வெளியிடப்பட்ட நேரம்: 02:25 (17/04/2017)

கடைசி தொடர்பு:10:34 (18/04/2017)

“பன்னீருடன் பேசிய கொங்கு அமைச்சர்”- முடிவுக்கு வரும் 3 மாத பிரிவு!

மூன்று மாதங்களை தொட்ட அ.தி.மு.க.வின் பிரிவுக்கு முடிவுரை எழுதப்படுகிறது. பன்னீருடன்  கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவினால் கட்சியின் சின்னம் பறிபோய் கட்சியின் எதிர்காலமே கேள்விகுறியாகியுள்ளது. சசிகலா உறவுகள் அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் இருக்கும் வரை நாங்கள் கட்சி மீதும் ஆட்சி மீதும் கனைகளை தொடுக்காமல் விடமாட்டோம் என்று பி.ஜே.பி தரப்பு திட்டவட்டமாக அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகிகளிடம் தகவலை கசியவிட்டுவிட்டது. மத்திய அரசு சொன்னது போலவே செய்து காட்டவும் ஆரம்பித்தது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து, விஜயபாஸ்கர் வீடு ரெய்டு, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து என்று அ.தி.மு.க.வுக்கு ஆட்டம் காட்டி தற்காலிகமாக ஆட்டத்தை நிறுத்தியுள்ளது.

 

 

 

மத்திய அரசு, ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளது. அதில் “அ.தி.மு.க என்ற கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்றால் தினகரனை கழற்றிவிடுங்கள். ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து செயல்படுங்கள். அப்போது தான் கட்சியும் காப்பாற்றப்படும், ஆட்சியும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்” என்று ஓபனாகவே சொல்லபட்டது. இந்தத் தகவல் தினகரன் காதுக்கும் எட்டியுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் தினகரன் வீட்டுக்குச் சென்று “நீங்கள் இருப்பது தான் பிரச்னையாகின்றது. முதலில் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுங்கள். நீங்கள் தற்காலிகமாகவது ஒதுங்கியிருங்கள். உங்களை பொறுப்பில் வைத்திருப்பதால் தான் மத்திய அரசு கட்சியையும் ஆட்சியையும் காலி செய்யப்பார்க்கின்றது” என ஓபனாக எகிறி உள்ளார். அப்போது தினகரன் டென்ஷனாகி, “நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்” என்று சொன்னதும், கடுப்பில் வெளியே வந்துள்ளார் அந்த அமைச்சர்.

தினகரன் வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன் தம்பிதுரையுடன் சென்றனர் முக்கிய அமைச்சர்கள் சிலர். தினகரன் வீட்டில் விஜயபாஸ்கர் விவகாரம் குறித்தும், மத்திய அரசின் நெருக்கடி குறித்தும் அப்போது விவாதிக்கபட்டுள்ளது. விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து துாக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் சொன்னதும் முகம் சிவந்த தினகரன், அதெல்லாம் வேண்டாம் என்று முரண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு தான் கொங்கு மண்டல அமைச்சர்கள் ஒரு குழுவாக ஆலோசனை செய்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி அனுமதியோடு தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில், “கட்சியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி வந்துவிட்டது. மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. பன்னீர் அண்ணன் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. சசிகலா குடும்பத்தின் தலையீடு இனியும் இருந்தால் ஆட்சிக்கும் ஆபத்து வந்துவிடும். அவர்களாக ஒதுங்க மாட்டார்கள், இனி நாம் தான் ஒதுக்க வேண்டும். நாம் அவர்கள் பக்கம் இருந்தால் தான் ஆட்சியும் கட்சியும் அவர்கள் பக்கம் இருக்கும். நாம் விலகிவிட்டால் நடப்பது என்ன என்று அவர்களுக்கும் தெரியும். நமக்கு இருக்கும் ஓரே வழி பன்னீர் அணியும் நாமும் இணைந்து செயல்படுவது தான்” என்று பேசியதும், அந்த பேச்சிக்கு எதிர் கருத்துகளே இல்லையாம். 

இந்த ஆலோசனை தகவல் பன்னீர் தரப்பை சென்றைடைந்ததும், பன்னீர் தரப்பில் இருந்தே இரண்டு அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். அப்போது, “அண்ணன் சொன்னால் இனி நாங்கள் காரியத்தில் இறங்கத் தயார்” என்று அமைச்சர்கள் சொல்லியுள்ளார்கள். இந்தத் தகவல் பன்னீருக்கு சொல்லபட்டதும், ஞாயற்றுக்கிழமை மாலை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சரோடு பன்னீர் தொடர்பு கொண்டார். பன்னீரிடம் அந்த அமைச்சர், “நானும் மற்றொரு அமைச்சரும் முதலில் உங்கள் பக்கம் வருகிறோம். மேலும் பத்து எம்.எல்.ஏக்களையும் கூட்டி வருகிறோம். இரண்டே நாள்களில் ஒட்டு மொத்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உங்கள் பக்கம் வருவார்கள். முதல்வர் பதவி, கட்சி பதவி குறித்து நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று சொன்னதும் பன்னீர் தரப்பும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது, வெளிமாவட்டத்தில் இருக்கும் அந்த இரண்டு அமைச்சர்கள் மேலும் சில அமைச்சர்களிடமும் எம்.எல்.ஏக்களிடமும் பேசி வருகிறார்கள். கட்சியை பன்னீர் தலைமையில் ஒன்றிணைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். இல்லையென்றால் மத்திய அரசு கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று பேசியுள்ளார். அனைத்து இடங்களிலும் கிரீன் சிக்னல் வந்துவிட்டதால், அடுத்த சில நாள்களில் பன்னீர்செல்வம் வீட்டுக்கு அமைச்சர்களின் படையெடுப்புகள் ஆரம்பமாக உள்ளன. 

அமைச்சர் தன்னுடன் பேசியதை பன்னீர் அணியின் முக்கிய நிர்வாகிகள் உறுதி செய்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பன்னீர்செல்வம் வீட்டில் இது குறித்த தீவிர ஆலோசனை நடைபெற்றுள்ளது. எந்த நேரத்திலும் இரண்டு அமைச்சர்கள் பன்னீரை வந்து சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. மூன்று மாத போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டதாக அ.தி.மு.க அம்மா அணியினர் உறுதி செய்கின்றார்கள். அதோடு சசிகலா குடும்பம்  இல்லாத அ.தி.மு.க விரைவில் செயல்பட போகிறது என்ற ஒரே அஜெண்டாவை தான் இரண்டு அணியிலும் உள்ள நிர்வாகிகளும்  ஓபனாக சொல்லியுள்ளார்கள். 

“சித்திரை பிறப்பு சிறப்பாக இருக்கிறது ” என்கிறார்கள் பன்னீர் அணியினர் உற்சாகமாக!

-அ.சையது அபுதாஹிர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்