயன்றார், சசிகலா. இதனால், ஓ.பன்னீர் செல்வத்தின் முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளாய் உடைந்தது அ.தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் நகர, பெரும்பான்மையான எம்எல்ஏ-க்கள் சசிகலா தரப்பிடம் சரணடைந்தனர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளாகப் பிரிந்து நின்றனர். வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகக் கூறி, இடைத்தேர்தலைத் தள்ளிவைத்தது, தேர்தல் ஆணையம். இப்படித் தொடர்ந்து அ.தி.மு.க-வில் நடக்கும் குழப்படிகளால், கழகத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவதாக அ.தி.மு.க-வினர் உணரத்தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, சசிகலா குடும்பத்தாரை ஓரம்கட்டிவிட்டு, பழைய அ.தி.மு.க-வாகவே திரும்பி வர, 'ரத்தத்தின் ரத்தங்கள்' விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அ.தி.மு.க (அம்மா) அணி தரப்பில் முக்கிய அமைச்சர்கள், ஓ.பி.எஸ் அணியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினகரன் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனுக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்பினாலும், கொங்குப் பகுதியின் எண்ணங்கள் அவருக்கு எதிராகவே இருந்துவருகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் இரு அணிகளும் விரைவில் இணைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் பட்சத்தில், ஓ.பி.எஸ் கழகப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க-வில் பல அதிரடி மாற்றங்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன என, கழகத்தினர் தரப்பு தெரிவிக்கிறது. மேலும், தற்போது ஓ.பி.எஸ் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!