சசிகலா நம்பும் நபர்கள் இவர்கள்தாம்! டெல்லியில் கொந்தளித்த பன்னீர்செல்வம் அணி!

'சசிகலாவும்  டி.டி.வி.தினகரனும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர்கள்' என்று கூறிய பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்பி., கேசி பழனிச்சாமி, புரோக்கர்கள் மூலமாகவே எதையும் சாதித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

டெல்லியில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் இன்று அளித்த பேட்டியில், "இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த சசிகலாவும்  தினகரனும், மிகப்பெரிய தலைகுனிவை தமிழகத்துக்கு ஏற்படுத்தியுள்ளனர். இந்திய ஜனநாயக நடைமுறைக்கே மிகப்பெரிய சவாலை இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின்போது அனைத்து வாக்காளர்களுக்கும் பணப்பட்டுவாடாசெய்து, அதன்மூலமாக வெற்றிபெற வேண்டும் என முயற்சி செய்தார்கள். இன்றைக்கு, தேர்தல் ஆணையத்தின் மீதே பழி சுமத்துகிற வகையில் அவர்களது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சசிகலா குடும்பத்தைப் பற்றி அறிந்த அ.தி.மு.க-வினருக்கு நன்கு தெரியும். அந்தக் குடும்பத்தினரால் இந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதுதான் அவர்களது இயங்கும் விதம். அவர்கள் எந்த விஷயத்தைச் செய்தாலும் நேர்மையற்ற முறையிலேயே செய்வார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. நிச்சயமாக, புலன் விசாரணை செய்யக்கூடிய அதிகாரிகளும், விஜிலென்ஸ் அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும் சசிகலா, தினகரன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்பாேதாவது அவர்களை நம்பிக்கொண்டிருக்கிற, மீதியிருக்கிற அ.தி.மு.க-வைச் சார்ந்தவர்கள், அவர்களோடு தொடர்ந்து இருப்பது களங்கத்தை உண்டாக்கும். அவர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சசிகலாவும்  டி.டி.வி.தினகரனும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர்கள். மக்கள் மீதும், அ.தி.மு.க தொண்டர்கள் மீதும் நம்பிக்கையில்லாதவர்கள். புரோக்கர்கள் மூலமாகவே எதையும் சாதித்துவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிச்சயமாக தமிழக மக்களும், அ.தி.மு.க தொண்டர்களும் அவர்களுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள்" என்று கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!